கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்குமா?
எல்லைக் கோட்டு ஆளுமைக் கோளாறு ( Borderline Personality Disorder )
மனநலக் கோளாறுகளில் பரவலாகப் பேசப்படுவதும், பிறருக்கு நிறைய சிரமங்களைக் கொடுக்கக் கூடியதாகவும் கருதப்படுவது எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு என்ற பிரச்னை.சனைதான்.இந்த Borderline personality disorder பாதிப்பு கொண்ட பலரை நாம் பார்த்திருப்போம். சாதாரணமாக இருப்பார். திடீரென்று ஏதோ ஒரு உணர்வு வந்து தள்ளியது போல் (Impulsivity) சிறிய விஷயத்திற்கு மிகப்பெரிய அளவில் கோபப்படுவார்.
 உரக்கக் கத்தியும் தவறான சொற்களை வீசியும் (Verbal abuse ) சண்டையிடுவார். சிலநேரம் கட்டுப்பாடின்றி உடல்ரீதியான தாக்குதல்களை (Physical abuse ) கூட தயக்கமின்றி ஏற்படுத்துவார். இப்படியானவர்கள் உணர்வுச் சமநிலையற்று (Emotional Imbalance) இருப்பார்கள். அலைக்கழிக்கும் சுய பச்சாதாப உணர்வுகளோடும், தம் நடத்தையால் பாதிக்கப்படும் உறவுகளின் குலைவுகளாலும் ‘Roller Coaster’ சவாரி போல் ஊசலாடும் மனநிலையில் தவிப்பார். தங்களுடைய ஆளுமை/சுயபிம்பம் குறித்து அடிக்கடி வெறுப்பும், சந்தேகமும் ஏற்படுவது BBD -யின் அடிப்படைத் தன்மையாக உள்ளது. அதுவே அவர்களின் அன்றாட வாழ்வில் மிகையான கோபமாக வெளிப்படுகிறது. “கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்” என்ற சொலவடை இவர்களுக்கு மிகவும் பொருந்தும். மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நபருக்கு குணமா என்று தோன்றுகிறதா? விரிவாக அலசுவோம்.
பெரும்பாலான இதர ஆளுமைக் கோளாறுகள் ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட காலத்தில் எல்லைக்கோட்டு ஆளுமை (Borderline Personality ) குறித்த தேடலும் விவாதமும் அமெரிக்காவில் முதன் முதலில் தோன்றின.
1938 ஆம் ஆண்டு அமெரிக்க உளவியல் ஆராய்ச்சியாளர் அடால்ப் ஸ்டெர்ன் (Adolph Stern) வழக்கமான மனநலக் கோளாறுகளான Psychotic மற்றும் Neurotic பிரிவுகளோடு பொருந்தாத சில மாறுபட்ட அறிகுறிகளைக் கொண்ட சில மனநோயாளிகளைப் பிரித்து இனம் கண்டார்.
இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் விளிம்பு நிலையைப் பிடித்துக்கொண்டு, எல்லையைத் தாண்டி செயல்படுவார்கள் என்பதைக் குறிக்க ‘Borderline’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். கிரிக்கெட்டில் Borderline தாண்டினால் Four, Sixer என்று கைத்தட்டிக் கொண்டாடுவோம்.
அதேபோல நடைமுறை வாழ்வில் இந்த எல்லைக்கோட்டை தொடும்போது அல்லது தாண்டும்போது பிறர் நம்மைப் பார்த்துக் கைத்தட்டிச் சிரிப்பார்கள் என்றும் சொல்லலாம். ஆம். நம் உணர்வின் எழுச்சி சரியோ… தவறோ… நம் நோக்கம் என்னவோ… ஆனால், சமூகம் வரையறுத்துள்ள எல்லைகளை மீறினால் மனநோயாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவோம் இல்லையா?
தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த அடால்ஃப் 1975-இல் எல்லைக்கோடு ஆளுமைக்கான அமைப்பினை உருவாக்கி நடைமுறை செயல்முறைகளின் வழி சில நிரூபணங்களைக் கொண்டு வந்தார்.
அதன் முடிவாக, மனநிலை அடிக்கடி மாற்றங்களோடு, சுய தீங்கு விளைவிக்கும் (Self-Harming) தற்கொலை எண்ணங்களும் BPD யின் தன்மையாக அறியப்பட்டது. அதன் பின்னர் ஓட்டோ கென்பெர்க் (Otto Kernberg), ஜான் குண்டர்சன் (John Gunderson) போன்ற உளவியல் வல்லுநர்கள் BPT என்ற கோட்பாட்டின் முழுமையான புரிதலுக்கான பங்களிப்புகளைச் செய்தனர். எனவே 1980-இல் அமெரிக்க சைக்கியாட்ரிக் அமைப்பு வரையறுத்த (DSM3) மனநல ஆளுமைக் கோளாறுகளின் பட்டியலில் B தொகுப்பில் எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு இடம்பெற்றது. 1992 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு சர்வதேச நோய் வகைப்பாட்டின் பத்தாவது திருத்தத்தின்படி எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு என்பது தனி வகை அல்ல. இதர கோளாறுகளோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டது என்று குறிப்பிட்டது.
