மூளையின் திறனை அதிகரிப்பது எப்படி?!



சயின்ஸ்

நீங்கள் என்பது உங்கள் மூளை என்றே சொல்லலாம். நீங்கள் யார் என்பதும், உங்கள் செயல்பாடும் மூளையைச் சார்ந்ததே. உடலின் உறுப்புகளை இயக்குவது, அவற்றைக் கட்டுப்படுத்துவது, சிந்தனை, திட்டமிடல், திட்டமிட்டதை செயல்படுத்துவது, உணர்வுகள், உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது, நினைவுத்திறன், உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை சுரக்கச்செய்வது போன்ற எண்ணற்ற பணிகளை மூளைதான் செய்கிறது.

இன்றைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஒருவருக்கு உடலில் எல்லா உறுப்புகளையும் மாற்றிவிட முடியும். ஆனால், மூளை மட்டும் மாற்ற முடியாத உறுப்பாகவே இருக்கிறது. அதற்கு பதிலும் முதல் சொன்னதுதான்.

நீங்கள் என்பதே உங்கள் மூளைதான். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வழிகள் என்ன? அதன் செயல்திறனை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதா?நரம்பியல் மருத்துவர் புவனேஸ்வரியிடம் கேட்டோம்...

‘‘மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, அதன் செயல்திறனை அதிகரிக்கும் வழிகள் பற்றித் தெரிந்துகொள்ளும் முன் நமது மூளையைப் பற்றிய அடிப்படையான விஷயங்களை நாம் தெரிந்துகொள்வது அவசியம்.திசுக்கள், செல்கள் மற்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய நிறைய சிக்கலான நரம்புகளால் உருவானது நம் மூளை. இந்த மூளையானது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. முன்பகுதி மூளை, நடுமூளை மற்றும் பின் மூளை.

எண்ணங்கள், முடிவு எடுப்பது, நினைவாற்றல், உணர்ச்சி மண்டலம், மோட்டார் பகுதிகளை கட்டுப்படுத்துவது போன்றவற்றை முன்பகுதி மூளை(Forebrain) செய்கிறது. பேசுவதற்கான பகுதியானது முன்பகுதி மூளையின் இடது பக்கத்தில் அமைந்துள்ளது.

இதில் வலது பக்க மூளையானது உடலின் இடதுபுறத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. மனிதனின் புத்திசாலித்தனம் மற்றும் அவனின் படிப்படியான ஆறாம் அறிவு பரிணாம வளர்ச்சிக்கு தக்கவாறு இந்த முன் மூளை தன்னை செயல்படுத்திக் கொள்கிறது.

நடுமூளையானது(Midbrain) மூளையின் பல்வேறு பகுதிகள் மற்றும் முதுகுத் தண்டுவடத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. இதை சுரப்பிகளின் புகலிடம் அதாவது சுரப்பிகளின் தாய் வீடு என்று சொல்லலாம். பல முக்கிய ஹார்மோன்கள் மற்றும் உடலில் உள்ள மற்ற ஹார்மோன்களான தைராய்டு சுரப்பி, சிறுநீரக சுரப்பி மற்றும் நமது பாலின ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துகிறது.

பின்மூளையானது(Hindbrain) நமது சுவாசித்தலைக் கட்டுப்படுத்தல், ரத்த அழுத்த பராமரிப்பு, இதய செயல்பாடு போன்ற முக்கியப் பணிகளைத் தீர்மானிக்கிறது’’ என்பவர், மூளையின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி என்பதைத் தொடர்ந்து விளக்குகிறார்.

‘‘நாம் நினைத்துப் பார்த்திராத சின்னச்சின்ன விஷயங்கள் கூட நம்முடைய மூளையின் திறனைத் தீர்மானிக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? குடும்பத்தில் அன்பு, ஆதரவு மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலையோடு இருக்கிறவர்களின் அறிவுத்திறன் அதிகமாக இருப்பதாகப் பல ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதேபோல கல்வி, வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை, சமூகத் தொடர்புகள் போன்றவையும் ஒருவருடைய மூளையின் செயல்பாட்டைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

உங்கள் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப சமச்சீரான உணவை எடுத்துக் கொண்டாலே மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் உங்கள் மூளையும் ஆரோக்கியமாக இருக்கும்.

நீங்கள் அன்றாடம் செய்யும் வழக்கமான உடற்பயிற்சியே மூளையின் திறனையும் மேம்படுத்தப் போதுமானதுதான். முக்கியமாக, உடல் உழைப்பு குறைந்த இந்த கால கட்டத்தில் எல்லோரும் அதிகாலையில் அதிகபட்சம் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது உங்கள் மூளையின் திறனை அதிகரிக்கச் செய்யும்.

இதேபோல், மூளையின் வளர்ச்சிக்குத் தூக்கம் மிகவும் முக்கியமானது. தூக்கம்தான் மூளையின் உயிரணுக்களின் வளர்ச்சிக்கும் மூளையின் நினைவுத்திறன் மேம்படுவதற்கும், புலனுணர்வு செயல்பாடுகளை அதிகரிக்கவும், மூளை தானாகவே புத்துணர்வு அடைவதற்கும் உதவுகிறது. சராசரியாக ஒருவர் நாள் ஒன்றுக்கு 7 மணிநேரம் தூங்குவது நல்லது. ஏனெனில், தூக்கம் மூளையின் வளர்ச்சிக்கும், மூளையின் செயல்பாட்டுக்கும் மிகவும் முக்கியமானது.

மேலும், அதிகாலையில் துயில் எழுவது, மது, புகை பழக்கம் இல்லாமல் இருப்பது, மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருப்பது, நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது, புத்தகம் வாசிப்பது போன்றவை உங்கள் மூளையை திறன்மிக்கதாக வைத்துக் கொள்ளும்.’’

- க.இளஞ்சேரன்

படம்: ஏ.டி.தமிழ்வாணன்.