புலி முகத்தோடு அருள்பாலிக்கும் நரசிம்மர்



ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி : 28.4.2018

மஹாவிஷ்ணுவை தரிசிக்கும் பொருட்டு சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்கள் வைகுண்டத்திற்குச்  சென்றபோது, அங்குள்ள  வாயிற்காப்பாளர்களான ஜய-விஜயர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அதைக் கண்டு வெறுப்புற்ற முனிவர்கள் அவர்கள் அசுரர்களாக பூமியில்  மூன்று யுகங்களில் பிறந்து பிறகு வைகுண்டத்திற்கு  மீளவேண்டும் என்று  சாபம் கொடுத்தனர். இந்த ஜய-விஜயரே, கிருதயுகத்தில் இரண்ய கசிபு, இரண்யாட்சன் என்ற அசுரர்களாக அவதரித்தனர். ராமாவதாரம் நடைபெற்ற திரேதாயுகத்தில் அவர்கள் ராவணன் - கும்ப
கர்ணனாகவும், மஹாபாரத காலமான துவாபரயுகத்தில் சிசுபாலன் - தந்தவக்தரனாகவும்  அவதரித்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இரண்யாட்சன் பூமியைச் சுருட்டிக்கொண்டு போய் கடலில் ஒளித்துவைத்தபோது, மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து அவனை வதைத்து பூமியை மீட்டார். அடுத்து,  அவனுடைய சகோதரன் இரண்யகசிபுவை நரசிம்ம அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்தார்.

பூர்ணமான ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ண அவதாரங்களுக்கென்று எண்ணற்ற ஆலயங்கள் இந்தியாவில் உள்ளன. இந்த அவதாரங்களை அடுத்து மிக அதிகமான ஆலயங்களைக் கொண்டு திகழ்வது நரசிம்ம அவதாரமாகும். குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில்,  கர்நூல் மாவட்டத்தில் உள்ள  நவநரசிம்மத் தலம் என்று போற்றப்படும் அஹோபிலத்தில்   உள்ள பிரஹ்லாத வரத, சத்ரவட, காராஞ்ச,  யோகானந்த, உக்ர, குரோத, மாலோல, ஜ்வால மற்றும் பாவன நரசிம்ம மூர்த்திகளுக்கு அமைந்துள்ள நவ நரசிம்மர் ஆலயங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.

ஸ்ரீநரசிம்ம அவதாரத்திற்கென்று 32 வகையான திருஉருவங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து ‘நரசிம்மர் ஆலயங்களிலும் சிங்க முகத்துடனேயே ஸ்ரீநரசிம்மரை நாம் தரிசிக்க முடியும். ஆனால், மிகமிக அபூர்வமாக வராஹ முகத்துடன் ஆந்திர மாநிலம், சிம்ஹாசலத்தில் ஸ்ரீவராஹ லட்சுமி நரசிம்மராகவும், அகிரிப்பள்ளித் தலத்தில்  புலிமுகத்தோடு வ்யாக்ர  லட்சுமி நரசிம்மராகவும் கோயில் கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள அகிரிப்பள்ளி ஓர் அழகிய சிறிய கிராமம். இப்பகுதியை புராண காலத்தில் ஆண்டு வந்த சுபப்பிரதன் என்ற மன்னன், ஸ்ரீமஹாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய, அவன் தவத்திற்கு மெச்சிய பரந்தாமன், ஸ்ரீவியாக்ர லட்சுமி  நரசிம்மராக மன்னனுக்குக் காட்சி தந்ததோடு, அந்த மன்னன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த மன்னனையே சிறிய குன்றாக மாற்றி அதில் கோவில் கொண்டதாக தல புராணம் தெரிவிக்கிறது.

மன்னன் சுபப்பிரதன் நினைவாக இந்தக் குன்று சோபனாத்ரி, சோபனகிரி, சோபனாசலம், சோபன மலை என்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேலும் இந்தக் குன்று, கிருதயுகத்தில் கல்யாணாத்ரி என்றும், திரேதா யுகத்தில் ஸ்வப்ன சைலம் என்றும், துவாபர யுகத்தில் சுஹாசலம் என்றும் அழைக்கப்பட்டு தற்போது கலியுகத்தில்  சுபாசலம், சோபனாசலம் என்ற பெயர்களோடு  திகழ்வதாகக் கூறப்படுகிறது. இந்த அரிய தலம் பற்றி பதினென் புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் ஒன்பது அத்தியாயங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

மஹாவிஷ்ணுவும், சிவபெருமானும் ஒருமுறை இப்பகுதிக்கு விஜயம் செய்தபோது, சிவபெருமான் மலை உச்சிக்குச் சென்று அமர்ந்துவிட்டதாகவும், இதனால் கோபமுற்ற விஷ்ணு, அவரைத் தேடிக் கண்டு பிடித்து, வியாக்ர நரசிம்மராகத் தோன்றி அவரோடு சண்டையிட்டதாகவும், அதன் விளைவாக நரசிம்மரின் புலிக்கால் சுவடுகள் இந்த லிங்கத்தின் மீது தெரிவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

