மூளையில் ட்ராஃபிக் ஜாம்



தகவல்

‘அவர் பேரு... ரொம்ப நல்ல பேருப்பா... சட்டுனு ஞாபகம் வரல’
‘சூர்யா ஸ்வீட்ஸா... இங்கேதான் எங்கேயோ பார்த்திருக்கேன்... ம்ம்ம்... அந்த தேரடி
பக்கத்துல இருக்கும் பாருங்க’.

இதுபோல் தினசரி வாழ்வில் மூளை ஸ்தம்பித்துப் போகும் சில கணங்களை எல்லோருமே அனுபவித்திருப்போம். இத்தனைக்கும் நாம் கேட்ட விஷயத்தில் அவர் நிபுணராக இருந்தாலும் சட்டென பதில் சொல்லத் தெரியாது. இது சாதாரணமாக பல பேரிடம் பார்க்கும் நிலைதான். இதை நிபுணர்கள் மூளை நரம்புகளில் ஏற்படும் ‘ட்ராஃபிக் ஜாம்’ என்கின்றனர்.

நம் மூளையின் நரம்பு செல்களில் இருக்கும் நரம்பு இழைகள் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் வரை நீளமுடையவை. ஒரு செல்லிலிருந்து அடுத்த நரம்பு செல்லிற்கு தகவலை கொண்டு செல்லும் வேலையை இந்த நரம்பு இழைகளே செய்கின்றன. இந்த முக்கியமான பணியை நிறைவேற்றுவதற்காக இணையங்கள் எனப்படும் நரம்பு இழைகளின் கிளைகளின் நுனிப்பகுதிக்கு தேவைப்படும் ஆற்றலை இடைவிடாது உடல் செல்கள் கொடுக்கிறது.

இந்த ஆற்றல் வழங்கலில் ஏதேனும் குறுக்கீடுகள் ஏற்பட்டால் நரம்பு இணையங்கள் அழிந்துவிடும். நரம்பு செல்களிடையே இணைப்புகள் பாதிக்கப்பட்டு, செல்கள் இறக்கும் அபாயம் ஏற்படும். இதனால் மூளைக் கோளாறுகள் ஏற்படக்கூடும்.

ஆரோக்கியமான நரம்பு உயிரணுக்களில் காணப்படும் Alpha synuclein என்ற புரதமே மூளையில் ஏற்படும் இந்த ட்ராஃபிக் ஜாமிற்கான காரணம் என ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள். அதாவது, அசாதாரணமான நரம்பு செல்களில் புரத வடிவங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக படிவது அல்லது செல்களில் உருவாகும் கட்டிகள் கூட, நரம்பு இழைக்கு செல்லும் ஆற்றல் அளிப்பைத் தடுத்து, நரம்பு இணைப்புகளில், சிதைவுகளை சேதப்படுத்தும். இதனால் நரம்பு செல்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்தில் தாமதம் அடைந்து, மூளையில் ‘டிராஃபிக் ஜாமை’ ஏற்படுத்துகிறது.

எப்போதாவது இதுபோல் திடீரென மூளையில் டிராஃபிக் ஜாம் ஏற்பட்டால் அது பெரிய விஷயம் இல்லைதான். தொடர்ச்சியாக இதுபோல் மூளை ஸ்தம்பித்தால் நரம்பியல் மருத்துவரை அணுகுவது நலம். ஏனெனில், இது நாளடைவில் அல்ஸைமர் போன்ற மறதி நோயை உண்டாக்கிவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள் நரம்பியல் மருத்துவர்கள்!

- இந்துமதி