வசூல் மன்னன்!



வேதாளம் விமர்சனம்

பாசத்தை டன் கணக்கில் கொட்டித் தீர்க்கும் ஒருவன் வேதாளமாக மாறும் பின்னணி என்ன என்பதுதான் படம். தங்கை லட்சுமிமேனனை கல்லூரியில் சேர்க்க சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு போகிறார் அண்ணன் அஜித். அங்கே கால் டாக்ஸி நிறுவனம் நடத்தும் சூரியின் கம்பெனியில் டிரைவராக வேலைக்கு சேருகிறார். வக்கீலாக இருக்கும் ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜித்தின் கால்டாக்ஸியில் ஏறுகிறார். ஏகப்பட்ட குழப்பத்துக்குப் பிறகு அந்த சந்திப்பு காதலாக மலர்கிறது. அதே சமயம் ஸ்ருதிஹாசனின் அண்ணன் அஸ்வின், லட்சுமிமேனனை காதலிக்கிறார். லட்சுமிமேனன் திருமண ஏற்பாடு நடக்கும் அதே வேளையில் தாதா கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை அஜித் காவு வாங்குவதைப் பார்த்துவிடுகிறார் ஸ்ருதிஹாசன். அதன் பிறகு நிச்சயதார்த்தம் நடந்ததா, தாதா கும்பலுக்கும் அஜித்துக்கும் என்ன தொடர்பு என்பதை விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் ஆகப் பெரும் பலம் அஜித். அதை அஜித்தும் எல்லாவிதத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார். முந்தைய படங்களில் கொஞ்சம் சிரித்து, ஸ்டைலாக போஸ் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்த அஜித், இப்படத்தில் உடலை வருத்திக் கொண்டு உழைத்திருப்பதை கவனிக்க முடிகிறது. முதல் பாதியில் வெகுளியான சிரிப்பு, தங்கை பாசம் என நெகிழ வைக்கிறார். இரண்டாவது பாதியில் ரசிகர்களுக்காகவே ஆக்‌ஷன் காட்சிகளில் தெறிக்க விட்டிருக்கிறார். அந்த வகையில் காட்சிக்கு காட்சி கைதட்டல் வாங்குகிறார்.



கதாநாயகியாக நடித்திருந்தால் கூட லட்சுமி மேனனுக்கு இவ்வளவு புகழ் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். பாசமிகு தங்கையாக வாழ்ந்திருக்கிறார். ஒருவகையில் இப்படம் அஜித்துக்கு பாசமலராக அமைந்திருக்கிறது. ஸ்ருதிஹாசனுக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் அஜித்தை கிண்டல் செய்யும் காட்சியில் ரசிக்க வைக்கிறார். வில்லன்கள் ராகுல்தேவ், கபீர்சிங் இருவரும் மிகச் சரியாக மிரட்டியிருக்கிறார்கள். மயில்சாமி, சூரி என காமெடியன்கள் இருந்தும் காமெடி ஏரியாதான் கொஞ்சம் டல்லடித்து விட்டது.

அஜித்தை அடுத்து அதிக பாராட்டுக்குரியவர் ஒளிப்பதிவாளர் வெற்றி. நெரிசலான கொல்கத்தாவை வித்தியாசமான கோணங்களில் படமாக்கி அழகு சேர்த்திருக்கிறார். அனிருத் இசையில் ‘ஆலுமா’ பாடலுக்கு தியேட்டரே குலுங்குகிறது. பின்னணி இசையிலும் கவனம் ஈர்க்கிறார். அஜித் ரசிகர்களுக்காகவே கதை உருவாக்கியிருந்தாலும் பெண்களை போற்றும் வசனங்களில் டைரக்டர் சிவா சிறப்பு பாராட்டு பெறுகிறார். தீபாவளிக்கு சென்னையை மிரட்டியது வான்மழை மட்டுமல்ல, ‘தல’யின் வசூல்மழையும்தான்!