நின்னு விளையாடுவேன்!பிராச்சி நம்பிக்கை



கோலிவுட்டின் நாயகி பஞ்சத்தை தீர்த்துவைக்க தலைநகரத்திலிருந்து வந்திருக்கிறார் பிராச்சி தெஹ்லான். தலைநிமிர்ந்து பார்க்குமளவுக்கு உயரமான மனுஷி. இவருடைய உயரம் அதிகமில்லை. ஜஸ்ட்.... ஆறடி இரண்டு அங்குலம்தான்.
ஆனால் உள்ளமோ குழந்தையின் உள்ளம் என்று சொல்லலாம். உடையிலும் வார்த்தையிலும் வெளிப்படைத்தன்மையுள்ள பிராச்சி, மம்மூட்டி ஜோடியாக ‘மாமாங்கம்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ், மலையாளம் உட்பட ஏராளமான மொழிகளில் தயாராகியுள்ளது. பிராச்சியிடம் பேசினோம்.

“முதலில் பிராச்சிக்கு மீனிங் ப்ளீஸ்?”
“எல்லாவற்றையும் எல்லா நேரத்திலும் செய்து முடிப்பவள் என்று அர்த்தம்.”
“பிராச்சி அவதரித்த மண்...?”

“எனக்கு சொந்த ஊர் டெல்லி. அடிப்படையில் நான் ஸ்போர்ட்ஸ் கேர்ள். கூடைப்பந்து விளையாட்டில் புகுந்து விளையாடுவேன். இந்திய டீமின் இளம் வயது கேப்டனாக சில வருடங்களாக பொறுப்பு வகித்துள்ளேன்.  என்னுடைய தலைமையில் 2011ம் ஆண்டு கோப்பையை வென்றுள்ளது.
தனியார் நிறுவனத்தில் பெரிய உத்தியோகத்தில் இருந்தேன்.

ஸ்போர்ட்ஸ் கோட்டா என்று நினைக்க வேண்டாம். நான் எம்.பி.ஏ. முடித்துள்ளேன்.
நடிகையாக மாறியது முழுக்க முழுக்க விபத்து மாதிரி. பஞ்சாபியில்தான் என்னுடைய சினிமா கேரியர் ஆரம்பமானது. தமிழில் ‘மாமாங்கம்’தான் முதல் படம். ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்துள்ளேன். விரைவில் வெளியாகவுள்ளது.”
“நீங்க நடிக்கிற ‘மாமாங்கம்’ படத்தின் கதை என்ன?”

“1680 காலகட்டப் பின்னணியில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பழரிப்பட்டுவின் திருநாவையாவில் நடக்கும் கலாச்சார விழாவைக் களமாகக் கொண்ட கதை இது. இந்தப் பின்னணியில்  ராஜா ஜாமோரின் எனும் மன்னனின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய சாவேர்ஸ் எனும்  ஒரு சிறு போராட்டக் குழுவை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவில்  அதுவரை எவராலும் சாதிக்க முடியாததைச் சாதித்த  உண்மையான நாயகன், முடியாததை முடித்துக்காட்டிய, வரலாற்றில் மறைக்கப்பட்ட மிகப்பெரும் போர் வீரனின் கதையை, அவனின் வெற்றியை   பெரும் பட்ஜெட்டில் சொல்லும்  பிரமாண்ட படைப்பாக இந்தப் படம் இருக்கும்.”“படத்துலே உங்களுக்கு என்ன கேரக்டர்?”

“உன்னிமாயா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். படத்துல ஏராளமான கேரக்டர்கள் இருந்தாலும் மம்மூட்டி சாருக்கு அடுத்து என்னுடைய கேரக்டருக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். கேரள மக்கள் உன்னிமாயாவை மிகவும் பலசாலியான பெண்ணாகப் பார்க்கிறார்கள்.

அந்தவகையில் படத்தில் நான் வாள் சுற்றும் வீரமங்கையாக, நாட்டியத் தாரகையாக,  நடிகையர் திலகமாக  பல வகையில் என்னுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ள படம் இது. நேர்மையாகச் சொல்வதாக இருந்தால், இந்தக் கேரக்டரில் நடிக்க மிகவும் பயந்தேன். இயக்குநர் பத்ம
குமார், கேமராமேன் மனோஜ் பிள்ளை, வசனம் எழுதியிருக்கும் இயக்குநர் ராம் எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.”
“மம்மூட்டி?”

“மம்மூட்டி சாரின் பிரபல்யம், ரசிகர் வட்டம், மலையாள எல்லைகளைக் கடந்தது. இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகராகப் போற்றப்படுபவர். தமிழில் அவர் பல தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்து பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

அந்தவகையில் மம்மூக்கா சினிமாவில் என்னுடைய முன்னோடி. இந்தப் படத்தில் நான் நல்லா பண்ணியிருக்கிறேன் என்றால் அதற்கு மம்மூக்காவும் காரணம். ஏன்னா, அவர்தான் உடன் நடிப்பவர்களிடம் ‘உங்களால் முடியும்’ என்ற நம்பிக்கையை எற்படுத்துபவர். டேக் நேரத்தில்தான் சார் சீரியஸாக இருப்பார். மற்ற நேரங்களில் ஜோக் சொல்லி எங்களை மகிழவைப்பார்.

