TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!



போட்டித் தேர்வு டிப்ஸ்

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் பல பிரிவு களிலான பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைப் பலரும் தொடர்ந்து எழுதிவருகின்றனர். அவர்களுக்கு வழிகாட்டும் இந்தப் பகுதியில், பொருளாதாரம், அரசியல், சமூகவியல் எனப் பல பகுதிகளைப் பார்த்தோம். சமீப காலங்களாக இந்திய அரசியல் அமைப்பு பற்றி பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக சில தகவல்களை இனி பார்ப்போம்.

அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் (பகுதி VI விதிகள் 36 to 51 )அரசியலமைப்பில் 16 விதிகளில் விளக்கப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகள். (விதி 36 to 51 ). அரசு சட்டங்களை இயற்றும்போது மனத்தில் கொள்ள வேண்டிய 19 பொதுநல நோக்கங்களே வழிகாட்டும் நெறிமுறைகள். இவற்றை அரசியல் சட்டத்தின் மனசாட்சி என்பர்.

இவற்றின் நோக்கம் மக்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல் நீதிகள் கிடைக்கச் செய்தல்.
குடிமகனின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டால் அவ்வுரிமையைக் காக்க நீதிமன்றம் செயல்படும். வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு நீதிமன்றம் காப்பளிக்காது.(எ.கா.) பொதுச்சுகாதாரத்தைப் பேணவில்லை என்று நீதிமன்றத்தில் முறையிட முடியாது.

அடிப்படைக் கடமைகள் (பகுதி IV - விதி 51-A)

* ரஷ்யாவைப் பின்பற்றிச் சேர்க்கப்பட்ட பகுதி இது. ஸ்வரண்சிங் கமிட்டியின் பரிந்துரைப்படி சேர்க்கப்பட்டுள்ளது.
* 42வது திருத்தத்தின் மூலம் வகுக்கப்பட்ட அடிப்படைக் கடமைகள் பத்து.
* 2002- 86-வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது 11-வது கடமை (அனைவருக்கும் ஆரம்பக் கல்வி)
அரசியல் சட்டத் திருத்தங்கள் (பகுதி XXIII விதிகள் 368)
* அரசியல் சட்டத் திருத்தத்தைத் தொடங்கும் அதிகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் உண்டு.
* அரசியல் சட்டத்திருத்தம் பற்றிய பொதுவிதி உள்ள பிரிவு 368.     
   
திருத்தத்தில் உள்ள வகைகள் மூன்றுமுதல் வகை - திருத்தத்திற்கு தேவையானது பாராளுமன்றத்தின் சாதாரண மெஜாரிட்டி (வாக்களித்த எம்.பி-க்களில் 51% ஆதரவு). அதற்கு உ.ம். - ஜனாதிபதி, நீதிபதிகள் முதலியவர்களின் சம்பளத்திருத்தம். புதிய மாநிலங்களை உருவாக்குதல், மாநிலங்களின் பெயரை மாற்றுதல், மாநில எல்லைகளை மாற்றியமைத்தல், மாநிலங்களில்  மேலவை ஒழிப்பு அல்லது உருவாக்கம், குடியுரிமை விதிகள் பற்றிய விதிகள் முதலியன.

இரண்டாவது வகை - திருத்தங்களுக்குப் பாராளுமன்றத்தில் 2/3 மெஜாரிட்டி தேவைப்படுபவை. இத்தகைய திருத்தங்கள் சற்று முக்கியமானவை.
மூன்றாவது வகை - திருத்தங்களுக்கு பாராளுமன்றத்தில் 2/3 மெஜாரிட்டி தவிர 51% மாநில சட்டமன்றங்களின் (கீழ் சபை
களின்) ஆதரவும் தேவை. அதன் பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்.

