தானே கோயில் கொண்ட தஹானு திருமகள்



தஹானு, மஹாராஷ்டிரா

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது பல்வேறு மங்கலப் பொருட்களை அடுத்து ஸ்ரீ மஹாலட்சுமி ஆவிர்பவித்து ஸ்ரீ மஹாவிஷ்ணுவை தன் கொழுநனாக ஏற்றுக் கொண்டு, அவருடைய இடது மார்பில் குடி கொண்டிருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்தியா முழுவதும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கு என்று ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருப்பினும் தேவி ஸ்ரீ மஹாலட்சுமிக்கு என்று தனியாக அமைந்துள்ள ஆலயங்கள் ஒரு சிலவே.

 இவற்றுள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை ஸ்ரீ மஹாலட்சுமி, கோல்ஹாப்பூர்ஸ்ரீ மஹாலட்சுமி மற்றும் பால்கார் மாவட்டம் தஹானு ஸ்ரீ மஹாலட்சுமி ஆகிய மூன்று ஆலயங்கள் மிகப் பிரபலமானவை. மும்பையின் செல்வ செழிப்பிற்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்திருப்பவை இந்த மஹாலட்சுமி ஆலயங்களே என்று கூறப்படுவதுண்டு. மஹாராஷ்டிர மாநிலத் தலைநகரான மும்பையிலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பால்கார் மாவட்டம்,  தானே எனப்படும் தஹானு என்ற கிராமத்தில் மலை மீது ஒரு ஆலயமும், மலையடிவாரத்தில் ஒரு ஆலயமுமாக இரண்டு ஆலயங்களில்ஸ்ரீ மஹாலட்சுமி எழுந்தருளி அருள்பாலிக்கிறாள்.

அடிவாரத்தில் உள்ள ஆலயம் சரோட்டி நாகா என்ற இடத்திலும் இன்னொரு ஆலயம்  இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள மலை உச்சியிலும் உள்ளன. இந்த மலை, மஹாலட்சுமி மலை  (Mahalakshmi Hills) என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஆலயங்களில் ஸ்ரீ மஹாலட்சுமியின் சிரசு மட்டுமே கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடற்கரை நகரமான தஹானு ஒரு காலத்தில் இங்கு வளர்க்கப்பட்ட ஏராளமான பசு மந்தைகளின் காரணமாக தேனு (பசு) கிராம் என்று அழைக்கப்பட்டு அதுவே தஹானு கவோன் என்றும், தஹானு என்றும் அழைக்கப்பட்டது. காமதேனுவின் உடலில் அனைத்து தேவர்களும் உறைவதாக ஐதீகம். அதன் வால் பகுதியில் ஸ்ரீ மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். இத்தலத்தில் ஏராளமான பசு மந்தைகள் இருந்ததால் பசுக்களில் வாசம் செய்யும் ஸ்ரீ மஹாலட்சுமி இத்தலத்தை தான் கோவில் கொள்ளும் தலமாகத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த சஹ்யாத்ரி மலையில் தஹானு கிராமப் பகுதியில் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்க எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ மஹாலட்சுமி இம்மாநிலத்தில் உள்ள மிகப் பிரபலமான கோல்ஹாப்பூர் ஸ்ரீ மஹாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது.

 ஸ்ரீ கோல்ஹாப்பூர் மஹாலட்சுமி கோலாசுரனோடு போரிட்டு அவனை வதம் செய்த பின்னர் கோல்ஹாப்பூரில் தங்கி அருள்பாலிப்பது போன்றே, தானே மஹாலட்சுமியும் இங்கு ஒரு அசுரனோடு போர் புரிந்து, அவனை வதம் செய்த பின்னர் ஓய்வு எடுக்கும் பொருட்டு மலையின் உச்சியிலும், கீழும் இரண்டு ஆலயங்களில் கொலு வீற்றிருப்பதாக ஐதீகம். மேலும் தேவி இங்கு வந்து தங்கியதன் பின்னணியில் இன்னொரு நிகழ்வை மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

பல நுற்றாண்டுகளுக்கு முன்பாக மலையின் மீது வாழ்ந்த ஒரு ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒரு நிறை மாத கர்ப்பிணிப்பெண் பிரசவ வலியால் அவதிப்பட்டதை பார்த்த தேவி அந்தப் பெண்ணைப் பார்த்து பவித்திரமான அந்த மலையிலிருந்து கீழே இறங்கிச் செல்லுமாறு கூறி,  தான் அவளைத் தொடர்ந்து வந்து அவளுக்கு உதவுவதாக வாக்களித்ததோடு அந்தப் பெண் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது என்றும் ஆணையிட்டாளாம். ஆனால், அந்தப் பெண் மலையடிவாரத்தில் வந்த போது திரும்பிப் பார்க்க, தொடர்ந்து வந்த தேவி மலையின் கீழேயுள்ள சரோட்டி நாக் என்ற அந்த இடத்திலேயே பிரதிஷ்டை ஆனாளாம்.

மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி காலத்தில் இந்த ஆலயம் நிர்மாணம் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. வட இந்திய ஆலயக் கட்டிடப் பாணியில் கருவறை மீது ஒரே கலசத்துடன் நாகரம் எனப்படும் நான்கு பட்டை விமானம் அமைந்துள்ளது. இந்த விமானத்தின் மீது வெண்மை, செந்நிறக் கொடிகள் பறந்த வண்ணம் உள்ளன.

கருவறையின் நடுநாயகமாக நான்கு தூண்களைக் கொண்ட வெள்ளி மண்டபத்தின் இரண்டு புறங்களிலும் துவாரபாலகர்கள் காட்சியளிக்க சிந்தூர வண்ணம் பூசப்பட்ட ஸ்ரீ மஹாலட்சுமியின் பெரிய முகம் மட்டும் பத்ம பீடத்தின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஸ்ரீ ரேணுகா தேவி ஆலயங்களில் சிரசு மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.

 ஆனால், இத்தலத்தில்ஸ்ரீ மஹாலட்சுமியின் சிரசு மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. கோல்ஹாப்பூர் ஸ்ரீ மஹாலட்சுமி ஆலயம் சதிதேவியின் கண்கள் விழுந்த இடமாகக் கருதப்பட்டு சக்தி பீடமாக வணங்கப்படுவதைப் போல இங்கும் தேவியின் பெரிய நயனங்களுக்கு மகிமை உள்ளதாக பக்தர்கள் கருதுகின்றனர்.

மேலும், தேவியின் நீண்ட அழகிய நாசியில் அணிவிக்கப்பட்டுள்ள, மீன் உருவில் உள்ள மத்ஸ்யாபரணம் இக்கோவிலுக்கே உரிய தனிச் சிறப்பாகும். மலை உச்சியின் மீது கொலுவீற்றிருக்கும் தேவியை மூல மூர்த்தி என்று பக்தர்கள் கருதுவதாலும், மலையேறி தன்னை தரிசிக்க முடியாத பக்தர்களுக்கு தான் எளிதில் காட்சி தரவேண்டும் என்ற கருணையோடு தேவி மலையடிவாரத்திலும் குடி கொண்டிருப்பதாலும் கீழ் கோயிலில் நடைபெறும் பூஜைகள், வழிபாடுகள் அனைத்தும் மலை உச்சியிலுள்ள மூலவிக்ரகத்திற்கு நடைபெறும் பூஜைகளாகவே கருதப்படுகின்றன.

குன்றின் உச்சியில் அமைந்துள்ள மூலஸ்தான ஆலயத்திற்குச் செல்ல 900 படிக்கட்டுகள் உள்ளன. அங்கும் தேவியின் சிரசு மட்டுமே கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபடப்படுகிறது. பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் மஹாலட்சுமி மலைக்கு புனித வாலன்டைன் சிகரம் என்ற பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 1540 அடி உயர செங்குத்தான இந்த மலை உச்சியில் ஒரு சிறிய ஆலயத்தில்
ஸ்ரீ மஹாலட்சுமி தேவி எழுந்தருளியிருக்கிறாள்.

அக்காலத்தில் இப்பகுதியில் அதிக அளவில் வாழ்ந்து வந்த ஆதிவாசிகள் ஸ்ரீ மஹாலட்சுமியை தங்கள் குல தேவதையாக வழிபட்டு வந்துள்ளனர். எனவே தேவி இப்பகுதி மக்களால் ஆதி வாசி மாயி (ஆதிவாசிகளின் தாய்) என்றே பக்தியோடு வழிபடப்பட்டு வருகிறார்கள்.

 இரண்டு ஆலயங்களிலுமே ஆதிவாசிகளும் அந்தணர்களும் இணைந்தே ஆலய வழிபாடுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சித்ரா பௌர்ணமி நாளன்று நள்ளிரவில் மலை உச்சி மீது ஜோஹார் ஆதிவாசி வகுப்பினைச் சேர்ந்த ஒருவர் கொடியேற்றி வைப்பது வழக்கம். 

மும்பை - அஹமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் மும்பையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள சஹ்யாத்ரி மலைத் தொடரில் மலைஉச்சியிலும், அடிவாரத்திலும் தேவிக்கு இரண்டு ஆலயங்கள் உள்ளன. தஹானுவில் உள்ள அனுமன் ஆலயம் 300 ஆண்டுகள் பழமையானது. சிவாஜி மன்னர் காலத்தில் ராணாஜி ஷிண்டே என்பவரால் கோட்டை வாயிலில் கட்டப்பட்ட இந்த ஆலயக் கருவறையில் எழுந்தருளியுள்ள அனுமன் காலடியில் அனுமனின் கோபத்திற்குப் பயந்து அடங்கி ஒடுங்கிய நிலையில் சனி பகவான் உள்ளது குறிப்பிடத் தக்கது.

ஒரு பிரமாண்டமான மரத்தின் கீழ் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அருகிலேயே சுயம்புவாக அனுமன் வளர்ந்து வருகிறார். இது கணேஷ் மாருதி மந்திர் என்று அழைக்கப்படுகிறது. ஆலய முகவரி ஸ்ரீ மஹாலட்சுமி மந்திர் சரோட்டி அஞ்சல்  என்.எச்.8 தஹானு, தானே மாவட்டம் 401607. ஆலயத் தொடர்புக்கு: 092724 56489.