கர்ப்ப கால மூட்டுகள்...கவனம் ப்ளீஸ்!
வலியை வெல்வோம்
சென்ற இதழில் கர்ப்பகாலத்தில் உடலமைப்பில் ஏற்படும் மாறுபாடுகளைப் பற்றி படித்து இருப்பீர்கள். அது தசைகளின் செயல்பாடுகள் மற்றும் மாற்றங்களைப் பற்றியதாக இருந்திருக்கும். கர்ப்ப காலத்தில் மூட்டுகளில் ஏற்படும் மாற்றங்களையும் தெரிந்து கொள்வோம்.
கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் மாற்றங்கள்
(உதாரணம்: ரிலாக்சின் ஹார்மோன் அதிகரிப்பதால் மூட்டு தளர்வு), உடல் எடை அதிகரிப்பு மற்றும் புவியீர்ப்பு மையத்தின் (Center of Gravity) மாற்றம் போன்ற காரணங்களால் உடல் மாற்றத்திற்கேற்ப இயக்க நிலையை தழுவிக் கொள்ளும். இவை உடலமைப்பு, நடையின் விதம், இயக்க வரம்பு (Range of Motion), மூட்டு நிலைத்தன்மை ஆகியவற்றை பாதிக்கின்றன. இதனால் பெரும்பாலும் சிரமம் அல்லது வலி ஏற்படுகிறது. முக்கியமாக ஏழாவது மாதத்தில் இருந்து (Third Trimester) அதிக மாற்றங்கள் ஏற்படுகின்றன. சில மாற்றங்கள் பிரசவத்திற்குப் பிறகும் தொடரக்கூடும்.
 1. இடுப்பு மூட்டு (Hip Joint)
*இடுப்பில் முன்புற சாய்வு (Anterior Pelvic Tilt) சுமார் 5 டிகிரி அதிகரிக்கிறது.இது சமநிலையைத் தக்கவைத்துக் கொள்ள உதவினாலும், இடுப்பின் மீது ஒரு அழுத்தத்தை (Mechanical Stress) அதிகரிக்கிறது.
*இரண்டாம் மற்றும் மூன்றாம் trimesterல் நடை வேகம் குறைந்து நடப்பதில் மாறுபாடு தோன்றும் இதை waddling gait என்று சென்ற இதழிலேயே பார்த்தோம்.
*ரிலாக்ஸின் ஹார்மோன் காரணமாக மூட்டு தசை நாண்கள் தளர்ந்து நிலைத்தன்மை குறைகிறது; இதனால் இடுப்பு வலி அதிகமாகும்.இதற்கு தகுந்தாற்போல் மூட்டு இயக்கத்தில் மாறுபாடு ஏற்படும்.
*சுமார் 56% கர்ப்பிணிகள் கீழ்முதுகு மற்றும் இடுப்பு வலியால் பாதிக்கப்படுகிறார்கள் என ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன.
2. முழங்கால் மூட்டு (Knee Joint)
*புவியீர்ப்பு மையம் முன்புறம் நகர்வதால் (Anterior Shift) முழங்கால் நீட்டிப்பு (hyperextension) ஏற்படுகிறது. இது சமநிலையை தக்கவைக்க உதவுகிறது.
*இதனால் பிரசவத்திற்குப் பிறகும் நிலைத்தன்மை குறைந்து Osteoarthritis வரும் வாய்ப்புகள் அதிகம்.
*உடல் எடை காரணமாக முழங்கால் வலி ஏற்படலாம்.
3. குதிகால் மூட்டு (Ankle Joint)
*காலில் உள்நோக்கிய சுழற்சி அதிகரிக்கும். இதனால் பாதத்தின் வளைவு உயரம் குறைகிறது.பாதத்தின் முன்புறம் மற்றும் நடுப்பகுதியில் எடை அதிகமாகும். *இங்கும் ரிலாக்சின் ஹார்மோனானது பாதத்தில் உள்ள ப்ளான்டார் சவ்வை தளரச்செய்யும். *முன் பாத அழுத்தம், ப்ளான்டார் சவ்வு வீக்கம் காரணமாக பாத வலி ஏற்படும்.சமநிலைக்காக நடையின் அகலம் அதிகரிக்கிறது.