இந்த வகை திருத்தங்கள்

1) ஜனாதிபதி தேர்தல் முறை
2) மத்திய, மாநில காபினெட்களின் (மந்திரி சபைகளின்) அதிகாரங்கள்
3) உச்ச நீதிமன்ற அமைப்பு, மாநில உயர் நீதிமன்றங்களின் உருவாக்கமும், அதிகாரங்களும்
4) மத்திய-மாநில சட்டசபை உறவுகள் (அதிகார வரம்புப் பட்டியல்கள்)

இந்த 3வது வகை திருத்த முறை ஆரம்பம் முதல் இருந்ததல்ல. 1971-ல் செய்யப்பட்ட 24 வது திருத்தத்தில் வந்தது. மேற்படி அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய மூலப் பிரிவையே திருத்தியது இந்த 24வது திருத்தம்.24வது திருத்தத்தின் மிக முக்கிய அம்சம் அடிப்படை உரிமைகள் கூட பாராளுமன்றத்தினரால் திருத்தப்படலாம் என்பதுதான்.

முதல் திருத்தம்

முதல் அரசியல் சட்டத் திருத்தம் இயற்றப்பட்டது 1951-ல். முதல் திருத்தத்தின் முக்கிய அம்சங்கள் நான்கு. அவற்றுள் முக்கியமானவை பிற்பட்ட வகுப்பினர், மலைச்சாதியினருக்குச் சிறப்புச் சலுகைகள் (இட ஒதுக்கீடு, நிலச் சீர்திருத்தங்கள்).
ஏழாவது  திருத்தம்

மொழிவாரி  மாநிலங்கள் ஏற்பட வகை செய்தது ஏழாவது திருத்தம். அது இயற்றப்பட்ட ஆண்டு 1956. அதன்படி உருவான மாநிலங்கள் 14, யூனியன் பிரதேசங்கள் 6.தற்போது உள்ள மாநிலங்கள் பெரும் பாலும் மொழிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டவை.

42வது திருத்தம் (1976)

1976-ல் நெருக்கடி நிலைக் காலத்தில் இயற்றப்பட்டது.
அரசியல் சட்டத்தின் அடிப்படைப் பண்புகளையே மாற்றிய சில திருத்தங்கள்.

அ)அரசியலமைப்பின் முகப்புரையில் கூடுதல் வாசகங்கள். (சோஷலிசம், சமய-சார்பின்மை, ஒருமைப்பாடு)ஆ)அடிப்படைக் கடமைகள் என்று புதிய பகுதி.
இ) குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்பது கட்டாயம் என்று கூறி பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள்.
ஈ) பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் பறிக்கப்பட்டது.
உ)அடிப்படை உரிமைகளை விட வழிகாட்டி நெறிகளுக்கு முக்கியத்துவம்.
ஊ)மத்திய, மாநில சட்டமன்றங்களின் ஆயுள் 6 ஆண்டு.

44வது திருத்தம் (1978)

* 42வது திருத்தத்தின் பல பகுதிகளை நீக்கிப் பழைய நிலையை மீட்டது, 44வது திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்.
* சட்டங்களை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யலாம்.
* மசோதாவை மந்திரி சபையின் மறுபரிசீலனைக்கு ஜனாதிபதி அனுப்பலாம்.
* 352வது ஷரத்து நெருக்கடி நிலைக்கு புதிய நிபந்தனை. ‘ஆயுதம் தாங்கிய கலவரம்’(Note: ‘வெறும் உள்நாட்டுக் கலவரம்’ என்பது நெருக்கடி நிலைப் பிரகடனத்திற்கு போதிய காரணம் ஆகாது. ‘ஆயுதக் கலவரம்’என்றால் தான் நெருக்கடி நிலை அறிவிக்க முடியும்)
* மத்திய, மாநில சட்டமன்ற ஆயுள் பழையபடி 5 ஆண்டுகளாக மாற்றப்பட்டது.
* அடிப்படை உரிமைகளே வழிகாட்டி நெறிகளை விட உயர்ந்தவை.
* சொத்துரிமை என்பது அடிப்படை
உரிமைப் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான பல தகவல்களை இதுவரை பார்த்துவிட்டோம். அடுத்த இதழில் இருந்து அறிவியல் பாடப்பகுதியில் இருந்து போட்டித்தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்களைப் பார்ப்போம்.                                      

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்