ஊற்று மணல் 05



Chimil magazine, Chimil weekly magazine, Tamil Magazine Chimil, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                  சங்கரி முத்துசாமியைப் பார்த்ததும் எழுந்து உட்கார முயற்சி செய்தாள்.

முத்துசாமி சைகையாலேயே எழுந்திருக்க வேண்டாம் எனச் சொன்னார்.

“தங்கையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். வாடிய வெற்றிலைப் போல் சுருண்டு படத்துக் கிடந்தாள் சங்கரி. அவள் ஆடைகள் கசங்கியிருந்தன. கண்களில் நிரந்தர சோகம். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கண்களுக்கு மை தீட்டாமல் இருக்கமாட்டாள் சங்கரி. தங்கைக்கு அழகான வட்ட முகம், பூவும் பொட்டுமாய் பளிச்சென்று இருப்பாள். அப்பொழுதுதான் குளித்து வந்தது போல் எப்போதும் அழகாய் காணப்படுவாள். பளிச்சென்ற முகம். அத்தான் இறந்த பிறகு கருப்புச் சாந்து. களையிழந்து போனாள்.

அத்தானின் மறைவுக்குப் பிறகு தொடர் சோதனைகள் பெண்கள் இருவருமே அம்மாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டார்கள்.

உறவினர்கள் வீட்டிற்குப் போகக்கூடத் தடை.

கோமதி மாத்திரைகள் வாங்க சென்றிருந்தாள். நீலா மாமாவைப் பார்த்து ஒப்புக்கு வரவேற்று விட்டு, வேலை இருக்கிறது என்று கூறி வெளியே சென்றுவிட்டாள்.

“பாப்பா...” தங்கை சங்கரியை அவர் அப்படித்தான் அழைப்பார்.

சங்கரி நிமிர்ந்து பார்த்தாள்.

“உடம்பு முடியாமல் போனதைக் கூட சொல்லலியே. நான் வேற ஒருத்தர் மூலமா... கேள்விப்பட்டுத்தான் புறப்பட்டு வந்தேன்.”

“மதினி நல்லாயிருக்காங்களா?” சங்கரி பேச்சை மாற்றினாள்.

முத்துசாமி மேற்கொண்டு அதுபற்றிப் பேசவில்லை.

“நம்ம வீட்டுல யாருடைய சம்மதத்தையும் கேட்காமலே... தன்னிசையா... அவரோட ரெண்டாங் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். அன்னைக்கே என் தலையில் நானே மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டேன்.”

“பாப்பா... பழைய கதையெல்லாம் இப்ப எதுக்கு? இப்போதைக்கு நீ உடம்பு குணமாகி எழுந்து நடமாடினா போதும்.”

“அந்த நம்பிக்கை எனக்கு இல்லே. கால் வீக்கம் குறையவேயில்லை. சாப்பாடு ஒத்துக்கமாட்டேங்குது. கஞ்சிதான் குடிக்கிறேன்” பேசமுடியாமல் மூச்சு வாங்கியது...

“நான் டாக்டரைப் பார்க்கிறேன். இங்கே முடியலேனா மதுரைக்குப் போகலாம்.”

“அண்ணே... நான் திருவாரூரவிட்டு எங்கேயும் வரமாட்டேன்.” பிடிவாதக்குரல். அது சங்கரிக்கே உரிய குணம்.

“பாப்பா... இன்றும் உன் பிடிவாதம் மாறலியே... முத்துச்சாமி வருத்தப்பட்டான்.

“எப்படி அண்ணா மாறும்? உங்க தங்கைதானே?”

இவள் என்ன சொல்கிறாள்.

“அத்தான் மூன்றுமுறை உடம்பு முடியாமல் படுத்து எழுந்தார். நானும் உங்களுக்குத் தகவல் கொடுத்துப் பார்த்தேன். யாருமே வரலியே? அவர் செத்ததுக்குத்தான் வந்தீங்க?”

“பாப்பா... அவர் உனக்கு பண்ண துரோகத்த நினைச்சு நினைச்சு. நாங்க எல்லாம் மனத்தளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டோம்.

