புதுமைப் பெண்ணின் புகுந்த வீடு!
செவ்விது செவ்விது பெண்மை!
பெண்ணியம் பேசி பெண்களை மேம்படுத்தி புதுமைபெண்ணாக மாற்ற முயற்சி செய்த இந்த சமூகம் அந்த புதுமைப் பெண்ணோடு எப்படி வாழ வேண்டும் என்று ஆண்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் சொல்லிக் கொடுக்க மறந்துவிட்டது.மாலதி மற்றும் சுமித்ரா - இருவரும் சிறுவயது தோழிகள். இப்போது 30-35 வயது நிலையிலுள்ள இவர்கள், சமகாலப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
 ஒரு மாலை பூங்காவில் அமர்ந்திருந்தபோது, மாலதி தன் காபி கப்பைத் தூக்கி வைத்து சுமித்ராவிடம் சொன்னாள்:
 “நம்ம சமூகம் நம்மை ‘புதுமை பெண்கள்’ ஆக்க முயற்சி பண்ணுது. உயர் கல்வி, நல்ல வேலை, தனி வருமானம்-இவற்றை எல்லாம் கற்றுக்கொடுத்து முன்னேற்றம் கொடுக்குது. ஆனால், அந்த புதுமைப் பெண்ணோடு எப்படி வாழ வேண்டும் என்பதை ஆண்களுக்கும், குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் யாரும் சொல்லித் தரவே இல்ல.”
சுமித்ரா சிரித்தாள்.“அப்படியேதான். என் அலுவலகத்தில் என் உடன் பணியாற்றுகிறவர்கள் எல்லாம் நான் பதவி உயர்வு பெற்ற போது கைத்தட்டி வாழ்த்துச் சொன்னாங்க. ஆனா வீட்டிலும் உறவினர் வட்டத்திலும் கேள்வி கேட்டது ‘இன்னொரு குழந்தை எப்போ?’ என்றுதான். அதாவது, பெண்களை மேம்படுத்தும் சமூகமா இருந்தாலும், பெண்ணோடு வாழும் குடும்பம் இன்னும் பழைய அளவுகோல்தான் வைத்துக்கொள்கிறது.”
புதுமைப் பெண்ணின் சிக்கல் மாலதி ஆழமாகச் சொன்னாள்:
“என் தங்கை 33 வயசு. ஒரு என்.ஜி.ஓ-வின் தலைமை அதிகாரி. நூற்றுக்கணக்கான பெண்களுக்கு உதவுகிறாள். ஆனால், வீட்டாருக்கு அவள் இன்னும் செட்டிலாகவில்லையே என்றுதான் தோன்றுகிறது. சமூகமே பெண்ணை மேம்படுத்திச்சு. ஆனால், அந்த மேம்பட்ட பெண்ணை எப்படி மதிக்கணும், எப்படி சேர்ந்து வாழணும் என்று யாரும் சொல்லவில்லை.”
இந்தச் சொற்கள் பல பெண்களின் நிஜத்தை வெளிப்படுத்துகின்றன.
சமூகம் “பெண்ணியம்” பேசி, பெண்ணை வலுப்படுத்துவதைக் கற்பித்துக் கொடுத்திருக்கிறது. ஆனால், அந்த புதுமைப் பெண்ணைத் திருமணம் செய்கிற ஆணுக்கும், அவள் வீட்டாருக்கும் உறவினர்களுக்கும், அவள் தனித்துவத்தை ஏற்கும் பயிற்சி தரப்படவில்லை. நவீன பெண்களின் இரட்டை சுமை எனும் எதார்த்தம்
“நான் சீனியர் அதிகாரியாக தயார் செய்துகொண்டு இருக்கிறேன்.,” என்று சுமித்ரா சொன்னாள்.“அலுவலகத்தில் தலைமைப் பண்பை வளர்த்துக்கணும், வீட்டில் ‘வேலை குறைக்கணும்’, ‘இன்னொரு குழந்தை வேண்டும்’ன்னு அழுத்தம் என்னைத் தடுமாற வைக்கிறது. இதுதான் இன்றைய புதுமைப் பெண்ணின் நவீன புகுந்த வீட்டுப் பிரச்சனை. பெண்ணியம் பெண்களை உயர்த்தியது. ஆனால் அந்த உயரத்தில், குடும்பமும், கணவரும், சமூகமும் அவளைச் சந்திக்கத் தயாராக இல்லை.
