ராமநவமி தெரியும்,சீதாநவமி தெரியுமா?



* ஸ்ரீசீதா ஜெயந்தி - 24.4.2018  

ஒவ்வோர் ஆண்டும் சைத்ர சுக்ல நவமி நாளான  ஸ்ரீராமநவமி,  நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ராமபிரான் ஆலயங்களில் இந்நாளையொட்டி பிரம்மோற்சவம் நடைபெறுவதோடு அன்று ஸ்ரீசீதா-ராம திருக்கல்யாணமும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராம நவமி போன்றே, சீதாதேவி அவதரித்த நாளான வைசாக சுக்ல பட்ச நவமி நாள், ஸ்ரீசீதாநவமி என்றும், ஸ்ரீசீதாஜயந்தி என்றும் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில், குறிப்பாக வடமாநிலங்களில், மணமான பெண்கள் தங்கள் கணவர் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டி, சீதாதேவியைக் குறித்து விரதம் மேற்கொண்டு, பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். சீதாதேவி, செவ்வாய்க்கிழமை, பூச நட்சத்திரத்தன்று அவதரித்ததாக ஒரு ஐதீகம் உள்ளது.

ஸ்ரீராமநவமியை அடுத்து வரும்  மாதத்தில் ஸ்ரீசீதாநவமி வருவது குறிப்பிடத்தக்கது. (இவ்வாண்டு 24.4.2018 செவ்வாய் அன்று) ராமபிரானுக்கு காசி முதல் கன்னியாகுமரி வரை எண்ணற்ற ஆலயங்கள் இருப்பதோடு, மேல்நாடுகளிலும் ஆலயங்கள் உள்ளன. ஆனால் சீதாதேவிக்கு இந்தியாவில் ஒருசில இடங்களில் மட்டுமே பிரத்யேக ஆலயங்கள் உள்ளன.  பீகார் மாநிலத்தின் வட பகுதி ராமாயண கால மிதிலையின் ஒரு பகுதியாக இருந்தது. இங்கு சீதாதேவியின் அவதாரத் தலமாகப் போற்றப்படும் ‘சீதாமர்ஹி’யில் சீதாதேவிக்கென ஓர் ஆலயமும், சீதாகுண்ட் என்ற புனித குளமும் உள்ளன. உத்தரகாண்ட் நைனிடால் மாவட்டத்திலும், ஹர்யானா கர்னால் மாவட்டத்திலும், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புல்பள்ளி கிராமத்திலும் சீதாதேவிக்கு ஆலயங்கள் உள்ளன. இந்தத் தலங்களில் சீதாதேவி தன் அவதார காலம் முடிந்து பூமிக்குள் இறங்கி ஐக்கியமானதாகக் கூறப்படுகிறது. கேரள மாநிலம்  புல்பள்ளி ஆலயத்தில்  சீதாதேவியோடு, புதல்வர்கள் லவ-குசரும் எழுந்தருளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நேபாள நாட்டின் பல பகுதிகள்  ராமாயண காலத்தில் ஜனக மன்னரின் ஆட்சிக்குட்பட்டிருந்த விதேஹ நாடாகத் திகழ்ந்தது என்றும் அங்குள்ள ஜனக்பூர் என்ற தலமே சீதாதேவி அவதரித்த தலம் என்றும் கூறப்படுகிறது. இங்கு ஸ்ரீஜானகி மந்திர் என்ற பெயரில் சீதாதேவி ஆலயம் அமைந்துள்ளது. ராமபிரான், சீதாதேவியைத் தேடி  ராமேஸ்வரம் வந்து, இங்கிருந்து இலங்கைக்கு ராமசேது அணையைக் கட்டி வானர சேனைகளுடன் இலங்கையை சென்றடைந்ததாக ராமாயணம் தெரிவிக்கிறது. ராவணன் வதம் முடிந்த பின்னர் மீண்டும் ராமேஸ்வரம் வந்து அங்கு தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டு ராமபிரான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

ராமாயண நிகழ்வுகளையொட்டி பல தலங்கள், ஆலயங்கள், ராமேஸ்வரத்தைக் கடந்து இலங்கைத் தீவுவரை இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான், ராவணன் சீதையைச் சிறைப்பிடித்து வைத்திருந்த அசோக வாடிகா என்ற இடத்தில் உள்ள சீதை அம்மன் ஆலயம். தன் பிரமாண்டமான அரண்மனை வளாகத்தின் ஒரு பகுதியான, அசோக மரங்கள் நிறைந்த அசோக வாடிகா என்ற வனத்தில்  ராவணன் சீதையைச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். இந்த அழகிய வனம் தேவ தச்சனான விஸ்வ கர்மாவினால் உருவாக்கப்பட்டது. இங்குதான் ராவணன், மண்டோதரி, அனுமன் ஆகியோர் சீதாதேவியைச்  சந்தித்தனர். அசோக மரம் பல அரிய மருத்துவக் குணங்களைக் கொண்டது. இம்மரத்திற்கு சீதையோடு தொடர்பு இருப்பதால் இது சீதா அசோகா என்றும் இதன் மலர்கள்  சீதா மலர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.  மேலும் இப்பகுதியில் அதிக அளவில் பூத்துக் குலுங்கும் மலர்களும் சீதா மலர் என்றே அழைக்கப்படுகின்றன.  