மம்மூக்காவின் கேரக்டர் எப்படியென்றால், முதலில் தன்னை ஒரு மனிதநேயமிக்கவராகத்தான் வெளிப்படுத்துவார். பிறகுதான் ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி அறியப்பட வேண்டும் என்று நினைப்பார். அவருடன் நடிக்கும்போதும் சரி, ஒட்டு மொத்த டீமுடன் வேலை செய்யும்போதும் சரி  ஒரு நல்ல படத்தில் வேலை செய்கிறோம் என்ற திருப்தி கிடைத்தது. இந்தப் படத்தில் சிறப்பாக நடிக்க முடியும் என்ற கான்ஃபிடன்ஸ் கொடுத்தது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழில் நல்ல தொடக்கத்துக்காக வெயிட் பண்ணினேன். இந்தப் படம் எனக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

“உங்கள் வளர்ச்சிக்கு உயரம் தடையாக இருக்கும் என்று நினைத்ததுண்டா?”

“என்னுடைய உயரத்தைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய முதல் சினிமா வாய்ப்பு என்னுடைய உயரத்தை வைத்துதான் கிடைத்தது. நான் இந்திய டீமில் விளையாடக் காரணம் என்னுடைய உயரமே. ‘மாமாங்கம்’ படத்திலும் மம்மூக்காவின் உயரத்துக்கு ஏற்ற மாதிரி நான் இருந்ததால்தான் வாய்ப்பு கிடைத்தது. அப்படி எல்லாவற்றிலும் உயரத்தை அட்வான்டேஜாகத்தான் பார்க்கிறேன். உயரமானவரா, குள்ளமானவரா என்பதைவிட திறமையிருக்கிறதா, திறமையில்லையா என்றுதான் ரசிகர்கள் பார்க்கிறார்கள்.”

“தமிழில் யாருடன் நடிக்க விருப்பம்?”

“ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், விஷால், ஆர்யா, அதர்வா, ஜெயம் ரவி என்று டாப் அண்ட் டால் ஹீரோஸ் அனைவருடனும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். கமல் சாரும் என்னுடய விஷ் லிஸ்ட்டில் இருக்கிறார். காரணம், என் தந்தை இளம்வயதில் கமல் சார் மாதிரி தோற்றமளித்ததாக என் அம்மா சொல்லியிருக்கிறார்.”

“உங்கள் அழகு ரகசியம்?”

“எல்லாம் ஜீன்ஸ் மகிமை. என் குடும்பத்திலிருப்பவர்கள் மனதிலும் உடலிலும் உயரமானவர்கள். அதைத்தான் என் அழகுக்கான ரகசியமாகப் பார்க்கிறேன்.”

“போட்டியை வரவேற்கிறீர்களா?”

“விளையாட்டு வீரங்கனையான என்னிடம் போட்டியைப் பற்றிக் கேட்கலாமா? இது போட்டி நிறைந்த உலகம். போட்டி நல்லது என்று நினைக்கிறேன். ஏன்னா, போட்டி மூலம் திறமைசாலிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். அந்தவகையில் இப்போது முன்னணியில் உள்ள அனைவரும் என்னுடைய போட்டியாளர்கள். அதை நான் தவறாகப் பார்க்காமல் மோட்டி வேஷனாகப் பார்க்கிறேன். என்னுடைய அந்தப் பார்வை என்னை அவர்களை விட
சிறப்பாகப் பண்ணுவதற்கு உதவும்.”

“தமிழ் சினிமாவில் நடிப்பது பற்றி?”

“என்னை ஒரு இந்தியனாக மட்டுமே பார்க்கிறேன். விளையாட்டு வீரர் குறிப்பிட்ட மாநிலத்துக்காக மட்டும் விளையாடுவதில்லை. இந்தியாவுக்காக இந்தியனாக விளையாடுகிறார். விளையாட்டு வீரர்களால் எல்லாவற்றையும் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். அதனால் எனக்கு மொழி பிரச்சனையில்லை. தற்போது எனக்கு மலையாளம் தெரியும். தமிழும் கற்று வருகிறேன். தவிர, நடிப்புக்கு மொழி அவசியமில்லை.”
“விளையாட்டுக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்?”

“விளையாட்டைப் பொறுத்தவரை நேரம், ஒழுக்கம், பயிற்சி மிகவும் முக்கியம். விளையாட்டில் கற்றலைத் தொடர்ந்தால் பெயர் வாங்கலாம். சினிமாவில் நடிப்பது அவ்வளவு சுலப மில்லை. அது டஃப் ஜாப். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டும். சினிமாவை நேசிப்பவர்களால் மட்டுமே சினிமாவில் ஜொலிக்கமுடியும்.”

“உங்களுடைய ஹாபீஸ்?”

“விளையாட்டை என்னுடைய வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்பதால் என்னுடைய முதல் ஹாபி விளையாட்டு மட்டுமே. நடிப்பா, விளையாட்டா என்று கேட்டால் விளையாட்டைத்தான் முதலில் சொல்வேன். புத்தக வாசிப்பு பிடிக்கும். நீச்சலிலும் டைம் பாஸ் பண்ணுவேன். எனக்கு ஃப்ரெண்ட்ஸ் குறைவு என்பதால் என் அனுபவங்களை தினமும் ஒரு டைரியில் குறிப்பாக எழுதுகிறேன். அந்த வகையில் என் பெரும்பாலான நேரத்தை பேனா எடுத்துக்கொள்கிறது.”

- சுரேஷ்ராஜா