நண்பர்கள் மட்டுமே நவீன பெண்களின் உறுதுணை இல்லை மாலதி சொன்னாள்:
“நம் நட்புகள்தான் நம் பலம். ஆனால், உறுதுணையாக நிற்கும் மனநிலையை நண்பர்கள் மட்டும் கொண்டிருந்தால் நிச்சயம் போதாது. பெண்ணின் வாழ்க்கைத் துணையாய் வந்த கணவன், மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தன், ஓரகத்தி உள்ளிட்ட கணவன் வீட்டார் என அனைவருமே பெண்களுக்கான உறுதுணையாக மாற வேண்டும். இல்லை எனில் அவள் பெற்ற சுதந்திரம் என்பது வரையறுக்கப்பட்டதாகவோ ஏட்டளவில் நிற்பதாகவோ கோட்பாட்டு ரீதியானதாகவோ மட்டுமே இருக்கும்.
மறந்த பாடம்
சமூகம் மேலும் ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களை மேம்படுத்துவது மட்டும் போதாது. அந்த மேம்பட்ட பெண்ணை எப்படி மதிக்க வேண்டும், அவள் தனித்துவத்தை எப்படி அரவணைத்துக்கொள்ள வேண்டும். அவள் குரலை எப்படிக் கேட்க வேண்டும்-இவையெல்லாம் ஆண்களுக்கும் குடும்பத்துக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
வேலை மற்றும் வருமானம் சுமித்ரா:
“அலுவலகத்தில் எவ்வளவு வேலை செய்தாலும், நம்ம சம்பளத்தை ஒப்பிட்டு உறவினர்கள் சொல்வார்கள்.-‘இத்தனை சம்பாதிக்கிறையா… இருந்தாலும் ஒரு ஆணின் வருமானம் போல் அது வருமா? உன் கணவரின் சம்பளமே முக்கியம் என்பார்கள். இன்னும் பெண்களின் வருமானம் இரண்டாம் தரமாகவோ கூடுதலான மதிப்புடையதாகவோதான் பார்க்கப்படுகிறது. அது முக்கியமான (Vital) ஆதாரம் என்பதாக மாறவில்லை.
வீட்டுப் பொறுப்புகள் Vs பணியிடம் மாலதி:
“எனக்கு கெரியர் முன்னேற வேண்டும். அதனை நான் பிரதானமாக நினைப்பேன். வீட்டிலும் அதை விரும்பினாலும் வீட்டுப் பொறுப்புகளை நூறு சதம் பெண்ணாகிய நான் மட்டுமே செய்ய வேண்டும். என்னதான் பொருளாதாரரீதியாக உதவினாலும் அதற்கு மதிப்பு கிடையாது.
அது என்னவோ எக்ஸ்ட்ரா வருமானம் என்பது போலவே பார்க்கப்படுகிறது. மறுபுறம் வீட்டு வேலைகளை எல்லாம் ஒருத்தியே செய்ய வேண்டும் அது அவள் கடமை என்பது போல் மேல சுமத்தப்படுகிறது. இது வீட்டு வேலைக்கும் பணியிடத்து சுமைக்கும் இடையே ஒரு பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறச் செய்கிறது. நம் சமூகத்திடமும் வீட்டாரிடமும் இந்த மனநிலை மாற வேண்டும். சமூகத் தீர்ப்பு (Judgement)சுமித்ரா:
“ஒரு பெண் பார்ட்டிக்குச் சென்றால், ரொம்ப பிலிம் காடுகிறாள் என்பார்கள். வெளியூருக்குச் சென்றால், வீட்டைப் பார்த்துக்கொள்வதில் அலட்சியம் என்பார்கள். வேலை அதிகம் செய்தால், குடும்பத்தைப் பார்ப்பதே இல்லை என்பார்கள். இதை எல்லாம் ஓர் ஆண் செய்தால் அவனை அப்படிச் சொல்லாமல் அதற்கான பாராட்டுச் சொற்களாகச் சொல்வார்கள்.
