வெத்தலை... வெத்தலை... வெத்தலையோ...



வாசகர் பகுதி

சப்த ஷீரா, தாம்பூலவல்லி, நாகினி, நாகவல்லி, புஜங்கவல்லி, புஜங்க லதா, மெல்லிலை, மெல்லடகு, தாம்பூலம் என வெற்றிலைக்கு பல பெயர்கள்  உண்டு.

வெள்ளை வெற்றிலை, கறுப்பு வெற்றிலை, கமார் வெற்றிலை, கற்பூர வெற்றிலை என இருந்தாலும் நாம் உபயோகப்படுத்துவது பெரும்பாலும்  வெள்ளை வெற்றிலை தான்.

வெற்றிலை வைத்தியத்துக்கு பெரிதும் கை கொடுக்கும். இரும்புச்சத்து, நீர்ச்சத்து, நார்ச்சத்து, தாமிரச்சத்து, மாவுச்சத்து, புரதம், கால்சியம் அடங்கிய  மூலிகை விட்டமின் A மற்றும் C இதில் உள்ளன. உணவிலும் இதைச் சேர்ப்பர். போர் வீரர்கள் வெற்றிலை மாலை அணிந்துச் செல்வதும் வழக்கம்.

ஆண்மைக் குறைபாட்டை நீக்கும். குழந்தை பெற்ற பெண்ணுக்குத் தாய்ப்பால் சுரக்கவும், பால் குறைந்த பெண்களுக்கு வெற்றிலையை மார்பில் கட்ட  தாய்ப்பால் சுரக்கும். சுவாசப் பிரச்சினை உள்ளவர்க்கு பலனளிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி தரவும் உதவும். பசியின்மையைப் போக்கிடும். மூளைக்கும்,  எலும்பு, நரம்பு, பற்கள் உறுதிக்கு செயல்படும்.

மந்தத்தைப் போக்கி ஞாபகசக்தியினை அதிகரிக்கச் செய்யும். இருமல், சளியை விரட்டும். குழந்தைகளின் வயிற்று உபாதைகளை நீக்கி,  வயிற்றுப்பூச்சியைக் கொல்லும். நெய் தடவிய வெற்றிலையை லேசாக வாட்டி வயிற்றில் போட வயிற்றுவலி சரியாகும். உடல் பருமனை குறைக்கும்.  தீப்புண்ணுக்கும் போடலாம்.

இதன் சாறை காதில் ஊற்ற சீழ்வடிதல், காதுவலி குணமாகும். வெற்றிலைச் சாறை 2 சொட்டு மூக்கில் விட்டால் மூக்கடைப்பு, ஜலதோஷம் நீங்கும்.  தண்ணீர் + எலுமிச்சைச்சாறு + வெற்றிலைச்சாறு பனங்கற்கண்டுடன் பருகிட சிறுநீரகப் பிரச்சினை சரியாகும். ஓமம், மிளகு, வெற்றிலை சேர்த்த  கஷாயம் பருகிட மூட்டுவலி, தசைப்பிடிப்பு விலகும்.

வெற்றிலையை அரைத்து ஆமணக்கு எண்ணெயில் குழைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி, புண், தேமல், படை நீங்கும். விளக்கெண்ணெய்  தடவிய வெற்றிலையை வாட்டிப் போட்டால் கை, கால் வீக்கம் குறையும்.

- சு.கெளரிபாய், பொன்னேரி.