கடவுள் எழுதிய ஸ்க்ரிப்டை நாம மாத்த முடியாது!



அடக்க ஒடுக்கமாக பேசுகிறார் தனுஷ்

தேசிய விருது பெற்ற நடிகரான தனுஷுக்கு என்னவென்று நாம் புதுசாக அறிமுகம் தருவது? நடிகர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்டவர் ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநராகவும் களமிறங்குகிறார். அதற்கு முன்பாக இந்த தீபாவளிக்கு அவர் கொளுத்துகிற சரவெடி ‘கொடி’. முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிப்பவரிடம் ‘வண்ணத்திரை’ தீபாவளி மலருக்காக பேசினோம்.

“நடிக்க வந்து பதினஞ்சு வருஷத்துக்கு அப்புறம்தான் டபுள் ஆக்டிங் பண்ணுறீங்க...”“ஆமாம். நிறைய கெட்டப் பண்ணிட்டேன். ஆனா, டபுள் ஆக்டிங் பண்ணுறதுக்கு ஏத்த கதை அமையவேயில்லை. ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் சொன்ன இந்த ‘கதை’ புடிச்சிருந்தது. ரெட்டைப் பிறவி. ஒரு தனுஷ் தாடியெல்லாம் வெச்சிக்கிட்டு அரசியல்வாதி. அவனுக்கு திரிஷா ஜோடி. இன்னொண்ணு நார்மல் தனுஷ். அவனுக்கு மலையாளத்துலே ‘பிரேமம்’ பண்ண அனுபமா பரமேஸ்வரன் ஜோடி.

டபுள் ஆக்டிங் இவ்வளவு கஷ்டமா இருக்கும்னு நான் நெனைச்சிகூட பார்த்ததில்லை. தாடி கெட்டப், நார்மல் கெட்டப்புன்னு மாத்தி மாத்தி நடிக்கிறப்போ எனக்கு கன்ஃப்யூஸ் ஆயிடிச்சி. தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லாம் எவ்வளவு பாடுபட்டிருப்பாங்க? டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆயிட்ட இப்பவே டபுள் ஆக்டிங் இவ்வளவு கஷ்டமுன்னா அறுபது வருஷமா என்னோட முன்னோடிகள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பாங்கன்னு நெனைச்சு நெகிழ்ந்துட்டேன்.”

“திரிஷாவும், நீங்களும் கிட்டத்தட்ட ஒரே டைமில் கேரியர் ஸ்டார்ட் பண்ணவங்க. ஆனா, இப்போதான் முதல் தடவையா ஜோடி சேருறீங்க...”“முன்னாடியே அமைஞ்சிருக்க வேண்டியது. ‘ஆடுகளம்’ படத்தில் டாப்ஸி நடிச்ச ரோலில் அவங்கதான் பண்ணினாங்க. சில நாட்கள் ஷூட்டிங் கூட நடந்தது. கடுமையான கால்ஷீட் பிரச்னை காரணமா அவங்களாலே கண்டினியூ பண்ண முடியலை. அதுக்கப்புறம் இப்போதான் நேரம், காலம் அமைஞ்சது. எங்க ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி ஸ்க்ரீனில் செமையா எடுபடும்.”

“இந்தப் படத்துலே அரசியலெல்லாம் பேசுறீங்க போல...”(அவருடைய மாமனார் ரஜினி மாதிரியே தலைக்கு மேலாக கைகளை குவித்து பெரிய கும்பிடு போடுகிறார்.)“அரசியல் சம்பந்தப்பட்ட கதைதான். அதுக்காக யாரையும் தாக்கியோ, கிண்டலடித்தோ, நோகடித்தோ செய்யலை. அதே மாதிரி எனக்கு அரசியல் சார்பு எதுவுமில்லை. இது படம். இது கதை.

அதுக்கு மேலே இதில் என்னோட கருத்துன்னு எதையும் பார்க்காதீங்க. அரசியலில் இருக்கும் நல்லது, கெட்டது ரெண்டையும் சமமா பார்த்திருக்கோம். இளைஞர்கள் அரசியலில் ஈடுபடலாமா என்கிற விவாதத்தையும் முன்வெச்சிருக்கோம். மத்தபடி இது முழுநீள அரசியல் படமில்லை. வழக்கமான தனுஷின் கமர்ஷியல் மசாலா ஃபார்முலா இதிலும் உண்டு.”
“அப்பாவா கருணாஸ்?”

