ஆனந்தம் வசனகர்த்தா பிருந்தாசாரதி



டைட்டில்ஸ் டாக் 90

ஆனந்தம் என்பது வெறும் சொல்லல்ல. அது ஒரு மனநிலை. அந்நிலையை அடைந்தபிறகு அதற்குக் கீழான நிலைகளை மனது நினைத்துக் கூடப் பார்க்காது. ஆம்... எல்லாச் சொற்களுக்கும் எதிர்ச் சொற்கள் உண்டு. இன்பம் / துன்பம், மேடு / பள்ளம், வெளிச்சம் / இருட்டு இது போன்று... ஆனால் ஆனந்தம் என்பதற்கு எதிர்ச்சொல் ஏதுமில்லை. அந்நிலை மகிழ்ச்சியல்ல. மகிழ்ச்சி என்றால் மறுபக்கம் துன்பமுண்டு...

இது உலகின் நல்லது கெட்டது எல்லாவற்றையும் ஆராய்ந்து, கெட்டது எது எது என்பதை ஒவ்வொன்றாக அறிந்து அதிலிருந்து மனதை விலக்கி விலக்கி நல்லதின் பால் நிலை கொண்ட அறிவு அது. அதனால் அங்கு ஏற்றமும் இல்லை... இறக்கமும் இல்லை... புற உலகின் ஏற்ற இறக்கங்கள் எதுவும் அந்நிலை அடைந்தோரின் அகத்தைப் பாதிப்பதில்லை.

இப்படி ஒரு தலைப்பை இயக்குநர் என் நண்பர் என்.லிங்குசாமியின் முதல் திரைப்படத்திற்குப் பெயராக வைத்தோம். ஆம்... இருவரும் சேர்ந்து வைத்த தலைப்புதான் அது. அந்நாட்களில் எங்கள் இருவரையும் தனித்தனியே பார்ப்பது அரிது. கும்பகோணத்திலேயே கவிதை எங்களை இணைத்திருந்தது. அது சென்னையிலும் தொடர்ந்தது.

உதவி இயக்குநர்களாக வாய்ப்புத் தேடி சென்னை வந்த சில நாட்களிலேயே இருவரும் ஒன்றாகத் தங்குவதென முடிவெடுத்து ஒரே அறை பிடித்து தங்கினோம். வேறு சில நண்பர்களும் பின் அவ்வறையில் வந்து சேர்ந்தனர்.நான் நடிகரும் இயக்குநருமான நாசர் அவர்களிடம் ‘அவதாரம்’ படத்திலும், அவர் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அவர்களிடம் ‘மகாபிரபு’ படத்திலும் உதவி இயக்குநர்களாகச் சேர்ந்தோம்.

எங்கள் இருவரைத் தவிர அவ்வறையில் வசந்தபாலன், மணிபாரதி, நந்தா பெரியசாமி, பரணி (இப்போது தெலுங்கு படங்களில் கேமராமேனாகப் பணியாற்றுகிறார்) ஆகியோர் தங்கியிருந்தார்கள்.

பாலாஜி சக்திவேல் அவ்வப்போது வந்து போவார்.உண்மையில் ஆனந்தமான நாட்கள் அவை. சினிமாவைக் கனவு கண்டு அதற்குள் பணியாற்றிக்கொண்டு எதிர்காலத்தில் ஏதேதோ சாதிக்கும் எண்ணங்களோடு வாழ்ந்த நாட்கள்.  அதே எண்ணம் கொண்ட இன்னும் சில நண்பர்களோடு உரையாடி மகிழ்ந்த நாட்கள்.

பொருளாதார ரீதியாக யாருக்கும் எந்த வருமானமும் இல்லை. ஆனால் அதைப் பற்றிய கவலையுமில்லை. எப்போதும் யாரோ ஒருவருடைய கதையைப் பேசிக் கொண்டிருப்போம். வசந்தபாலன் இயக்குநர் ஷங்கரிடம் வேலை செய்ததாலும் லிங்குசாமியின் குடும்பத்தினர் அடிக்கடி சென்னை வந்து சென்றதாலும் கொஞ்சம் காசு புரளும். ஆனாலும் நாங்களே சமைத்துச் சாப்பிட்ட அந்த வாழ்க்கை ஆனந்தமாய் இனித்துக் கொண்டே இருக்கிறது இப்போதும் நினைவில்....

லிங்குசாமியும், நானும் தலா மூன்று படங்களில் பணியாற்றிய பிறகு உதவி இயக்குநராகப் பணிபுரிந்தது போதும் என்று தோன்றியது. அதன்பிறகு தனியே படம் எடுக்கும் முயற்சியில் வெவ்வெறு கதைகளைப் பேசினோம்.

ஒரு நாள் லிங்குசாமி கும்பகோணம் போயிருந்தபோது திருச்சேறையில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து தன் வீட்டில் நடந்த சில சம்பவங்களைக் கூறினார். கதை என்று எதை எதையோ தேடிக் கொண்டிருக்கிறோம்... அதுவெல்லாம் கதையல்ல... ரத்தமும் சதையுமாக இருக்கும் இதுதான் கதை. கண்ணீரும் புன்னகையும் எந்த அலங்காரமும் இல்லாமல் உண்மையாக இருக்கிறது. இதை வைத்து படமெடுக்கலாம் என்று கூறினேன்.

