சென்சாரோடு மோதிய படம்!



இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் என்பதாலேயே அவருடைய சிஷ்யர் ராகேஷ் இயக்கியுள்ள ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்துக்கு எதிர்பார்ப்பு இண்டஸ்ட்ரியில் ஏகத்துக்கும் கூடியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்தைப் பற்றி அதில் பணியாற்றிய கலைஞர்கள் தங்கள் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்தப் படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி,​ ​சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ், ஜே.டி சக்கரவர்த்தி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

தயாரிப்பாளர் மதியழகன் சொல்லும்போது, ‘‘இது எங்களது தயாரிப்பில் உருவாகியுள்ள எட்டாவது படம். சமூக விழிப்புணர்வுடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு சென்சார் சர்டி​ஃ​பிகேட் வாங்குவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’க்கு ‘ஏ’ சான்றிதழ் தருகிறார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு சான்றிதழே தர மறுத்துவிட்டார்கள்.

ஒரு நீண்ட போராட்டத்துக்குப்பின்தான் சான்றிதழே பெறமுடிந்தது. இதுவரை எட்டு படங்கள் எடுத்துள்ளோம். இந்தப் படம் எங்களுக்கான முத்திரையாக அமையும். இதுபோன்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம். அப்போதுதான் இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து தரமுடியும்’’ என்றார்.

‘‘இந்தப் படத்தின் தலைப்பையே ​​இயக்கு​நர் பொதுமக்களை​ப்​ பார்த்துக் கேட்பது போலத்தான் இயக்குநர் வைத்துள்ளார். காரணம், ரோட்டில் வழிப்பறி போல எந்த சம்பவம் நடந்தாலும் நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ என​ப்​ பயந்து, மறைந்திருந்துதான் பார்க்கிறோம். அதை​​ தடுக்க முயற்சிப்பதில்லை. விழிப்புணர்வு நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம் இது’’ என்றார் ​நடிகர் ​பாரதி மோகன்.

முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மாஸ் ரவி பேசும்போது, ‘‘டைரக்டர் ராகேஷ் என்னை​க்​ கூப்பிட்டு, இந்தப் படத்துல ஒரு நல்ல கேரக்டர் இருக்குன்னு சொல்லி ‘சப்பை’ங்கிற கேரக்டர்ல நடிக்க வெச்சிருக்கார். செயின் அறுக்கிற ஆளாதான் நடிச்சிருக்கேன். இதுக்காக ஏராளமான பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் பிக்பாக்கெட்காரர்களை நோட்டம் விட்டு நோட்ஸ் எடுத்து நடித்தேன்’’ என்றார்.

நடிகர் மனோபாலா பேசும்போது, ‘‘ராகேஷோட இந்த இரண்டாவது படத்துலயும் நான் நடிச்சிருக்கேன். பொதுவாக நான் நடிக்கும் படங்களில் என்னுடைய வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படங்களில் மூழ்கிவிடுவேன். ஆனால் இந்தப் படம் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல். அதான் இந்தப் படத்தின் புரோமோஷன் வேலைகளில் தவறாமல் கலந்து கொள்கிறேன்’’ என்றார்.

மைம் கோபி பேசும்போது, ‘‘இந்தப் படத்துல செயின் அறுக்கிற கூட்டத்துக்கு தலைவனா நடிச்சிருக்கேன். இந்தப்படம் வெளியான பின்னாடி அநேகமாக செயின் அறுக்க என்னைத்தான் கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன். நான் தான் ஸ்கெட்ச் போட்டுத் தரணும்’’ என்றார்.

படத்தின் நாயகன் துருவா பேசும்போது, ‘‘சென்சாரில் சான்றிதழ் கொடுக்க மறுத்து, அது பத்திரிகை மூலமாக செய்தியாக வெளியானப்பதான் இப்படி ஒரு படம் இருக்குன்னே வெளியே தெரிஞ்சது. டைரக்டர் ராகேஷ் மத்த எல்லா யூனியன்லேயும் கார்டு வாங்குற அளவுக்கு எல்லா வேலையையும் இறங்கி செஞ்சாரு. எனக்கு ஜோடியா வர்ற ஐஸ்வர்யாதத்தாவும் அஞ்சனாவும் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்கள்” என்றார்.

முத்தாய்ப்பாக ​இயக்குநர் ராகேஷ் பேசும்போது, ‘‘எத்தனையோ போராட்டச் செய்திகள் புதுசு புதுசா தினசரி பேப்பர்ல வந்தாலும் நாள் தவறாம இடம் பிடிச்சுட்டு வர்றது செயின் பறிப்பு சம்பவங்கள்தான். அதுதான் இந்தப் படத்தை எடுக்க என்னைத் தூண்டுச்சு.  நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் நகை அணிந்துகொண்டு தனியாக நடந்துபோனா அதுதான் உண்மையான சுதந்திரம்னு மகாத்மா காந்தி சொன்னார்.