“எம்.எல்.ஏ எனக்கு அப்பாவா நடிக்கிறார் என்பது எனக்கு பெருமைதான். அதேமாதிரி தமிழ் சினிமாவின் ஏகோபித்த ஆதரவு பெற்ற அம்மாவான சரண்யா, அம்மாவா வர்றாங்க. இவங்க ரெண்டு பேரும் செம காம்பினேஷன்.”“சந்தோஷ் நாராயணன் முதல் தடவையா உங்களுக்கு மியூசிக் செய்யுறாரு...”“ரொம்ப பெரிய திறமைசாலி.

‘குக்கூ’வுக்கு அவர் போட்ட மியூசிக் இன்னும் என் காதுலே ஒலிச்சிக்கிட்டே இருக்கு. இந்த காலகட்டத்தில் ஓர் இசையமைப்பாளர் தனக்கான தனித்துவமான அடையாளத்தை உருவாக்குறது ரொம்ப கஷ்டம். சந்தோஷ் அதை சாதிச்சிருக்காரு. பாட்டுங்க மட்டுமில்லாமே பின்னணி இசையும் பிரமாதமா பண்ணுறாரு. ‘கபாலி’யிலே ‘நெருப்புடா’ பாடின அருண் காமராஜோட சேர்ந்து ‘கொடி பறக்குதா?’ன்னு ஒரு பாட்டு நானும் பாடியிருக்கேன்.”

“உங்க மனைவி ஐஸ்வர்யா படத்தில் நீங்க மீண்டும் நடிக்கப் போறதா...”“அப்படின்னு எல்லாரும் சொல்றாங்க. ஆமாவான்னு அவங்களை திருப்பி கேட்டுக்கிட்டிருக்கேன். ‘3’, ‘வை ராஜா வை’ படங்களை தொடர்ந்து மூணாவது படத்தை ஐஸ்வர்யா இயக்கப் போறது உண்மைதான். அதில் நான் இருக்கேனான்னு ஐஸ்வர்யாதான் சொல்லணும். அவங்கதானே இயக்குநர்.

ஆனா, அது என்னோட ‘வொண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிப்புதான். அதே மாதிரி ஐஸ்வர்யாவோட தங்கை சவுந்தர்யா, ‘கோச்சடையான்’ படத்துக்குப் பிறகு இயக்கப் போகிற படத்திலும் நான் ஹீரோ என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். இதுவும் எனக்குத் தெரியாது. நாங்க எல்லாரும் ஒரே குடும்பம்தான். ஆனா, அதுக்காக நாங்க எடுக்கிற படத்தில் நாங்க மட்டுமே இருக்கணும்னு கட்டாயம் எதுவும் கிடையாது.”
“பாலிவுட்டில் அடுத்த படம் எப்போ?”

“ஹாலிவுட்டுக்கே போயிட்டேன். இப்போ பாலிவுட் பத்தி கேட்கறீங்க? இந்தியில் ரெண்டு படம் பண்ணிட்டேன். நல்ல பேரு கிடைச்சிருக்கு. அடுத்தடுத்து பேசிக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா, நல்ல கதை கிடைச்சா மட்டும்தான் அங்கே பண்ணணும்னு முடிவு. ஹாலிவுட் ஷூட்டிங், அடுத்த வருஷம் பிப்ரவரியில் தொடங்குது.

எந்த மொழியில் நடிச்சாலும் தமிழுக்குதான் முதலிடம், முன்னுரிமை எல்லாமே. நம்ம தாய்மொழியில் பேசி நடிச்சாதான் நடிச்ச திருப்தி முழுசா கிடைக்குது.”“திடீருன்னு டைரக்‌ஷனில் குதிச்சிட்டீங்க?”

“திடீருன்னுலாம் இல்லை. ரொம்ப நாள் கனவுதான். இந்த ‘பவர் பாண்டி’ கதையை மூணு வருஷம் முன்னாடியே எழுதிட்டேன். என்னை ஹீரோவாக்கி அழகு பார்த்த என் அண்ணன் செல்வராகவன்தான் முதலில் படிச்சாரு. ‘ரொம்ப நல்லாருக்குடா. நீ நல்லா செய்வே’ன்னு வாழ்த்தினாரு. ஹாலிவுட் போறதுக்கு முன்னாடி இங்கே டைரக்டர் ஆயிடணும்னு இப்போ நேரம் கிடைச்சதுமே செய்ய ஆரம்பிச்சிட்டேன்.

இதுவரைக்கும் எடுத்த காட்சிகளை ‘ரஷ்’ போட்டு அண்ணனுக்கு காட்டினேன். ‘ஜெயிச்சிட்டேடா’ன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் ரொம்ப தெம்பா வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். இதுவரை ஈடுபட்ட துறைகளில் என்னை வெற்றிபெற வைத்த ரசிகர்கள், டைரக்‌ஷன் துறையிலும் மிகப்பெரிய வெற்றியை தேடித் தருவார்கள்னு நம்பறேன்.”