அதன் பிறகு அவர் குடும்பத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை எழுதத் தொடங்கினார். ஏறக்குறைய 120 சம்பவங்கள். அவற்றை ஒரு திரைக்கதையில் கொண்டு வந்து 70 காட்சிகளை மட்டும் அடுக்கி கொஞ்சம் கற்பனைக் கதையை இணைப்பதற்காகச் சேர்த்து ‘திருப்பதி சாமி குடும்பம்’ என்ற பெயரில் உருவாக்கினோம்.

அதுதான் பின்னர் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று பெயர் மாறி கடைசியில் ‘ஆனந்தம்’ ஆனது. இரண்டு மூன்று தயாரிப்பாளர்களிடம் போய் கடைசியாக சூப்பர் குட் பிலிம்ஸ் வந்து சேர்ந்தோம்.

நான் வைத்திருந்த டி.வி.எஸ் 50-ல்தான் இருவரும் தயாரிப்பாளர்கள் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் போவோம். இதை பல்வேறு பேட்டிகளில் லிங்குசாமியே கூறிவிட்டார். அதனால் நானும் கூறுவதில் தவறில்லை.லிங்குசாமி இயக்கத்தில் ‘ஆனந்தம்’ திரைப்படமாக ஆவது உறுதியான பிறகு என்னைத் தன் உதவி இயக்குநர் என்று கூறுவது தனக்கு முடியாது என்று கூறி அந்தப் படத்தில் என்னை வசனம் எழுதும்படிக் கூறினார்.

நான் வசனகர்த்தா ஆனது இப்படித்தான். ‘ஆனந்தம்‘ கதை செல்லுலாய்டில் மம்முட்டி, முரளி, விஜயகுமார், டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா, தேவயானி, ரம்பா, சினேகா ஆகியோர் நடிப்பில் உருவான ஒவ்வொரு நாளும் ஆனந்தம்தான்.

தினசரி காட்சிகளை எடுத்து வைத்து எழுதுவோம். வசனங்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கும். அந்தப் படத்தில் எனக்கு தனித்துவமான ஒரு பெயர் கிடைத்தது. அது என் வாழ்வின் மறக்க முடியாதொரு ஆனந்தம் என்றே சொல்வேன்.

உண்மையில் லிங்குசாமி ஆனந்தம் எனும் நிலையை மனதால் தொட்டவர் என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் அறிந்திருக்கிறேன். 2000ம் வருடத்தில் ‘ஆனந்தம்’ வெளிவந்தது. இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் ஒன்பது படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார். எந்தப் பரபரப்புமில்லை. கதை தயாராகிறவரை யாருடைய நிர்ப்பந்தத்துக்காகவோ, வாய்ப்பு வருகிறது என்பதற்காகவோ படப்பிடிப்புக்குப் போகமாட்டார்.

அதேபோல் இடை இடையே வந்த தோல்விகளில் சரிந்து கீழே விழுந்து விடவும் இல்லை. உடனே எழுந்து அடுத்த வேலைக்குப் போய்விடுவார்.சில ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சிறு சிறு படங்களை தன் ரசனைக்கேற்றவாறு தயாரித்தும் விநியோகித்தும் வந்தார். அவற்றில் இருந்தே அவரது ரசனைக்காக வெற்றியும் பெற்றார்.

‘கும்கி’, ‘சதுரங்க வேட்டை’, ‘கோலிசோடா’ போன்றவை நல்ல வசூலையும் கொடுத்தன.ஆனால் அவரது தயாரிப்பில் உருவான பெரிய பட்ஜெட் படமொன்று எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போனது. சில நாட்கள் அந்த ‘அப்செட்’டில் இருந்தவர் ‘பந்தயக் குதிரை’ போல் பாய்ந்தெழுந்தார்.

அடுத்தடுத்து மூன்று கதைகள் பேசினோம். அலுவலகத்தில் காலை ஐந்து மணிக்கே ‘டிஸ்கஷன்’. ஒன்பது மணிக்கு மேல் பல நிர்வாக வேலைகள். மீண்டும் மாலை நாலு முதல் எட்டு வரை டிஸ்கஷன்.படபடவென வேலை செய்தார். அதுதான் லிங்குசாமி.

அதுதான் நான் ஆரம்பத்திலேயே சொன்ன ‘ஆனந்தம்’ என்ற நிலை. அந்நிலையைத் தொட்ட பிறகு  வெளியுலக வெற்றி தோல்வி எல்லாம் ஒன்றுமேயில்லை. பணம் வந்தது. போனது. மீண்டும் வந்து கொண்டிருக்கும். ஆனால் மனநிலைதான் முக்கியம். அது அவரது புன்னகையைப் பார்த்தாலே புரியும். அது எப்போதும் ஒரேமாதிரி இருக்கும். வந்த துன்ப நெருப்பை எரிக்கும் சிரிப்பு அது.

