தாய்க்கு மரியாதை





தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வழியாகவும் தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்கு அழைத்துச் செல்லும் இயக்குநர் தங்கர்பச்சானை, பதினான்காவது தளத்தில் உள்ள அவருடைய புதிய அலுவலகத்தில் சந்தித்தோம். தன்னுடைய டிரேட் மார்க் புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

‘‘சில வருடங்களுக்க முன் நான் எழுதிய ‘அம்மாவின் கைபேசி’, சினிமா வடிவம் பெறுகிறது.  இது நீண்ட நாட்கள் என் மனதுக்குள் பதியம் போட்டு எழுதிய நாவல். இதில் என்னுடைய சொந்த அனுபவங்களும் இருக்கும். ஒன்பது பிள்ளைகளை பெற்ற ஓரு தாயின் வலிதான் படத்தின் ஒருவரிக் கதை.

மகன்களின் கைப்பேசி அழைப்புக்காக சுருக்கு பையில் அலைப்பேசியுடன் காத்திருக்கும¢ அந்தத் தாயின் ஏக்கத்தை இதில் அழகாக பதிவு செய்துள்ளேன். இது ஒரு மொழியை சேர்ந்தவர்களுக்கான படமாக இருக்காது. இந்திய தாய்மார்கள், இந்திய மக்களுக்கான படமாக இருக்கும்.

மகனாக சாந்தனுவும், முறைப்பெண்ணாக ‘வாகைசூடவா’ இனியாவும் நடிக்கிறார்கள். அம்மாவாக எம்ஜிஆர், சிவாஜி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பழம் பெரும் நடிகை ரேவதி நடிக்கிறார். தவிர எழுபத்தைந்து புதுமுகங்களை தேர்வு செய்து நடிப்பு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளேன்.

கர்நாடிக், மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை என்று சகலவிதமான இசையையும் முறையாக கற்ற இருபத்து ஒன்பது வயது இளைஞரான ரோகித்குல்கர்னி இசையமைக்கிறார். படத்தின் குறிப்பிட்ட பகுதிகளில்தான் இசையின் பயணம் இருக்கும். ஆனால், அந்த பகுதி உள்ளத்தை உருக வைக்கும்.

தங்கர் திரைக்களம் இந்தப் படத்தை தயாரித்தாலும், படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் மேக்ஸ் ப்ரோ எண்டர்டெயின்னர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் தயாரிப்பில் இணைந்துள்ளார்கள்...’’ என்கிறார் தங்கர் பச்சான்.
- எஸ்