கலிஃபோர்னியாவில் உள்ள ப்ராவிடன்ஸ் செயின்ட் ஜோசஃப் குழந்தைகள் மற்றும் குடும்ப மனநல மேம்பாட்டு அமைப்பைச் சார்ந்த பிரபல உளவியலாளர் காத்ரீன் மூர் (Kathryn Moore) ‘எப்போதோ உள்ளடக்கி வைக்கப்பட்ட கோபமானது எரிச்சல் உணர்வு (Irritability), ஓய்வற்ற உள்ளுணர்வு (Internal Restlessness), சோகஉணர்வு (Sadness), எண்ணக் குலைவு, ஏமாற்றப்பட்ட உணர்வு (Frustration) என்று அடுத்தடுத்த நிலைகளைக் கடந்து போகும்’ என்று எச்சரிக்கிறார்.
ஒவ்வொருவருக்கும் கோபத்தைத் தூண்டும் காரணி (Triggers) மாறுபடலாம். ஆனால், அவற்றின் விளைவாக, ஒருவருக்குத் தான் சொல்வதை யாரும் கேட்பதில்லை, யாரும் தன்னைக் கொண்டாடுவதில்லை, என் தேவைகள் நிறைவேறுவதேயில்லை, சூழ்நிலையை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்று ஆழமாக மனதில் பதிந்துவிடுகிறது. இவற்றின் தாக்கம் அதீதக் கவலை (Anxiety), மன அழுத்தம் ( Depression) என்று உள்முகமாகத் திரும்பி சுய வெறுப்பை உருவாக்கி விடுகிறது.
இதனால், அடிக்கடி மாறும் ஊசலாட்ட மனநிலை (Mood swings), எரிச்சலான உணர்வு (Iritability) இவற்றோடு கொட்டித் தெறிக்கும் அதீதக் கோபமும் BPD நபர்களை எளிதாக அடையாளம் காட்டும் என்று புரிந்து கொள்ளலாம்.
மேலும் பிறரால் தான் கைவிடப்பட்டு விடுவோமா என்ற அச்சம் (Abandonment fear) பொதுவான அறிகுறியாகச் சொல்லப்படுகிறது. ஆழ்மனத்தைப் பொருத்தவரை இவர்கள் நீடித்த உறவுகளைத் தக்கவைக்க விரும்புபவர்கள்தான். ஆனால், அவர்களின் ஆக்கிரமிப்பான, ஆதிக்கமான நடத்தையே அவர்களுடைய நண்பர்களையும் குடும்பத்தினரையும் பாதிக்கிறது.
எளிமையான உதாரணமாக ரட்சகன் (1997) திரைப்பட நாயகன் நாகர்ஜுனா போல் தந்தையின் பாசம், பிரபஞ்ச அழகியோடு காதல் என எல்லாவற்றையும் இழந்துவிடக்கூடிய அளவில் அவரது கோபமானது நரம்பு தெறிக்கும்படி அடக்க இயலாமல் பொங்கி வருவதைச் சொல்லலாம்.
அதற்குத் தீர்வாக அதே நாகர்ஜுனா தோழா (2016) திரைப்படத்தில் நாகர்ஜுனா கதாபாத்திரம் கார்த்தியிடம் ‘சீனு நீ உன் அம்மாவோட நெருக்கமா இருக்கணும்னு நினைக்குற… ஆனா அவங்கள விட்டு மேலும் விலகியே போற’ என்று அறிவுரை கூறுவதை எடுத்துக்கொள்ளலாம்.
ஆக, BPD உள்ளவர்கள் உறவுகளோடு இணக்கமாக விரும்புகிறார்கள். ஆனால், அவர்களின் நடத்தை வழியாக விலகிக்கொண்டே இருக்கிறார்கள். இப்படியான சிக்கலில் மாட்டிக் கொண்டவர்கள் என்ற கோணத்தில் புரிந்து கொள்ளும்போது இவர்களின் பரிதாப நிலை புரிகிறது இல்லையா?
அனைத்து மனநலக் கோளாறுகளும் கோபமும், உணர்வுகளின் உந்துதலும் கொண்டிருக்கும் என்பதால் இதனை பிரித்துப் பார்ப்பது என்பது எப்போதும் சவாலே. பன்முகத்தன்மை கொண்டதால் இதனோடு இணை மன நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ஆகவே, பெரும்பாலான நடைமுறை உளவியல் சிக்கல்களான மூட் டிஸார்டர் (Mood disorders), சப்ஸ்டென்ஸ் யூசேஜ் டிஸார்டர்ஸ் (Substance usage disorders), ஈட்டிங் டிஸார்டர்ஸ் (Eating disorders) போன்றவை ஒருவருக்கு ஏற்படும் போதெல்லாம் இலவச இணைப்பு போல ஒட்டிக்கொண்டு வரும் BPD பரிசோதனையும் செய்ய வலியுறுத்தப்படுகிறது.
ஆனால் BPD - க்கும் இதர மனக்கோளாறுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதைப் பற்றி அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
|