ராவணன், சீதாதேவியைக் கொண்டு வந்த புஷ்பக விமானம் சிங்கள மொழியில் “தண்டு மொனாரா யந்த்ரானயா’’ (பெரிய மயில் வடிவ விமானம்) என்று அழைக்கப்படுகிறது. அனுமன் சீதாதேவியைச் சந்தித்த பின்னர் தேவிக்கு  அதிகப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தேவியை ராவண கோடா (கோட்டை)  என்ற இடத்தில் ஒளித்து வைத்ததாகவும், சீதாதேவியை கவனித்துக் கொண்ட அரக்கியர் தங்கிய இடம் ஸ்த்ரீபுரா என்றும், இந்திரஜித்
சிவபெருமானை நோக்கித் தவயமியற்றிய இடம் காயத்ரி பீடம் என்றும், விபீஷணனுக்கு லட்சுமணன் முடிசூட்டிய இடம் கெலானியா என்றும், வானரப் படைகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக ராமபிரான் அம்பு எய்து தண்ணீர் கொண்டு வந்த இடம் நீலாவாரியா என்றும், சீதாதேவி  தான் பதிவிரதை என்பதை நிரூபிக்கும் வகையில் அக்கினிப் பிரவேசம் செய்த இடம் திவுரும்போலா  என்றும் அழைக்கப்படுகின்றன.

ஸ்ரீலங்காவின் மத்தியப் பகுதியில் உள்ளது நுவாரா எலியா என்ற ஊர். இது சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சீதா எலியா என்ற அழகிய சிறிய கிராமம். இந்தப் பகுதியே, ராமாயண காலத்தில், ராவணன் சீதையைச் சிறை வைத்திருந்த அசோக வாடிகா என்று கருதப்படுகிறது. இங்கு ஓடும்  சீதா நதி என்ற ஒரு சிறிய ஆற்றின் கரையில் தமிழ்நாட்டு ஆலயப் பாணியில் கட்டப்பட்டுள்ளது ஸ்ரீசீதாமாதா ஆலயம். தனிமையில் இருந்த சீதாதேவி வடித்த கண்ணீரே சீதா நதியாகப் பெருகியது என்று சொல்லப்படுகிறது.  

இந்த சலசலத்துப் பாயும் ஆற்றில் ஆங்காங்கே காணப்படும் சிறிய, பெரிய பள்ளங்கள் அனுமன், சீதாதேவியை சந்திக்கச் சென்றபோது உண்டான அவரது கால் தடங்கள் என்கிறார்கள். 200 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிருந்த ஒரு சிறிய சீதாதேவி ஆலயம்  பழுதுபடவே, 2005ம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாணியில், மண்டபம், விமானங்களோடு அந்த ஆலயம் புனரமைக்கப்பட்டது. 2016ம் ஆண்டு ஆலயம் மேலும் விரிவாக்கம்
கண்டது.

ஆலய நுழைவாயிலில் உள்ள வரவேற்பு வளைவு அடுத்துள்ள மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோரின் சுதைச் சிற்பங்களை தரிசிக்கலாம். இதன் அருகிலேயே அனுமனுக்கென்று தனியே ஒரு நாற்கால் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபங்கள், வளைவுகள், விமானங்கள் அனைத்துமே செந்நிற வண்ணம் பூசப்பட்டு, ஒளிர்கின்றன. சுதைச் சிற்பங்களுக்குப் பொன் வண்ணம்.

ஆலயக் கருவறையில் ராமர், லட்சுமணர், சீதாதேவி, அனுமன் ஆகியோரின் பளிங்குச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்குக் கீழே நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிருந்த ஆலய வளாகத்தில் காணப்பட்ட மிகப் பழமையான ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் விக்கிரகங்களும் உள்ளன. கருவறையின் வலப்புறம் அனுமனுக்குத் தனிச் சந்நதி. ஆலய வளாகத்தில் அனுமனுக்கும் விநாயகருக்கும் தனித்தனிச் சந்நதிகள்
உள்ளன.

இந்த ஸ்ரீசீதாதேவி ஆல‘ ஆலயங்களைப் போன்றே நடைபெறுகின்றன. இது சுற்றுலாத் தலமாகவும் இருப்பதால் தினந்தோறும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தருகின்றனர். ஸ்ரீலங்கா தலைநகரான கொழும்புவிலிருந்து 180 கி.மீ.  தொலைவில் நுவாரா எலியா உள்ளது. இங்கிருந்து ஐந்து கி.மீ. பயணம் செய்தால் ஸ்ரீசீதாமாதா  ஆலயம் உள்ள சீதா எலியா கிராமத்தை அடையலாம்.

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்