“அது என் வாழ்க்கை... நானே இஷ்டப்பட்டுத்தானே அவளைக் கட்டிக்கச் சொன்னேன்.”

“அது உன் முட்டாள்தனம்.”

“முட்டாள்தனம் தான்...”

முத்துசாமி ஏதோ சொல்ல நினைத்தார். பேச்சை வளர்க்க வேண்டாம் என்று வாய்மூடி மௌனமாக இருந்தார்.

“அண்ணே... அத்தான் ரெண்டாங் கல்யாணத்தை தடுத்து நிறுத்தியிருந்தால்... தொடர் கஷ்டம் நம்ம குடும்பத்துக்கு தான் வந்திருக்கும்.”

“இது என்ன புதுக்கதை?” அவர் வேதனையுடன் தங்கையை நிமிர்ந்து பார்த்தார்.

“பாப்பா.. மூச்சுவாங்குது... போதும்... எல்லாம்தான் முடிஞ்சு போச்சே...”

“அண்ணே என் மன ஆதங்கத்தைச் சொல்ல இதைவிட்டால் வேற சந்தர்ப்பம் அமையாது. சொல்லித்தான் தீருவேன்.”

அவர் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

“நம்ம வீட்டுல அந்த சமயத்துல.. பொருளாதார நெருக்கடி. உங்களுக்கு வேலை கிடைக்கலே. அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமல் வைத்தியச் செலவு. அப்பாவுக்கோ சொற்ப சம்பளம். இந்தச் சூழ்நிலையில் நானும் வந்து வீட்டுல உட்கார்ந்துவிட்டால் அதைவிடக் கொடுமை எதுவுமே இருக்காது.”

தெரிந்தேதான்  கிணற்றில் விழுந்திருக்கிறாள். முத்துசாமி, ஈட்டி கொண்டு இதயத்தைக் குத்துவது போல் துடித்துப் போனார்.

முடிந்த கதையென்றாலும் - அதனால் ஏற்பட்ட சோகச் சுமையையோ - யார் சுமக்க முடியும்?

அவர் கண் கலங்கினார்.

“அண்ணா.. பழசெல்லாம் சொல்லி உங்களை நோகடிக்க நான் விரும்பலே. எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்.”

“என்ன பாப்பா? என்ன செய்யணும்?”

“அண்ணிதான் அடிக்கடி இங்க வந்து இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக்கணும். இவங்களுக்கு  வேற யாரும் இல்லே... இதுங்க போக்கும் சரியில்லே. அவங்க அப்பா  செய்யறதுதான் சரி என்கிற நிலையில் வளர்ந்துட்டாங்க. என்னை மதிக்கறதே இல்லை... அந்த அளவுக்கு உங்க அத்தான் அவங்க ரெண்டு பேர் மனசையும் மாத்தி வைச்சுட்டாரு.... அது என் தலைவிதி.”

“பாப்பா... இதையெல்லாம் நினைச்சுத்தான் நானும் உங்க அண்ணியும் திருவாரூர்க்கே வர்றதில்லை.”

ஒரு தடவை உன்னோட பெரிய மகள் கோமதி சொன்னாள்.

‘மாமா எங்க அப்பா இருக்குற அழக்கு.. ரெண்டு கல்யாணம் என்ன நாலு கல்யாணம் கூட பண்ணிக்கலாம்னு?’ செருப்பால் அடித்த மாதிரியிருந்தது. எந்த அளவுக்கு மூளைச்சலவை செய்து வைச்சிருந்தார். அந்த நிமிஷத்துலயிருந்து அத்தான் மேல இருந்த மதிப்பு மரியாத எல்லாம் போச்சு...”

“அண்ணா உன்னை மாதிரி என்னால உதற முடியாதே. என்ன பண்றது?” சங்கரி கண்கள் கலங்கின.

“பாப்பா.. எல்லாம்தான் போச்சு... கடைசி கடைசியா... பென்ஷன் பேப்பர்லேயும் நாமினியில அவள் பேரைத்தானே போட்டிருந்தாரு. அது தெரிந்த நாங்க டிரஷரிக்குப்போயி அப்புறம் ஏஇஸ் ஆபிஸ் போய் உன் பேருக்கு மாத்தறதுக்கு என்னபாடு பாட்டோம்னு தெரியுமா?”