4. முதுகுத்தண்டு மூட்டு (Vertebral / Spine Joints)
*Lumbar lordosis அதாவது கீழ் முதுகின் உள்நோக்கிய வளைவுத் தன்மை அதிகரிக்கும் மற்றும் thoracic kyphosis மேல் முதுகும் பகுதியின் வளைவையும் அதிகரிக்கும் (C போன்ற வளைவு).
*சில ஆய்வுகள் லம்பார் முதுகுப்பகுதி வளைவு குறைகிறது எனவும் குறிப்பிடுகின்றன.
*முதுகு முன்னோக்கி வளையும் செயல் குறையும், நிற்பது-உட்கார்வது போன்ற செயல்களில் இடுப்பை விட முதுகெலும்பின் இயக்கம் அதிகமாகும்.
*ரிலாக்சின் ஹார்மோன் தசைநார்களின் தளர்வை ஏற்படுத்தி postural control ஐ குறைக்கும்.
*சுமார் 56-95% பெண்களுக்கு கீழ்முதுகு வலி ஏற்படுகிறது.
இந்த மாற்றங்கள் கர்ப்ப கால வளர்ச்சிக்குத் தேவையானதாக இருந்தாலும், தசை மற்றும் எலும்புகளின் அழுத்தத்தை அதிகரிக்கலாம். சரியான உடற்பயிற்சி மற்றும் உடல்நிலை பழக்கங்கள் உடல் மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை குறைக்க உதவும்.
பிரசவம்
பிரசவம் பொதுவாக நார்மல் டெலிவரி எனப்படும் வைஜனல் டெலிவரி மற்றும் சிசேரியன் ஆகிய இரண்டு முறைகளில் நடைபெறும்.இதில் பெரும்பாலானோருக்கு சிசேரியனின் போது முதுகில் செலுத்தப்படும் மயக்க ஊசியால் தான் முதுகுவலி வருகிறது என சந்தேகம் இருக்கும்.சிசேரியன் அறுவைசிகிச்சையின் போது முதுகில் மயக்க மருந்து செலுத்தப்பட்டு அறுவைசிகிச்சை மேற்கொள்வர்.இது இரண்டு முறைகளில் செலுத்தப்படுகிறது.
1.ஸ்பைனல் அனஸ்தீசியா
ஸ்பைனல் அனஸ்தீசியா,ஸ்பைனல் கார்டைச் சுற்றியுள்ள செரிப்ரோஸ்பைனல் திரவத்தில் (CSF) நேரடியாக அனஸ்தீசியா மருந்தை ஒரு ஊசி மூலம் செலுத்துவதாகும். பொதுவாக கீழ் முதுகில் ஒரு மெல்லிய ஊசியால் செலுத்தப்படுகிறது. இந்த செயல்முறை விரைவான மற்றும் முழுமையான உணர்ச்சியின்மையை இடுப்பிலிருந்து கீழ் வரை வழங்குகிறது.
ஸ்பைனல் அனஸ்தீசியாவின் குறுகிய கால விளைவுகள்
இரத்த அழுத்தம் குறைவு
ஸ்பைனல் அனஸ்தீசியா கொடுக்கப்பட்டவுடன் இரத்த அழுத்தம் திடீரென குறையலாம். இது மயக்கம் அல்லது குமட்டல் உணர்வை ஏற்படுத்தலாம். மருத்துவர்கள் இதை உடனே மருந்துகள் மூலம் சரி செய்வார்கள்.
தலைவலி (Post-Dural Puncture Headache)
முதுகில் ஊசி செலுத்திய இடத்தில் திரவம் கசிவதால் (CSF leak) தலைவலி ஏற்படலாம். இது படுத்திருக்கும்போது குறைந்து, எழுந்திருக்கும்போது அதிகரிக்கும். இது சில நாட்களில் தானாகவே சரியாகலாம் அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.
முதுகில் லேசான வலி
ஊசி போட்ட இடத்தில் சிறிது வலி அல்லது மென்மை உணரப்படலாம், இது சில நாட்களில் மறையும்.
