உறுதிகொள்



காதலனைத் துரத்தும் காதலி

ஒரு நார்மல் பள்ளிக்கூடத்தில் +2 மாணவர் கிஷோர் பிட் அடித்த காரணத்துக்காக வெளியேற்றப்படுகிறார். அதே சமயம் வீட்டைவிட்டும் துரத்தப்படுகிறார். இதற்கிடையே ஊர் பிரமுகரின் மகள் மேகனா கிஷோரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் கிஷோரின் காதலி, தங்கை உள்பட சில இளம் பெண்கள் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார்கள். 

அதன்பின், அந்த கடத்தல்காரர்கள் யார் யார் என்று கதை விரிகிறது. இறுதியில் என்ன ஆனது? உண்மையான கடத்தல்காரர் யார்? எதற்காகக் கடத்தினார்கள் ? என்பதே இந்த ‘உறுதிகொள்’. ‘கோலிசோடா’ கிஷோருக்கு பள்ளி மாணவன் வேடம் கச்சிதம். அருமையான நடிப்பையும் கொடுத்துள்ளார். படம் முழுக்க பயணிக்கவில்லை என்றாலும் மனதில் நிற்கிறார் மேகனா. இருவரும் தங்கள் வேலையை சிறப்பாகச் செய்துள்ளனர்.

வில்லன்களாக நடித்திருக்கும் புதுமுகங்கள் கவனிக்கவைக்கிறார்கள். தங்கையாக வரும் தீபா, அப்பாவாக வரும் தென்னவன், அம்மாவாக வரும் சர்மிளா தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். காளிவெங்கட், அகிலேஷ் இருவரும் காமெடியில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஜூட் லினிகர் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையிலும் குறையொன்றுமில்லை.

பாண்டி அருணாசலத்தின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்து, படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இயக்குனர் ஆர்.அய்யனாரின் முதல் முயற்சியே நன்றாக வந்துள்ளது. பள்ளி வாழ்க்கையை மையமாக வைத்து கமர்ஷியல் படத்தைக் கொடுத்ததற்காக அவரை நிச்சயம் பாராட்டலாம்.