உங்கள் தொழில் வளர்ச்சியைத் தூக்கி ஓரமாக வையுங்கள்



கவர் ஸ்டோரி

‘‘உலகத்தில் எல்லா உயிர்களுக்கும் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பது சூழலியல்தான். இந்த சூழலியல் கெட்டுப் போனால் உயிரினங்கள் வாழ்வதே கடினம். அதனால்தான் சூழலியல் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். அதிலும் தற்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்துமே தமிழகத்தினுடைய சுற்றுச்சூழலை முழுக்க கெடுக்கும் வண்ணமே இருக்கிறது’’ என்கிறார்
சுற்றுச்சூழல் ஆர்வலரான சுந்தராஜன்.

‘‘தமிழ்நாட்டில் ஏற்கெனவே இயங்கி வரும் பல தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் ஆகியவற்றுடன் தற்போது செயல்பாட்டுக்குத் தயாராகும் ஓ.என்.ஜி.சி கெயில், நியுட்ரினோ போன்றவையும் நேரடியாக இயற்கையின் வளத்தை அழித்து, மக்களை ஒழிக்க மேற்கொள்கிற திட்டங்களே என்பது என்னுடைய அழுத்தமான கருத்து.

ஏற்கெனவே தமிழகம் 30 சதவீதநிலம் விவசாயம் செய்ய முடியாத இடமாக மாறிவிட்டது. இதுபோன்ற வெற்றுக் கவர்ச்சியான, அபாயகரமான தொழில்களின் வளர்ச்சி மனிதர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையே சீர்குலைத்துவிடும். தமிழகத்தில் ஓடும் ஆறுகளும் குளிர்பான கம்பெனிகளாலும், சாயப்பட்டறைகளாலும், தொடர்ந்து நடக்கும் மணல் கொள்ளையாலும், தொழிற்சாலைகளாலும் மாசு அடைந்து கிடக்கிறது.

இதனால் ஆரோக்கியமான சூழல் கெட்டு எண்ணற்ற உடல் நோய் உபாதைகளுக்கு தினந்தோறும் மக்கள் ஆளாகி வருகிறார்கள். நோயாளிகளின் கூடாரமாக தமிழகம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது மிகையான வார்த்தைகள் இல்லை. இந்த அபாய சூழலின் தீவிரத்தை இப்போதாவது உணர்ந்து இயற்கை வளத்தை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. தமிழகம் ஒரு விவசாய பூமி. இங்கு
விவசாயம் குறித்து திட்டங்களை வகுப்பதுதான் நமக்கும் நல்லது; நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நல்லது.

மீத்தேன் போன்ற திட்டங்கள் மண்ணுக்குள் பல்லாயிரக்கணக்கான தொலைவு துளையிட்டு, மண்ணின் வளத்தை அழித்துதான் எடுக்கப்படுகிறது. இதனால் சூழலியல் பெரிதும் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் குறைவதுடன் மாசடைவதும் நிகழும். நியுட்ரினோ திட்டமும் இயற்கையை அழிக்கும் ஒரு திட்டமாகத்தான் பார்க்க வேண்டும். தேனி மாவட்டம் என்பது பல்லுயிர் வாழும் பகுதி என யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது. இத்தகைய நிலப்பரப்பை நியுட்ரினோ கண்டுபிடிப்புக்காக பாறைகளை பெருமளவு தோண்டும்போது அது பெருமளவு பாதிப்படையச் செய்யும்’’ என்றவரிடம், இதற்கு என்ன தீர்வு என்று கேட்டோம்….

‘‘காவிரி போன்ற விஷயங்களில் நம் உரிமையை நிலை நாட்டுவது முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளையில் நீர் மேலாண்மை பற்றிய புரிதல் நமக்கு வேண்டும். மழை நீரை சேகரித்து வைக்க ஏரி, குளங்களைத் தூர்வாரித் தயாராக வைத்திருப்பது, நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாப்பது, போதுமான அணைகள் கட்டி கடலில் தண்ணீர் வீணாகக் கலக்காமல் பாதுகாத்து வைப்பது, மரங்களை வளர்ப்பது போன்றவற்றில் அரசும், பொதுமக்களும் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில், இயற்கையும் விவசாயமும் அழிக்கப்படுவதின் விளைவாகவே பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் உணவுகளும், ரசாயன உணவுகளும் நமக்குக் கிடைக்கிறது. அதன் காரணமாகவே நோயாளிகளாகவும் நாம் மாறுகிறோம். இதனால் இயற்கை விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.

மேலும் உணவு பதப்படுத்துதல், உணவு மதிப்பு கூட்டுதல் பணியை மேற்கொள்ளுதல், இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி அதனை கடைபிடித்தல் போன்ற தொழில்களை தமிழ்நாட்டில் பிரதானமாக செய்யலாம். சுற்றுலா சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கலாம். மற்றபடி, இயற்கையை அழிக்கும் தொழில்வளர்ச்சி என்கிற ஏமாற்று வேலையை அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் தூக்கி ஓரமாக வைக்க வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். ஏனெனில், நாம் செய்வதற்கு ஆக்கப்பூர்வமான வேலைகளும், கடமைகளும் நிறைய இருக்கின்றன’’ என்கிறார்.