தற்காலிக உணர்ச்சியின்மை அல்லது பலவீனம்
கீழ் உடல் முழுவதும் உணர்வு இழப்பு அல்லது இயக்க முடியாமை ஏற்படலாம், ஆனால் இது 1-2 மணி நேரத்தில் மறையும்.
குமட்டல் அல்லது வாந்தி
அனஸ்தீசியாவின் விளைவாக அல்லது இரத்த அழுத்த மாற்றங்களால் இவை ஏற்படலாம், ஆனால் இது தற்காலிகமானது.
2.எபிடூரல் அனஸ்தீசியா
எபிடூரல் அனஸ்தீசியா, முதுகு தண்டுவடத்தின் எபிடூரல் என்ற இடத்தில் மருந்தை செலுத்துவதன் மூலம் அளிக்கப்படுகிறது,அதாவது செரிப்ரோ ஸ்பைனல் திரவத்தை துளைக்காமல். ஒரு கேதீட்டர் (மெல்லிய குழாய்) மூலம் செலுத்தப்படும்.
எபிடூரல் அனஸ்தீசியாவின் குறுகிய கால விளைவுகள்
இரத்த அழுத்தம் குறைவு
ஸ்பைனல் அன்ஸ்தீசியா போலவே, எபிடூரல் அனஸ்தீசியாவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம், இது மயக்கம் அல்லது குமட்டலை ஏற்படுத்தலாம். இது மருத்துவர்களால் உடனே சரி செய்யப்படும்.
முதுகில் லேசான வலி அல்லது மென்மைத் தன்மை
கேதீட்டர் அல்லது ஊசி செலுத்திய இடத்தில் சில நாட்களுக்கு வலி அல்லது அசௌகரியம் இருக்கலாம்.பிரசவத்திற்குப் பிறகு முதுகு வலி பொதுவாக 30-40% பெண்களுக்கு வரலாம்.
இது பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக வருகிறது, அனஸ்தீசியா காரணமாக அல்ல. ஸ்பைனல் அல்லது எபிடூரல் கொடுத்த இடத்தில் சில நாட்களுக்கு லேசான வலி அல்லது மென்மை இருக்கலாம், ஆனால் இது பொதுவாக தானாகவே சரியாகிவிடும். சில நம்பகமான மருத்துவ ஆய்வுகள் ஸ்பைனல் அல்லது எபிடூரல் அனஸ்தீசியா நீண்ட கால முதுகு வலியை ஏற்படுத்துவதில்லை என்று கூறுகின்றன. எபிடூரல் பயன்படுத்தியவர்களுக்கும் பயன்படுத்தாதவர்களுக்கும் முதுகு வலி விகிதங்கள் (சுமார் 27-30%) ஒரே மாதிரியாக உள்ளன. முதுகு வலி பெரும்பாலும் முன்பே இருந்த வலி, உடல் எடை, அல்லது பிரசவ நிலை போன்றவற்றால் வருகிறது, அனஸ்தீசியால் அல்ல என்று கூறுகிறது.
கர்ப்பத்திற்குப் பிறகு இடுப்பு வலியின் காரணங்கள்
*ஹார்மோன் மாற்றங்கள்
*தசை மற்றும் தசைநார் அழுத்தம்: கர்ப்ப காலத்தில் வளரும் கரு இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் மற்றும் தசைநார்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது வலி அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். *பிரசவத்தின் தாக்கம்: யோனி பிரசவம் (vaginal delivery) அல்லது சிசேரியன் பிரசவத்தின் போது இடுப்பு பகுதி கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகிறது, இது வலியைத் தூண்டலாம்.
*உடல் நிலை மற்றும் அழுத்தம்: குழந்தையை தூக்குவது, தவறான உட்காரும் நிலை, அல்லது பிற உடல் செயல்பாடுகள் இடுப்பு வலியை மோசமாக்கலாம்.
*முந்தைய உடல் நிலைகள்: முதுகு வலி, இடுப்பு மூட்டு பிரச்சனைகள் முன்பே இருந்திருந்தால்.
