புற்றுநோய் பரிசோதனை செலவை அரசு ஏற்க முடியாதா?!



செய்திகள் வாசிப்பது டாக்டர்

புற்றுநோயைக் கண்டறிய உதவும் PET Scan பரிசோதனை கட்டணத்தை முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டு வரலாமா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். ‘தென் தமிழகத்தின் பெரிய மருத்துவமனையான மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், புற்றுநோயியல் பிரிவில் நுண் புற்றுநோய் செல்களைக் கண்டுபிடிப்பதற்கான பெட் சிடி ஸ்கேன் வசதி இல்லை.

இதனால் ஏழை நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளை அணுக வேண்டியுள்ளது. இதற்காக அங்கு  ரூ.15 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. எனவே, ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை புற்றுநோயியல் பிரிவில் பெட் சிடி ஸ்கேன் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2017 ஜனவரி மாதம் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு மாதத்திற்குள் பெட் சிடி ஸ்கேன் வசதியை ஏற்படுத்த உத்தரவிட்டது. இந்நிலையில் மனுதாரர் மீண்டும் அளித்த புகாரில், ‘உயர்நீதிமன்ற உத்தரவு இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட அமர்வில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞர் பெட் சிடி ஸ்கேன் கருவி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி விரைவில் முடிக்கப்பட்டு ஏப்ரல் 20-ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

மேலும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வசூலிக்கப்படுவதை போல, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் பெட் சிடி ஸ்கேன் எடுக்க ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், இதேபோன்ற வசதியை கோவை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்த இயலுமா என தமிழக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டனர். முக்கியமாக, இதற்கான கட்டணத்தை முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டுவர இயலுமா என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

- ஜி.ஸ்ரீவித்யா