சோபனாசல குன்றின் அடிவாரத்தில் ஸ்ரீவியாக்ர லட்சுமி நரசிம்மர், ஸ்ரீராஜ்யலட்சுமி சமேதராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு அருகில் உள்ள பெரிய தீர்த்தக் குளம் வராஹ புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீமஹாவிஷ்ணு தன் வராஹ அவதாரத்தின்போது இந்த புஷ்கரணியை உருவாக்கியதாக ஐதீகம். அனந்த சரஸ் என்ற இந்த புஷ்கரணியின் புனித நீரே ஆலயத் திருமஞ்சனம் மற்றும் பிற புனித உபயோகங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆலயமும் புஷ்கரணியும் 15வது நூற்றாண்டில் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன .வரவேற்பு வளைவினை அடுத்து  ஆலயத்தின் பிரதான நுழைவாயிலை  ஐந்து கலசங்களைக் கொண்ட ஐந்துநிலை ராஜகோபுரம் அலங்கரிக்கிறது.  பிரதான சந்நதியின் எதிரே பெரிய கொடிமரம், அடுத்து கருடன் சந்நதி, அழகிய விசாலமான கல் மண்டபம், கருவறை, பரிவார தேவதைகளுக்கான சந்நதிகள்  என்று இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆலய வளாகத்தில் ராஜ்யலட்சுமி, கோதா தேவி,  வரதராஜப் பெருமாள், வேணுகோபாலர், அனுமன் மற்றும் ஆழ்வார்களுக்கென சந்நதிகள் உள்ளன.
 
இப்பகுதியை ஆண்டு வந்த நூசிவீடு ஜமீன்தார்கள் இந்த ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டு விரிவாக்கம் செய்து பூஜை, வழிபாடுகள், உற்சவங்களை நடத்தியதாக வரலாறு தெரிவிக்கிறது. ஒருநாள் நரசிம்மர், ஜமீன்தாரின் கனவில் தனக்கு உடனடியாக விரிவாக போகம் (பிரசாதம்) வேண்டுமென்று கேட்க, ஜமீன்தார் உடனடியாக அதைச் செய்துகொடுத்து ஸ்ரீநரசிம்மரை திருப்தி செய்தாராம். இந்த ஆலயத்தில் பெருமாள் போகம் எனப்படும் மஹாபிரசாத வகைகளில் சிட்டி கரேலு எனப்படும் சிறிய வடிவிலான அடை மிகவும் பிரசித்தமானது.

கருவறையில் சிங்க முகமின்றி வித்தியாசமாக, புலி முகத்துடன் வியாக்ர லட்சுமி நரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில், வலக்காலைத் தொங்கவிட்டு, மடக்கிய இடக்காலின் மீது ராஜ்யலட்சுமியை அமர்த்தி அணைத்தபடி, நான்கு கரங்களோடு காட்சி தருகிறார். பின்னிரு கரங்களை  சங்கும், சக்கரமும் அலங்கரிக்க முன் வலக்கரத்தில் அபயமுத்திரை காட்டி நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

வைகானச ஆகம முறைப்படி பூஜைகள், வழிபாடுகள், உற்சவங்கள் நடைபெறும் இந்த வியாக்ர லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் கார்த்திகை மாதம் ரத ஊர்வலத்துடன் கூடிய பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இதைத் தவிர ரத சப்தமி, திருவத்யயன உற்சவம், நரசிம்ம ெஜயந்தி, போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சுவாதி  நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

இங்கு தரிசனத்தை முடித்துக்கொண்டு அடிவாரத்திலிருந்து மேலே 740 படிகள் ஏறிச் சென்றால் மலையின் மீது உள்ள ஒரு சிறிய நரசிம்மர் ஆலயத்தை தரிசிக்கலாம். இவற்றைத் தவிர சிவபெருமான், கொண்டமல்லேஸ்வரர் என்ற பெயரோடு எழுந்தருளியிருக்கும் சிவாலயமும் உள்ளது. அகிரிப்பள்ளி, வியாக்ர நரசிம்மஸ்வாமி ஆலயம்  குஜ தோஷம் (செவ்வாய் தோஷம்) எனப்படும் திருமணத் தடைக்கு ஒரு பரிஹாரத் தலமாகத் திகழ்கிறது. திருமணத் தடை நீங்க வேண்டி, பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து, தக்க பரிகார பூஜைகள் செய்து, ஸ்ரீவியாக்ர லட்சுமி நரசிம்மருக்குத் திருக்கல்யாணம் செய்வதாக வேண்டிக் கொள்கின்றனர். பக்தர்கள் கோரிய கோரிக்கைளை நிறைவேற்றி வைக்கும் கலியுக, கண் கண்ட தெய்வமாக இந்த வியாக்ர நரசிம்மரை பக்தர்கள் போற்றுகின்றனர்.

இவ்வாலயம்  காலை 8 முதல் 11-30 மணிவரையிலும், மீண்டும் மாலை 5 முதல் இரவு 7 மணிவரையிலும் திறந்து வைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத் தலைநகரான மச்சிலிப்பட்டினத்திலிருந்து 82 கி.மீ. தொலைவிலும், இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரான விஜயவாடாவிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் அகிரிப்பள்ளி அமைந்துள்ளது.