விவாகரத்து அல்லது தனிமை மாலதி:
“என் உறவினர் பெண் ஒருவர், விவாகரத்தானவர். அவருக்கு எப்போதும் உறவினர்கள்-‘மீண்டும் ஒரு திருமணம் செய். வாழ்க்கையில் செட்டிலாகு’. ஆனால் அவர் ஏற்கெனவே இப்போதும் இருக்கும் வாழ்வில் நிறைவாகவே இருக்கிறார்.
வேலையாகட்டும் குழந்தையாகட்டும் எதையும் அவர் நல்லவிதமாகவே கையாள்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால், இந்த சமூகமோ ஒரு பெண்ணை திருமணம் செய்தால் மட்டுமே செட்டில் என்று சொல்கிறது. தனியாக இருக்கும் ஒரு பெண்ணை அது அவரது தேர்வு, என்று இருக்க விடுவதில்லை.” குழந்தை கல்வி & எதிர்கால அழுத்தம் சுமித்ரா:
“அதே போல் குழந்தை படிக்கும் பள்ளி, குழ்ந்தை எடுக்கும் மதிப்பெண்.அதற்காக கட்டப்படும் ஸ்கூல் ஃபீஸ் இவை எல்லாமே வேலைக்குச் செல்லும் பெண்களின் கடமையாகிவிடுகிறது. தந்தைக்கு குழந்தை எந்தப் பள்ளி என்றோ என்ன படிக்கிறது என்றோ எப்படிப் படிக்கிறது என்றோகூட சில வீடுகளில் தெரிவதில்லை..”
உடல் & தோற்றம் (Body Image) மாலதி:
“முப்பது வயதுக்கு மேல் கொஞ்சம் உடல் எடை கூடினால் உறவினர்கள் சொல்வாங்க-‘ஓஹோ! ஸ்லிம்மா இருந்த காலம் போச்சே’ன்னு. பெண்களின் திறமை, குணம் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, உடல் தோற்றத்தையே மீண்டும் மீண்டும் முதன்மையாக முன்வைக்கிறார்கள்.
பாதுகாப்பும் சமூக விடுதலையும் சுமித்ரா:
“இன்னும் முப்பது வயதுப் பெண் இரவு நேரம் வெளியே போனால், ‘பொறுப்பு இல்லை’ என்றுதான் சொல்வார்கள். பாதுகாப்பு பிரச்சனைகள் என்றால் கூட நாளை ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், பழி பெண் மேல்தான் வரும்.
அது மட்டுமில்லை, ‘இப்போ இந்த வயசுல இப்படியெல்லாம் உடை உடுத்த பண்ண வேண்டாமே’ எனப் பெண்ணை சமூகம் கட்டுப்படுத்துகிறது.உண்மையான சுதந்திரம் அந்த மாலை, மாலதி மற்றும் சுமித்ரா இருவரும் ஒரே கருத்தில் ஒத்துக் கொண்டனர்:
“புதுமைப் பெண்ணை உருவாக்கிய சமூகமே, அவளோடு இணைந்து வாழும் குடும்பத்தையும் புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் பெண்ணை வலுப்படுத்த வேண்டிய வேலை பாதியிலேயே நிற்கும்.
”பெண்களை மேம்படுத்துவது போல, அவர்களோடு வாழும் ஆண்களையும், குடும்பத்தையும், சமூகத்தையும் மேம்படுத்தும்போதுதான், “புதுமைப் பெண்ணின் புகுந்த வீடு” உண்மையான சுதந்திரத்தின் வீடாக மாறும்.
மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி
|