+2 கணக்குப் பதிவியலில் சென்டம் வாங்க டிப்ஸ்



‘‘வெறும் மனப்பாடமாக மட்டும் இல்லாமல், மாணவர்களின் சிந்தனைத் திறனைத் தூண்டி சுயமாக செயல்பட வைக்கும் பிரிவு கணக்குப் பதிவியல். மிகச்சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தரும் இந்தப் பாடம், பெரும்பாலான மாணவர்களுக்குக் கசப்பானதாகவே இருக்கிறது. உண்மையில் சற்று கூடுதல் கவனத்தோடு முயன்றால் இப்பாடத்தில் மிக எளிதாக முழு மதிப்பெண்களை அள்ள முடியும்...’’ என்கிறார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல் ஆசிரியர் V.எழிலன்.

சென்டம் வாங்க அவர் தரும் ஆலோசனைகள்...

கணக்குப் பதிவியல் பாடத்தைப் பொறுத்த வரையில், அடிப்படை விதிகளைத் தெளிவாக தெரிந்திருந்து சற்றே கூடுதல் கவனம் செலுத்தினால் முழுமையாக 200க்கு 200 மதிப்பெண்களைப் பெற முடியும். இதில் கணக்கு சார்ந்த வினாக்கள் மற்றும் கோட்பாடு சார்ந்த வினாக்கள் என இரு வகைகளில் வினாக்கள் கேட்கப்படுகின்றன. கணக்கு சார்ந்த வினாக்கள் எழுதும்பொழுது கூட்டல், கழித்தல் போன்றவற்றைத் தனியாக ஒரு தாளில் போட்டுப் பார்த்த பின்னரே அடித்தல், திருத்தல் இல்லாமல் தெளிவாக விடைத்தாளில் எழுத வேண்டும். மேலே எழுத வேண்டிய அனைத்து தலைப்புகளையும் தெளிவாக எழுதி அதன்படியே பதிவுகளும் செய்தல் வேண்டும். முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை முழுமையாகப் பயிற்சி செய்வதன் மூலம் வினாக்கள் எவ்வாறு கேட்கப்படுகின்றன என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதன்மூலம் தேர்வறையில் பதற்றம் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளலாம்.

கோட்பாடு சார்ந்த வினாக்களை எழுதும்போது பத்தி பத்தியாக எழுதாமல், தேவையான கருத்துக்களை வரிசைப்படுத்தி ஒன்றன்கீழ் ஒன்றாக அழகாகவும், தெளிவாகவும் எழுதவேண்டும். ஒரு மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 30 கேட்கப்படும் (கேள்வி எண் 1 முதல் 30 வரை). இவற்றில் 80 முதல் 90 சதவீத வினாக்கள் புத்தகத்தின் பின்னால் உள்ள வினாக்களிலிருந்தே கேட்கப்படும். மீதமுள்ள 10 முதல் 20 சதவீத வினாக்கள் பாடங்களின் உள்ளிருந்து கேட்கப்படும். எனவே புத்தகத்தை முக்கியமான இடங்களில் கோடிட்டுப் படித்தால் முழு மதிப்பெண்களை எளிதாகப் பெறலாம்.

5 மதிப்பெண் வினாக்களை பொறுத்த வரையில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஒரு கணக்கு மற்றும் ஒரு கோட்பாடு சார்ந்த வினா கேட்கப்படும் (கேள்வி எண் 31 முதல் 44 வரை). இதில் 14 வினாக்கள் கேட்கப்பட்டு 10க்கு விடையளிக்க வேண்டும். இந்த இதழில் தரப்பட்டுள்ள வினாக்களை முறையாகப் படித்து, பயிற்சி செய்தால் 10 வினாக்களுக்கு சுலபமாக விடையளிக்கலாம். 12 மதிப்பெண் பகுதியில் 5 கணக்கு சார்ந்த வினாக்களும் 3 கோட்பாடு சார்ந்த வினாக்களும் கேட்கப்படும் (கேள்வி எண் 45 முதல் 52 வரை). கோட்பாடு சார்ந்த வினாக்களுக்கும் முழு மதிப்பெண் பெறலாம். அக்கறையோடு பயிற்சி செய்தால் இந்தப் பகுதியில் முழு மதிப்பெண் பெற்று விடலாம்.

