மாட்டுக் கொம்புக்குள் ஆவி!



ஜீவா, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘கொம்பு’. படத்தை இயக்குபவர் இப்ராஹிம். முதல் படம் வெளியாவதற்கு முன்பே அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தம் ஆகி அசத்தியிருக்கிறார் இயக்குநர்.‘கொம்பு’ பார்த்து பூரித்துப் போன தயாரிப்பாளர்கள் தனக்கு அடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பை அளித்துள்ளதாக சொல்கிறார் இப்ராஹிம். இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருந்தவரிடம் பேசினோம்.

“உங்க பின்னணி?”

“பிறந்தது மதுரை. படிச்சது தூத்துக்குடி. என் இளமைக்கால மகிழ்வான நினைவுகள் எல்லாம் அங்கேதான் நிகழ்ந்தது. படிக்கும் காலத்தில் இருந்தே சினிமாவின் மேல் பெரும் ஆர்வம் இருந்தது. பள்ளிக் காலங்களில் சீமான், சந்தனராஜ் ஆகிய இரண்டு நண்பர்கள் மூலமாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. ஆர்வம் அதிகமாகவே சென்னையை நோக்கி படையெடுத்தேன். அண்ணன் அப்துல்லா இயக்கிய இரண்டு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினேன்.

இயக்குநர் சந்திரகுமாரிடம் சில காலம் உதவி இயக்குநராக இருந்தேன். மறைந்த இயக்குநர் பாலு ஆனந்த் சாரிடமும் உதவி இயக்குநராக இருந்துள்ளேன். 15 வருடங்களாக சினிமாவில் இருக்கும் நான் முதலில் நடிப்பதற்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன். கோடம்பாக்கம் என்னையும் இயக்குநராக்கி அழகு பார்த்துள்ளது.”

“உங்க ‘கொம்பு’ படத்துல என்ன ஸ்பெஷல்?”

“இது நான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான கதை. மதுரையில் ஆவிகள் அடங்கிய மாட்டுக் கொம்பை ஆராய்ச்சி செய்ய கதையின் நாயகி வருகிறார். அவருக்கு நாயகன் உதவுகிறார். அப்போது நடக்கும் சில சம்பவங்களை கலகலப்பாக எல்லோரும் ரசிக்கும்படியான ஒரு கமர்சியல் மசாலாவாக அரைத்து சொல்லியிருக்கிறேன்.

ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். அடிப்படையில் காமெடி சென்ஸ் உள்ளவர் என்பதால் அவர் செட்ல இருந்தாலே செட் முழுவதும் சிரிப்பு சத்தம் கேட்கும். ‘தமிழ்ப்படம்’ திஷா ஃபாண்டே நாயகியாக நடிக்கிறார். போனில்தான் அவுட் லைன் சொன்னேன். இம்ப்ரஸாகி அடுத்த ஃப்ளைட் பிடித்து நேரில் வந்து முழுக் கதையையும் கேட்டு ஓ.கே. பண்ணினார்.

ஆரம்பத்தில் புது யூனிட் என்பதால் பயம், தயக்கம் இருந்தது. எங்கள் டீம் ஒர்க் பார்த்துவிட்டு உற்சாகமானார். படத்துல ஜீவாவுக்கும் திஷாவுக்கும் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி பிரமாதமா வந்திருக்கு. இரண்டு லிப் லாக் சீனும் இருக்கு. அந்தக் காட்சியில் ஹீரோவிடம் இருந்த ஆர்வம் திஷாவிடம் இல்லை. நான் கன்வின்ஸ் பண்ணிய பிறகு நடித்தார்.

பாண்டியராஜன், கஞ்சாகருப்பு, அஷ்மிதா, காயத்ரி என்று ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். எல்லாருமே இன்வால்வ்மெண்ட்டுடன் நடித்தார்கள். இது பெண்களின் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு படமாக இருக்கும்.”

“டெக்னீஷியன்கள்?”

“இசை தேவ் குரு. இந்தியில் சூப்பர் ஹிட் படம் கொடுத்தவர். சுதீப் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். நடனம் ராதிகா. மாஸ்டரைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். டான்ஸ் மாஸ்டர் என்பதை விட முதலில் எனது அக்கா என்று தான் சொல்வேன். சினிமாவில் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட் ராதிகா அக்கா தான், பல குழப்பத்திலும் எனக்கு பொறுமையாக ஆறுதல் கூறி பெரிய துணையாக நிற்பார்.

இந்த சமயத்தில் நண்பன் ஜோவைப் பற்றியும் சொல்லியாகவேண்டும். சினிமாவில் நான் கஷ்டப்பட்ட காலங்களில் எனக்கு உற்ற நண்பனாக இருந்து என்னை ஊக்குவித்து இன்றுவரை என்னுடன் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உறுதுணையாக இருக்கிறார். சினிமாவில் நான் அடுத்த இடத்திற்கு செல்வதற்கு இவர்களைப் போன்ற உள்ளங்கள்தான் காரணம்.

என் கைவசம் மூன்று படங்கள் இருக்கிறது. சினிமா சந்தோஷத்தை தந்திருக்கிறது. இனி என் பயணம் வெற்றி பெற வேண்டும். அது மீடியா மற்றும் ரசிகர்களின் கையில் தான் உள்ளது.”“அடுத்து?”

“பிரபல ஹீரோ நடிக்கவுள்ளார். பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளது. தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் என் மீதும் என் கதை மீதும் முழுமையான நம்பிக்கை வைத்து அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவுக்கு இப்படியொரு தயாரிப்பாளர் கிடைத்திருப்பதை வரமாகப் பார்க்கிறேன்.

படப்பிடிப்பு முடியும் வரை எந்த கலைஞர்களுக்கும் சம்பளம் பாக்கி எதுவும் இல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் எந்த ஒரு முகச்சுளிப்பும் இல்லாமல், எது நடந்தாலும் நான் இருக்கிறேன் என்று தைரியம் கொடுப்பார். இது போன்ற தயாரிப்பாளர் கிடைப்பது அரிது. அது மட்டுமில்ல, படத்தின் ரஷ்ஷைப் பார்த்துவிட்டு ‘எனது அடுத்த படத்தை நீ தான் இயக்க வேண்டும்’ என்று ஒப்பந்தம் செய்துள்ளார். முதல் பட இயக்குநருக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருந்து விடப் போகிறது.”

- எஸ்