ரீமேக் மோகம் ஸ்நாக்ஸ்



மறைந்த ராஜசேகர் இயக்கத்தில் தியாகராஜன் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தின் ரீமேக், தியாகராஜன் இயக்கத்தில் ‘மம்பட்டியான்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இதில் அவரது மகன் பிரஷாந்த் மம்பட்டியானாக நடித்தார். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம், அவரது பேத்தி சினேகா பிரிட்டோ இயக்கத்தில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

பாரதிராஜா இயக்கத்தில் ரிலீசான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை ரீமேக் செய்து, அதே பெயரில் 2ம் பாகமாக அவரது மகன் மனோஜ் கே.பாரதி இயக்க திட்டமிட்டுள்ளார். மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ‘நூறாவது நாள்’ படத்தை ரீமேக் செய்து, அதே பெயரில் 2ம் பாகமாக அவரது மகன் ரகு மணிவண்ணன் இயக்குகிறார்.

மனோஜ் கே.பாரதி, ரகு மணிவண்ணன் இருவரும் ஹீரோவாக அறிமுகமாகி, பிறகு முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். மணிரத்னம், பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அனுபவம் மனோஜுக்கு இருக்கிறது. மணிவண்ணன் இயக்கிய பல படங்களில் ரகு உதவி இயக்குனராகப் பணியாற்றி இருக்கிறார்.

அஜீத்குமார் அலுவலகத்திலும், வீட்டிலும் வாஸ்து நிரம்பி வழியும். பல வருடங்களாக திருவான்மியூர் வால்மீகி நகரில் வசித்து வந்த வீட்டை தரைமட்டமாக இடித்து விட்ட அவர், அதே இடத்தில் அதிநவீன பங்களா கட்டுகிறார். அதற்கான பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. சென்னையில் மம்முட்டி, ஜெயராம் ஆகியோரின் வீடுகள் மிகப் பிரமாதமாக இருக்கும்.

இப்போது தியாகராய நகரில் சூர்யா, கார்த்தியின் பிரமாண்ட பங்களா தயாராகி வருகிறது. விஜய்யின் நீலாங்கரை பங்களாவும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. விக்ரம், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்றோரின் பங்களாக்களும் வித்தியாசமாக இருக்கும். நடிகைகளில் ஊர்வசியின் வீட்டுக்கு நிகராக வேறு யாருடைய வீட்டையும் ஒப்பிட முடியாது.

- தேவராஜ்