இதில் 45வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும். இதில் பெரும்பாலும் பாடம் 1 இறுதிக் கணக்குகளிலிருந்து ஒரு கணக்கும் (அல்லது) பாடம்-2 ஒற்றைப் பதிவு முறையிலிருந்து ஒரு கணக்கும் கேட்கப்படும். இந்த இரண்டு கணக்குகளில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளிக்க வேண்டும். 20 மதிப்பெண் பகுதியில் 5 வினாக்கள் கேட்கப்படும் (கேள்வி எண் 53 முதல் 57). அனைத்தும் கணக்கு சார்ந்த வினாக்கள்தான். இந்தப் பகுதியைப் பொறுத்தவரையில் பாடம்-1 (இறுதிக் கணக்குகள்), பாடம்-2 (ஒற்றைப் பதிவு முறை), பாடம்-5 (ரொக்கத் திட்டப் பட்டியல்) போன்ற பாடங்களின் கணக்குகளைத் திரும்பத் திரும்ப தெளிவாகப் பயிற்சி செய்தால், முழு மதிப்பெண் பெற முடியும்.

இதில் 53வது கேள்வி கட்டாயம் விடையளிக்க வேண்டிய கேள்வியாகும். ஒற்றைப் பதிவு முறையிலிருந்து ஒரு கணக்கும் அல்லது கூட்டாளி சேர்ப்பு - விலகல் பாடத்தில் இருந்து ஒரு கணக்கும் கேட்கப்படும். இதில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளித்தால் போதுமானது. 54வது கேள்வி, இறுதிக் கணக்குகள் அல்லது ஒற்றைப் பதிவு முறை பாடங்களிலிருந்து கேட்கப்படும். 55வது கேள்வியாக விகித ஆய்வு பாடத்திலிருந்து ஏதேனும் 4 விகிதங்கள் கேட்கலாம். பெரும்பாலும் லாபத்தன்மை விகிதங்களும் அல்லது நீர்மை விகிதத்துடன் ஏதேனும் இரண்டு செயல்பாட்டு விகிதங்கள் அல்லது இரண்டு வகையுடைமை விகிதங்கள் கேட்கப்படலாம்.

56வது கேள்வியாக, ரொக்கத் திட்டப் பட்டியலில் இருந்து ஒரு கணக்கு சார்ந்த வினா கேட்கப்படும். 57வது கேள்வியாக நிறுமக் கணக்கிலிருந்து ஒரு வினா கேட்கப்படும். பாடம்-1 இறுதிக் கணக்குகள், பாடம் - 2 ஒற்றைப் பதிவு முறை, பாடம்-5 ரொக்கத் திட்டப் பட்டியல் ஆகிய இந்த மூன்று பாடங்களில் உள்ள 20 மதிப்பெண் வினாக்களை முழுமையாகவும், தெளிவாகவும் பயிற்சி செய்தால் பொதுத்தேர்வு வினாத்தாளில் உள்ள 20 மதிப்பெண் வினாக்கள் மூன்றுக்கு சிறப்பாக விடையளிக்க முடியும். கணக்குப் பதிவியலைப் பொறுத்தவரை நேர மேலாண்மை மிகவும் முக்கியம். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளிக்க 25 நிமிடங்களும், 5 மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளிக்க 45 நிமிடங்களும், 12 மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளிக்க 50 நிமிடங்களும், 20 மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளிக்க 60 நிமிடங்களும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆசிரியர் v.எழிலன் வழங்கும் வினாத்
தொகுப்பு அடுத்த பக்கம்...