அஜீத்தையும் பிடிக்கும்! விஜய்யையும் பிடிக்கும்!!



புது ஹீரோ ரமீஸ்ராஜா ஐஸ்...

பற்பசை விளம்பரம் பாணியில் பளீர் புன்னகை. சாக்லேட் பாய் லுக். பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி சுறுசுறுவென்று கோலிவுட்டுக்கான அடுத்த ஜெனரேஷன் ஹீரோவாக லேண்டிங் ஆகியிருக்கிறார் ‘டார்லிங்-2’ ரமீஸ்ராஜா.“டைரக்டா ஹீரோதானா?

”“அது பெரிய கதை. பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். படிச்சது என்ஜினியரிங். சின்ன வயசுலேருந்தே சினிமான்னா உயிரு. ஆனா, வீட்டுலே இருக்கிறவங்களுக்கு சினிமா அலர்ஜி. அப்பா, பெரிய பிசினஸ்மேன். அவருக்கு அப்புறம் நான்தான் அந்த தொழில்சாம்ராஜ்யத்துக்கு வாரிசாகணும்னு எதிர்பார்த்தாங்க.

ஆனா, நான் பாட்டுக்கு எப்பவும் சினிமா தியேட்டர்களில் தவம் கிடந்ததால், அப்பாவோட குட்புக்குலே நானில்லை. அவங்க மட்டும் அப்பவே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணியிருந்தாங்கன்னா காலேஜ் படிக்கிறப்பவே ஹீரோ ஆயிட்டிருப்பேன். எப்படியும் வீட்டுலே சப்போர்ட் கிடைக்காதுன்னு தெரிஞ்சப்புறம், யாருக்கும் தெரியாம நானே திருட்டுத்தனமா ஒவ்வொரு கம்பெனியா போய் சான்ஸ் கேட்க ஆரம்பிச்சேன்.

அப்போதான் ‘ஜின்’ என்கிற பேய்ப்படத்தில் டபுள் ஆக்‌ஷன் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாதான் அந்த தலைப்பை ‘டார்லிங்-2’ என்று மாற்றி ஒரு ஹைப் கிரியேட் செய்தார். படத்தை இயக்கிய சதீஷ்சந்திரசேகரனேதான் படத்தை தயாரித்தார். படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் நடந்த நிலையில் சில ஃபைனான்ஸ் பிராப்ளம்ஸ். அப்புறம் நானே நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் பணத்தை வாங்கி ரெடிசெய்து தயாரிப்பாளராகவும் மாறிட்டேன்.”

“ஹீரோயின் மாயாவோடு ரொமான்ஸ் பண்ண ரொம்ப வெட்கப்பட்டிருக்கீங்களே?”“ஸ்க்ரீன்லேயே அப்பட்டமா தெரியுதில்லே? அதுக்கு காரணமும் என் வீடுதான். ஏற்கனவே வீட்டாரோட எதிர்ப்பை மீறி நடிச்சிக்கிட்டிருக்கேன்.

முதல் படத்துலேயே கொஞ்சம் அப்படி இப்படி நடிச்சி அவங்களை கோபப்படுத்திடக் கூடாதுன்னு ரொம்ப கான்சியஸ்ஸா இருந்தேன். அந்த தடுமாற்றம்தான் ரொமான்ஸ் காட்சிகளில் வெளிப்பட்டிருக்கு. அதுவும் டான்ஸ் மூவ்மென்ட்ஸில் ரொம்ப சொதப்பினேன். கூட நடிச்ச மாயாதான் என்னை கூல் பண்ணுவாங்க.”

“வீட்டிலே உங்களை ஹீரோவா ஏத்துக்கிட்டாங்களா?”
“இல்லைங்க. இப்போ வரைக்கும் நான் நடிச்ச படத்தை அவங்க பார்க்கவே இல்லை. தெரிஞ்சவங்க, அக்கம் பக்கம் நண்பர்கள், வீட்டில் வேலை செய்யுறவங்கல்லாம் படம் பார்த்துட்டு என்னைப்பத்தி நல்லவிதமாகத்தான் வீட்டுலே சொல்லியிருக்காங்க. பார்ப்போம், நிலைமை மாறும்னுதான் நெனைக்கிறேன்.”“அடுத்து?”

“ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பா ‘விதி மதி உல்டா’ படத்தை தயாரிக்கிறேன். விதியை மதியால் வெல்லலாம்னு சொல்லுவாங்க இல்லே! அந்த விதியையே முன்கூட்டி அறிஞ்சுக்கற ஹீரோ, தன் மதியாலே தன்னைச் சுற்றியிருக்கிறவங்களை எப்படி காப்பாத்துறான், அதனாலே அவனுக்கு என்னென்ன விளைவு கள் நேருதுன்னு ஜாலியான ஸ்டோரி. ஏ.ஆர்.முருகதாஸோட அசிஸ்டென்ட் விஜய் பாலாஜி டைரக்ட் பண்ணுறாரு. முருகதாஸிடம் ஏழு வருஷம் கத்துக்கிட்ட வித்தை மொத்தத்தையும் இதில் களமிறக்குறாரு.”

“அதிருக்கட்டும். படத்துக்கு ஏன் இப்படி தாறுமாறா ஒரு தலைப்பு?”
“படமே சும்மா தாறுமாறா தெறிக்க விடும். படம் பார்த்தபிறகுதான் இந்தத் தலைப்புக்கு உங்களுக்கு அர்த்தம் புரியும்.

நடிகனா இந்தப் படத்துலே எனக்கு நிறைய வேலை இல்லை. கருணாகரன், டேனியல் பாலாஜி ரெண்டு பேரும்தான் ஹீரோ லெவல். ‘வேட்டையாடு விளையாடு’ டேனியலை நாம மீண்டும் எதிர்பார்க்கலாம். அதே மாதிரி கருணாகரனுக்கு ‘காசு பணம் துட்டு மணி’ ரேஞ்சுக்கு தனிப்பாட்டு ஒண்ணு இருக்கு.”“ஹீரோயின் ஜனனி அய்யர் போலிருக்கே?”

“ம். அந்த சோகத்தை ஏன் கேட்கறீங்க? அழகான ஹீரோயின். ஆனா அவங்களோட ரொமான்ஸ் பண்ணுற மாதிரி சீன்ஸ் இல்லை. ஜாலியா ட்ரீம் டூயட்டாவது கொடுங்கன்னு டைரக்டர் கிட்டே கெஞ்சுனேன். ஸ்க்ரிப்டுக்கு சின்ன சேதாரம் கூட ஆயிடக்கூடாதுன்னு அவர் ஸ்ட்ரிக்ட்டா இருக்காரு. ஜனனி, எனக்கு ஏற்கனவே நல்ல நண்பர்தான்.”“நடிப்பு, தயாரிப்பு. அடுத்தது இயக்கமா?”

“எனக்கு செகண்ட் ஹீரோ, சின்ன ரோல்னு முன்னாடியே ரொம்ப வாய்ப்பு கிடைச்சுது. ஆனா ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன், பெஸ்ட் இம்ப்ரஷனா இருக்கணும்னு வெயிட் பண்ணி ‘டார்லிங்-2’ பண்ணினேன். அந்தப் படம் வளர முடியாதபடி பிரச்சினை ஆனப்போ தயாரிப்பாளராவும் ஆயிட்டேன். எல்லாமே அதுவாதான் அமையுது.

இப்போ தயாரிப்பாளரா நிறைய கதைகளை கேட்கும்போது, நாமளும் டைரக்ட் பண்ணணும்னு ஆசை வருது. ஆனா உடனடியா செய்யப் போறதில்லை. இப்போ சினிமா வினியோகத்துலே ஈடுபடறதைப் பத்தி யோசிச்சிக்கிட்டிருக்கேன். என்னைப் பொறுத்தவரை என்னால் யாரும் நஷ்டப்பட்டுடக் கூடாது. அதனாலே நான் நடிக்கிற படங்களை விஜய் ஆண்டனி பாணியில் நானேதான் தயாரிக்கப் போறேன்.”“சினிமாவில் உங்களுக்கு ரோல் மாடல் யார்?”

“அப்படி குறிப்பிட்டு ஒருத்தரை சொல்ல முடியாது. நடிகராக மட்டுமில்லாமல் மனிதாபிமானம் மிக்க நல்ல மனிதனாகவும் வாழுற அஜீத்சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பெரிய நடிகராக ஆகியும் தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் டான்ஸ், ஸ்டைல், பாடிலேங்குவேஜ் என்று மெனக்கெடும் விஜய் சாரையும் பிடிக்கும்.”

- சுரேஷ்ராஜா