“தெரியும் அண்ணா. இப்ப அவள் தன் பொண்ணோட மருமகனோட... அழகா... ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆயிட்டாள்.”

“பாப்பா... உடம்பு குணம் ஆன உடனே ஊர்ல வந்து ஒரு மாசம் ரெஸ்ட் எடு...”

“அண்ணா உனக்கு என் பொண்ணுகளைப் பற்றி நல்லாவே தெரியும். பெரியவள் நான் சொன்னால் சில விஷயங்கள்ல ஒத்துப்போவாள். ஆனால் சின்னவள் நான் இங்கேயேதான் இருக்கணும். எங்கேயும் யார் வீட்டுக்கும் போகக்கூடாதுன்னு கண்டிச்சு உத்தரவு போட்டுட்டான்.” நாத்தழுதழுக்கக் கூறினாள்.

“உன்னை கண்டிக்கறதுக்கு... இவள் யாரு? இவளுக்கு என்ன உரிமையிருக்கு?”

“மாசம் முப்பதாயிரம் கொண்டு வர்றாள். குடும்ப நிர்வாகத்தையே அவள்தான் பார்க்கிறாள். கோமதியோ வாய் பேசாமல்... அவள் போக்குப்படியே நடந்துக்கிறாள்.”

“பாப்பா.. நீலாவுக்கு நீ ரொம்ப இடம் குடுத்துட்டே.”

“எல்லாம் என் தலையெழுத்து... எனக்கும் உங்களையெல்லாம் வந்து பார்க்கணும்.. கொஞ்ச நாட்கள் உங்களோட இருக்கணும்னு ஆசைதான்... அதெல்லாம் வெறும் கனவுதான்.... அண்ணா என் வாழ்க்கை பூரா கனவுலேயே கழிஞ்சுடுச்சு... இன்னும் எத்தனை நாளோ...”

முத்துசாமி பதறிப் போனார்.

“அப்படியெல்லாம் பேசக் கூடாது. நாங்க எல்லாரும் இருக்கறோம்...” அவர் தங்கையின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறினார்.

“அண்ணா... பெரியவள் ரெண்டாந்தாரமா... யாரையாவது கட்டிக்கோன்னு சொன்னால்.... முடியாதுன்னு முரண்டு பண்றாள்.

சின்னவள் எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு ரொம்பப் பிடிவாதமாக.. எதிர்த்து நிற்கிறாள்.

“அதனால... என் காலத்துக்குப் பிறகு... அவங்க ரெண்டு பேருக்கும் நீங்களும் அண்ணியும்தான் வழிகாட்டணும். இதுதான் மறுபடி மறுபடி நான் உங்ககிட்ட வேண்டிக்கிறது” அவள் கைகூப்பி கண்களை நிமிர்த்தி முத்துசாமியை நோக்கி வேண்டுகோள் வைத்தாள்.

“சரி பாப்பா. அவங்க ரெண்டு பேரையும் நாங்க. நல்லாவே பார்த்துப்போம். முதல்ல உன் உடம்பு குணமாகட்டும். பணத்துக்காகக் கஷ்டப்படுவேன்னு நினைக்கிறேன். நான் ஒரு இருபதாயிரம் கொண்டு வந்திருக்கிறேன்”

முத்துசாமி ஹேன்ட்பேக்கிலிருந்து பணத்தை எடுத்தார்.

“வேண்டாங்க அண்ணே...” அவள் தீயை மிதித்தவள்போல் பதறினாள்.

’”பாப்பா...” முத்துசாமியின் முகம் சுருங்கிற்று.

“அண்ணே... நீலாவுக்குத் தெரிஞ்சால் என்னை வார்த்தையாலேயே கொண்ணுடுவாள். தயவு செய்து பணம் வேண்டாம் அண்ணே. என்னை  மன்னிச்சிடுங்க.” விழிகளில் கண்ணீர் கரை கட்டி நின்றது.