அறிகுறிகள்:
*இடுப்பு, கீழ் முதுகு, அல்லது இடுப்பு மூட்டுகளில் வலி அல்லது அசௌகரியம் *நடக்கும்போது, படிக்கட்டுகளில் ஏறும்போது, உட்காரும்போது அல்லது எழும்போது வலி அதிகரித்தல்
*இடுப்பு மூட்டுகளில் ‘கிளிக்’ அல்லது ‘பாப்’ ஒலி உணரப்படுதல்
*சிறுநீர் கழிக்கும்போது, பாலியல் செயல்பாடுகளின்போது, அல்லது உடல் செயல்பாடுகளின்போது வலி
*இடுப்பு பகுதியில் கனமான உணர்வு அல்லது அழுத்தம் சிகிச்சை முறைகள்:
இடுப்பு வலியை நிர்வகிக்க பல வழிகள் உள்ளன, இவை ஒவ்வொரு பெண்ணின் உடல் நிலைக்கு ஏற்ப மாறுபடும்:
பிசியோதெரபி: இடுப்பு தசைகளை வலுப்படுத்தவும், மூட்டு நிலைத்தன்மையை மேம்படுத்தவும் பிசியோதெரபிஸ்ட் உடற்பயிற்சிகளை பரிந்துரைப்பார். இதில் இடுப்பு தரை தள (pelvic floor) உடற்பயிற்சிகளும் அடங்கும்.
வலி நிவாரண மருந்துகள்: மருத்துவரின் ஆலோசனையுடன் வலி நிவாரண மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.
இடுப்பு ஆதரவு பெல்ட்கள்: இவை இடுப்பு மூட்டுகளுக்கு கூடுதல் ஆதரவை வழங்கி வலியைக் குறைக்க உதவும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்: குழந்தையை தூக்கும்போது சரியான உடல்
நிலையைப் பயன்படுத்துதல் நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்காருவதைத் தவிர்த்தல்
தற்போது மார்க்கெட்டில் பிரசவத்திற்கு முன்னும் பின்னும் பயன்படுத்தும் தலையணைகள், மெத்தைகள் உள்ளது அவற்றை பயன்படுத்தலாம்.
தடுப்பு மற்றும் நீண்டகால நிர்வாகம்
வரும்முன் காப்பதே சிறந்தது ஆகவே, பிரசவத்திற்கு முன்னும் பின்னும் முதுகு, இடுப்பு ஆரோக்கியத்தை பேணிக்காக்க கீழ் வருபவற்றை கடைப்பிடிக்கலாம்.கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி: இடுப்பு தரை மற்றும் மைய தசைகளை வலுப்படுத்துவதற்கு மருத்துவரின் ஆலோசனையுடன் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும்.
எடை மேலாண்மை: ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது இடுப்பு மூட்டுகளுக்கு அழுத்தத்தைக் குறைக்கும்.
சரியான உடல் நிலை: குழந்தையை தூக்கும்போது அல்லது அன்றாட நடவடிக்கைகளின்போது உடல் நிலையை கவனிக்கவும். வழக்கமான பரிசோதனைகள்: மருத்துவரை தவறாமல் சந்தித்து இடுப்பு ஆரோக்கியத்தை கண்காணிக்கவும்.
பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்
*தீவிரமான அல்லது தொடர்ச்சியான வலி *நடப்பதற்கு அல்லது அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதற்கு சிரமம் *சிறுநீர் கட்டுப்பாடின்மை அல்லது குடல் இயக்க பிரச்சனைகள் *காய்ச்சல், வீக்கம் அல்லது பிற அசாதாரண அறிகுறிகள்
குழந்தை பிறந்து 3 மாதங்களில் சுமார் 4 பெண்களில் 1 பெண்ணுக்கு இடுப்பு வலி ஏற்படுகிறது. இது மிகவும் பொதுவானது. இந்த வலிகளின் பல காரணங்கள் இயற்கையாகவே மேம்படுவதால், பிரசவத்திற்குப் பிறகு 8 மாதங்களில் சுமார் 10 பெண்களில் 1 பெண்ணுக்கு மட்டுமே வலி தொடர்கிறது.
இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி
|