இப்போது ‘சண்டக்கோழி-2’ வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றி அவருடைய உழைப்புக்கும் முயற்சிக்குமான வெற்றி. அவரைச் சுற்றியுள்ள நிறைய பேர் அவர் மீது கொண்டிருக்கும் அன்புக்குக் கிடைத்த வெற்றி. முகமறியாதவர்கள் கூட லிங்குசாமி வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறார்கள். அவருடைய மேடைப் பேச்சால், தொலைக்காட்சி நேர்காணல்களால் உந்துதல் பெற்றோம் என்று எத்தனையோ உதவி இயக்குநர்களின் சொற்களில் லிங்குசாமியின் மீதான அன்பு கசிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.

அவசியமான உதவி ஒருவருக்குத் தேவையென்றால் கடன் வாங்கியாவது உதவி செய்வார். விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்ந்துவிட்டு லிங்குசாமிக்குப் போன் செய்தவருக்கு நெருக்கடியான ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி உதவினார். அன்று அந்த உள்ளம் எனக்கு வியப்பளிக்கவில்லை. ஏனெனில் 750 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு வேலை செய்தபோதும் அவர் அப்படித்தான் இருந்தார்.

முக்கியமாக காலை மாலை இரவு மூன்று வேளையும் தியானம் செய்யும் பழக்கம் லிங்குசாமியிடம் இருபத்தி இரண்டு ஆண்டுகளாக இருக்கிறது. மனதைச் சுத்தப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதா என்ன? அதை அத்தியானம் வழங்குவதாக நம்புகிறார். தன் நண்பர்களுக்கும் அதைச் சொல்லிக் கொடுப்பார். ஆனந்தம் என்பது, தான் அனுபவிப்பதல்ல... தன்னைச் சுற்றி எங்கும் பரவவிடுவது என்பதை அவர் உணர்த்தும் விதம் அது.

நான் இயக்கிய ‘தித்திக்குதே’ திரைப்படத்திற்குப் பிறகு பெரிய இடைவெளி விழுந்தது. லிங்குசாமி தொலைபேசியில் அழைத்து ‘பையா’ படத்திற்கு வசனம் எழுதச் சொன்னார்.‘ஆனந்தம்’ கூட்டுக் குடும்ப வாழ்வின் உன்னதத்தைச் சொன்னது போல் ‘பையா’வில் காதலைச் சொல்ல வேண்டும் என்று வேலை செய்தேன்.

மென்மையான உரையாடல்கள்... பெங்களூருவில் இருந்து மும்பை வரை ஒரு பெண்ணுடன் நாயகன் பயணம் செய்யும்போதே காதலை வெளிப்படுத்த வேண்டும். உரையாடல் மூலமே கதை நகரும். உண்மையில் அந்தப் படத்திற்கு வசனம் எழுதியது ஒரு ஆனந்தமான அனுபவம்தான். பின் ‘வேட்டை’, ‘அஞ்சான்’, ‘சண்டக்கோழி-2’ எனத் தொடர்கிறது.

விதவிதமான கதைக் களங்களுக்குள் மூழ்கி பல்வேறு கதாபாத்திரங்களாக நாமே மாறி அவர்களைப் போல் நாம் யோசித்து வாழும் இந்த படைப்புலக வாழ்க்கை ஆனந்தமான ஒன்றுதான். அதில் நிலைத்திருக்கவே விரும்புகிறேன். இன்னும் சொல்வதென்றால் அடிப்படையில் நான் ஒரு கவிஞன். என் ஒவ்வொரு கவிதை நூல் வெளிவரும்போதும் ஏற்படும் உணர்வும் ஆனந்தம்தான்.

நடை வண்டி, ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம், பறவையின் நிழல், எண்ணும் எழுத்தும், மீன்கள் உறங்கும் குளம் என்று ஐந்து தொகுப்புகள் வந்துள்ளன. ஜெயந்தன் விருது, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க விருது, படைப்பு விருது ஆகியவற்றைக் கவிதைகளுக்காகப் பெற்றதும் ‘ஆனந்தம்’தான். கல்லூரி நாட்களில் கவிதைப் போட்டியில் பெற்ற  கம்பன் கழகப் பரிசும், கல்கி இதழின் பொன்விழாக் கவிதைப் போட்டியில் பெற்ற பரிசும்தான் எழுத்துலகில் நுழைவதற்கு ஆரம்ப நாட்களில் தன்னம்பிக்கை கொடுத்தது.

அப்போது சென்னை காமராஜர் அரங்கிலும், இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்திலும் விழுந்த கைதட்டல் சத்தம்தான் இன்று திரையரங்குகளில் ஒவ்வொரு ஊரிலும் வசனத்துக்காக விழும் கைதட்டலுக்கு விதைகள். அதற்காக உழைக்கும், சிந்திக்கும் நேசங்கள்தான் என் உண்மையான ‘ஆனந்தம்’.

(தொடரும்)

தொகுப்பு : சுரேஷ்ராஜா