“சரி பாப்பா... நாங்க எல்லாரும் அன்னியமாகிப் போனோம்.” முத்துசாமி பெருமூச்சுவிட்டார்.

சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தன.

“என்னிக்குத் தேரோட்டம் பாப்பா?”

“நாளை மறுநாள்ன்னு சொன்னாங்க. ஒரு வருஷம்கூட நாங்க தேரோட்டம் பார்க்கத் தவறினதேயில்லை... திருவாரூர் தேரோட்டம் கண் கொள்ளாக் காட்சி.” சங்கரி முகத்தில் மெலிதான சந்தோஷம் தெரிந்தது.

முத்துசாமியும் அவரது மனைவியும் ஒவ்வொரு வருஷமும் தேரோட்டம் பார்க்க வரவேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால்  குடும்பக் குழப்பங்களை எண்ணி, அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிடுவார்.

இந்த வருஷம்தான் அவர் தேர் அலங்காரத்தை பார்க்க முடிந்தது. அழகுன்னா அப்படி ஒரு அழகு... கொள்ளை அழகு... நாளை மறுநாள் தியாகேசர் தேரில் கம்பீரமாய் அமர்ந்து பக்தர்களிடையே பவனிவரப் போகிறார்.

காட்சியை மனத்துக்குள் கண்டு ரசித்தார் முத்துசாமி.

“அண்ணா... என்ன யோசனை? ரெண்டு நாள் தங்கி தேரோட்டத்தைப் பார்த்துப் போங்க அண்ணா.”

“இல்லை பாப்பா... நான் ஊருக்கப் புறப்படறேன். முதல்ல உன் உடம்பு குணம் ஆகட்டும். நான் அடுத்த வாரம் உன் மதினியையும் அழைச்சுக்கிட்டு வாரேன்.”

“அண்ணா... கொஞ்சம் நேரம் உட்கார்ந்திரு. கோமதி வந்துடுவா. காப்பி வாங்கிட்டு வரச்சொல்றேன். நீலாவும் வந்துருவாள்.”

“நான் வாசல்ல காபி சாப்பிட்டுத்தான் வர்றேன். அதுசரி. கோபால் யாரு?”

“கோபாலா... அத்தான் ஆபீஸ்ல காண்ட்ராக்ட்ரா கூட வேலை பார்த்தவரோட நண்பரோட பையன். ரியல் எஸ்டேட்  பண்றார். நல்ல பையன்.”

“அப்படியா?”

“கதவு திறக்கும் ஓசை கேட்டது.

கோமதிதான் உள்ளே வந்தாள்.

வரும்போதே காபியுடன் வந்தாள்.

“மாமா காபி சாப்பிடுங்க...”

“உனக்கு எதுக்கும்மா சிரமம்.”

“மெடிக்கல்ல மாத்திரை வாங்கிட்டு அப்படியே கேண்டீன்ல காபி வாங்கிட்டு வந்தேன். ஒண்ணும் சிரமம் இல்லே!”

“நீலா எப்போ வருவாள்?” காபி குடித்துக் கொண்டே கேட்டார் முத்துசாமி.

“இப்போ வந்திடுவா மாமா...”

சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நீலா வந்தாள்.

“நீலா நான் கிளம்பறேன்... அப்புறம் உனக்கு எதுவும் பணம் தேவைப்படும்னா...” அவர் முடிக்கவில்லை.

“மாமா... பணம் வேண்டாம். நீங்க வந்ததே சந்தோஷம்”  அம்மாவைப் போலவே  பிடிவாதக்காரி.

முத்துசாமி தங்கையைப் பார்த்தார்.

தங்கையின் முகத்தைப் பார்த்தார். தங்கை கண்களாலேயே மன்னிப்பை வேண்டினாள்.

“சரி நான் கிளம்பறேன்.”

“அத்தையை கேட்டதாகச் சொல்லுங்க” பெண்கள் இருவரு ஒரே குரலில் சொன்னார்கள்.

“இன்னும் ரெண்டு நாள்ல அத்தையோட வர்றேன்.”

முத்துசாமி கனத்த இதயத்துடன் விடைபெற்றார்.