“நீங்க டைரக்ட் பண்ணுற படத்துல நீங்களே ஹீரோவா நடிச்சிருக்கலாமே?”“இந்த பாத்திரத்துக்கு ராஜ்கிரண் சார் மட்டுமே பொருத்தமா இருப்பாரு. ஸ்டண்ட் நடிகரா நடிக்கிறாரு. கதைக்காகத்தான் ஹீரோவே தவிர, ஹீரோவுக்காக கதை கிடையாது. என் அப்பா இயக்குநரா அறிமுகமான படத்துலே நடிச்ச ஹீரோவே, நான் இயக்குநரா அறிமுகமாகிற படத்திலும் நடிப்பது என்பது கடவுள் நம்மோட விளையாடுற ஆச்சரிய விளையாட்டு.

இதெல்லாம் ஏற்கனவே கடவுளால் எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட். நாம நினைச்சாலும் மாத்த முடியாது. நானெல்லாம் பிறக்குறதுக்கு முன்னாடியே சினிமாத் துறைக்கு வந்தவர் ராஜ்கிரண். அவர் செய்யாத சாதனைகள் கிடையாது. அப்படிப்பட்டவர், என் படத்துலே நடிக்கிறப்போ நடிகராக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கிறாரு. சாதனையாளர்களோட குணமே இந்த அடக்கம்தான்.”

“இந்த கதையை கேள்விப்பட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் எல்லாரும் உங்களை கொண்டாடுறாங்களாமே?”“தெரியலை. எனக்கு ஸ்டண்ட் கலைஞர்கள் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. தமிழ் சினிமாவோட மாஸ் ஹீரோக்களின் வெற்றியில் பெரும்பங்கு அவர்களுக்கு இருக்கு.

ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கணும்னு என்னோட மனைவி ஐஸ்வர்யா, மத்திய அமைச்சரை நேரில் சந்திச்சி கோரிக்கை வெச்சிருக்காங்க. அந்த நிகழ்வை, என்னோட படத்துக்கு பிரமோஷன் என்பது மாதிரி சிலபேர் பேசினதா கேள்விப்பட்டு வருத்தம் அடைஞ்சேன்.

என் கதையை நான் மூணு வருஷம் முன்னாடியே எழுதிட்டேன் என்பது அப்படி புரளி பேசுபவர்களுக்கும் தெரியும். அதுவுமில்லாமே ஐஸ்வர்யாவுக்கு ஸ்டண்ட் கலைஞர்கள் மீது அக்கறையும், ஈடுபாடும் உண்டு. அவங்களோட வாழ்க்கையை முன்வெச்சி ‘சினிமா வீரன்’ என்கிற ஆவணப்படத்தைக்கூட அவங்க இயக்கியிருக்காங்க.”

“சூப்பர் ஸ்டாரை வெச்சி படம் தயாரிக்கிறீங்க...”“எல்லாம் ஆண்டவன் அருள். இந்தப் படத்துலே நானும் நடிக்கணும்னு நிறைய பேர் சொல்றாங்க. அதை டைரக்டர் பா.இரஞ்சித்தான் முடிவு பண்ணணும்.

இப்போதைக்கு ஹீரோ சூப்பர் ஸ்டார், டைரக்டர் இரஞ்சித் என்பது மட்டும்தான் முடிவாகியிருக்கு. மத்த விஷயமெல்லாம் முறையா அறிவிக்கப்படும். படம், அடுத்த வருஷம் மத்தியில் டேக் ஆஃப் ஆகும். அவர் நடிக்கிற படத்தை தயாரிக்கிறது எனக்கு பெரிய கவுரவம் மட்டுமல்ல, மிகப்பெரிய பொறுப்பும்கூட. நல்லபடியா முடிக்கணுமேன்னு இப்பவே பதட்டமா இருக்கு.”“தமிழில் அடுத்து?”

“கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ பண்ணிக்கிட்டிருக்கேன். என்னை எனக்கே புதுசா காட்டுற படம் இது. அப்புறம் எனக்கும், நண்பன் வெற்றிமாறனுக்கும் நீண்டகால லட்சியமா இருக்கிற ‘வடசென்னை’.

முதுகெலும்பு மாதிரி மெயின் கதையில் பக்கவாட்டு எலும்புகள் மாதிரி நிறைய கிளைக்கதைகள். இந்தக் கதையை ஸ்க்ரீனில் சொல்ல எட்டு, ஒன்பது மணி நேரம் தேவைப்படுறதாலே மூணு பாகமா ரிலீஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அடுத்த வருஷம் இறுதியிலே முதல் பாகம் வெளிவரும்.”