நிகிலாவும், ஒன்பது குழியும்!



‘ஒன்பது குழி சம்பத்’ என்றொரு படத்துக்கு வினோதமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். அதென்ன ஒன்பது குழியென்கிற கேள்வியோடு அறிமுக இயக்குநர் ரகுபதி முன்பாக போய் நின்றோம்.“கிராமங்களில் இந்த ஒன்பது குழி விளையாட்டு ரொம்ப பிரபலம்.

இதை குண்டு விளையாட்டும்னும் சொல்லுவாங்க. வெட்டி ஆபீஸரான ஹீரோ எப்பவும் இந்த விளையாட்டை விளையாடிக்கிட்டிருப்பான் என்பது மாதிரி பேக்டிராப். விளையாட்டைப் பற்றிய கதை என்பதால் நாங்க விளையாட்டுத்தனமா எடுத்திருக்கோம்னு நெனைச்சுக்காதீங்க. ஒரு அழுக்குப் பையனுக்கும், அழகான பொண்ணுக்கும் சின்சியர் லவ்வுன்னு கவித்துவமான காதல் கதை.

சினிமா மேலே தீராத தாகம் கொண்டவர்களாக சேர்ந்து இணைந்து இந்தப் படத்தை எடுக்கிறோம். வீடு, வாசலைத் துறந்துட்டு படவாய்ப்புக்காக படியேறிக்கிட்டிருந்த பாலாவைப் பிடிச்சி ஹீரோ ஆக்கியிருக்கோம். கேரளத்துப் பைங்கிளி நிகிலாவை ஹீரோயினா பிடிச்சோம். முதல்லே அவங்க எங்க படத்துலேதான் கமிட் ஆனாங்க. ஆனா அதுக்குள்ளே அவங்க அடுத்து நடிச்ச ‘வெற்றிவேல்’ இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு.

இவங்களோட முக்கியமான வேஷம் ஒண்ணுலே அப்புக்குட்டி நடிக்கிறார். அவரோட வாழ்க்கையை தேசிய விருதுக்கு முன், பின்னுன்னு பிரிக்கலாம். எனக்கு அப்புக்குட்டியை ரொம்ப நாளா தெரியும்.

அவரோட கூண்டு ஹேர்ஸ்டைல் மக்களிடையே ரொம்பப் பிரபலம். முதன்முதலா அவரை அந்த ஹேர்ஸ்டைலை எனக்காகத்தான் வளர்க்கச் சொன்னேன். ஆனா, அப்போ உடனே படம் எடுக்குற வாய்ப்பு எனக்கு அமையலை. இல்லைன்னா அப்புவை அறிமுகப்படுத்திய பெருமை சுசீந்திரனுக்கு கிடைச்சிருக்காது. எனக்குதான் கிடைச்சிருக்கும்.

படத்தோட ஸ்பெஷல் ஐட்டம்னு சொல்லணும்னா இசை. யதார்த்தமான படம் என்பதால் பாடல்களும், பின்னணி இசையும் ரொம்பப் பொருத்தமா அமையணும்னு மெனக்கெட்டோம். லைவ் சவுண்ட் ரெக்கார்டிங் பண்ணியிருக்கோம். எங்க இசையமைப்பாளர் சார்லி, படப்பிடிப்புத் தளத்துக்கே வந்து காட்சிகளைப் பார்த்து இசையமைத்தார்.

அவர் விஜய்ஆண்டனி கிட்டே தொழில் கத்துக்கிட்டவரு. திருச்சி பக்கம் இருக்கிற உச்சிவநாதர் கோயிலில் பாடும் திருப்புகழை அப்படியே லைவ்வா ரெக்கார்ட் பண்ணி பயன்படுத்துறோம். நா.முத்துக்குமார், கார்த்திக்நேத்தா ஆகியோர் பாட்டு எழுதியிருக்காங்க. பிரபல எழுத்தாளர் கண்மணி குணசேகரனும் ஓர் ஒப்பாரிப்பாடலை எங்களுக்காக சிறப்பா எழுதிக் கொடுத்திருக்காரு.

ஒளிப்பதிவாளர் கொளஞ்சிகுமார் கிராம அழகை அப்படியே கேமிராவில் சிறைப்பிடிச்சிருக்காரு. விஜயகாந்தும் சண்முகப்பாண்டியனும் இணைந்து நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ படத்துக்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்யறாரு. தயாரிப்பாளர்கள் ரஞ்சித்குமார் பாலு, திருநாவுக்கரசு ரெண்டு பேரும் ரொம்ப தாராளமா செலவு செஞ்சிருக்காங்க. படம் நல்லா வந்திருக்கு!”

- எஸ்