ஆனா இன்னைக்கு பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமாக நடமாட முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதைச் சொல்லித்தான் படத்தையே ஆரம்பிக்கிறோம்.என்னுடைய முதல் படம் வெளியாகி எட்டு வருடத்துக்குப்பின் இந்தப் படம் கிடைத்துள்ளது.

(​சொல்லும்போதே கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று கொட்டுகிறது. அருகிலிருந்த ​இயக்குநர் மனோபாலா தோள்மேல் கைபோட்டு தேற்றி கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறார்.) தயாரிப்பாளர் மதியழகனுக்கு எத்தனை கோடி முறை நன்றி சொன்னாலும் பத்தாது.

இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள துருவாவுக்கு இது முக்கியமான படம். கோடம்பாக்க இயக்குநர்களின் பார்வை இனிமேல் துருவா மீது அதிகமாக இருக்கும். அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். குன்றத்தூர் அருகே படப்பிடிப்பு நடைபெற்றபோது ஓடிவந்த வேகத்தில் தடுக்கி விழுந்து, பின்னர் மீண்டும் எழுந்து ஓடிப்போய் கொஞ்சம் தள்ளி கீழே விழுந்து கிடக்கும் சரண்யா மேடத்தைத் தூக்கவேண்டிய காட்சியில் அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார்.

அவர் கீழே விழுந்ததும் நான் கட் சொல்ல முயற்சிக்க, ஒளிப்பதிவாளர் முத்தையா குறுக்கிட்டு என்னைத் தடுத்துவிட்டார். அதனாலேயே அந்தக் காட்சி ரொம்ப இயல்பாக வந்துவிட்டது. எடிட்டர் ஷான் லோகேஷ் கூட  எப்படி இந்த​க்​ காட்சியை தத்ரூபமாக படமாக்கினீர்கள் என வியந்தார். நான் ஒண்ணு சொன்னேன். அதை அவங்க சரியா செய்யாததால், அந்தக் காட்சி கரெக்ட்டா வந்துருச்சுன்னு அவர்கிட்டே சொன்னேன்’’ என படப்பிடிப்பு அனுபவம் பகிர்ந்தவர், அப்படியே சென்சார் மேட்டருக்கு தாவினார்.

‘‘சென்சாரில் நாம் எதற்காக ஒரு காட்சியை எடுக்கிறோம் என​ப்​ புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். மொபைலில் பேசிக்கொண்டே பைக் ஓட்டுனா விபத்துல சிக்குவீங்கன்னு என ஒரு செய்தியைச் சொல்ல வந்தா, அவர்களோ ரத்தம் சிவப்பாக இருக்கிறது, பச்சைக் கலருக்கு மாற்றுங்கள் என்கிறார்கள்.

பெண்கள் எந்தவிதமாகவெல்லாம் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு அவர்களது நகைகள் பறிக்கப்படுகிறது என அவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக காட்சிகளை அமைத்தால், அந்தக் காட்சிகளைப் பார்த்துவிட்டு, நீங்களே செயின் அறுக்கும் வழிகளைச் சொல்லிக்கொடுக்கிறீர்களா எனக் கேட்கிறார்கள்.

நானும் திரைப்படக்​ கல்லூரியில் படித்தவன்தான். அதில் சென்சார் என்கிற ஒரு பாடமே இருக்கிறது. உங்களுக்கு சென்சார் ரூல் தெரியுமா என என்னைக் கேட்ட அதிகாரியிடம், அதைப் படிச்சுட்டு வந்தீங்கன்னா நீங்க டைரக்டர் ஆகியிருக்க வேண்டியது தானே சார்னு திருப்பி​க்​ கேட்டேன். இதைச் சொன்னதுக்குத்தான் சான்றிதழ் தரமுடியாதுன்னு திருப்பி அனுப்பிச்சிட்டாங்க. அதுக்கப்புறம் போராட்டம் பண்ணி, அந்த டீம் மாறிய பின்னாடி ஒருவழியாக சான்றிதழ் வாங்கினோம்’’ என்கிறார்.

​இயக்கு​நர் ராகேஷ் பேசியபோது ஆரம்பத்தில் பேசமுடியாமல் கண்கலங்க, எழுந்துவந்து அவரை ஆறுதல்படுத்திய மனோபாலா, “நான் முதல் படம் பண்ணிட்டு மூணு வருஷம் கழிச்சுத்தான் எனக்கு அடுத்த படம் கிடைச்சுது. அதுல என்னை நிரூபிச்சு வெளியே வந்தவன் தான் நான். அவுட்டோர்ல  இருநூறு ரூபா கொடுத்து என்னைய ரிசப்ஷன்லேயே விட்டுட்டு​ப்​ போன கதையெல்லாம் இருக்கு. ஏன், அதுகூட கொடுக்காம போன கதையும் நிறைய இருக்கு. நம்ம வெற்றியாலதான் மத்தவங்களுக்கு பதில் சொல்லணும்’’ எனத்​ தேற்றினார்.

- சுரேஷ்ராஜா