வளங்கள் பெருக்கும் வராஹ நரசிம்மர்



நலம் தரும் நரசிம்மர் தரிசனம் 8

* சிம்மாசலம், கர்நாடக மாநிலம்


வேலூர் அருகிலுள்ள சோளிங்கர், ஆந்திராவிலுள்ள அஹோபிலம், விசாகப்பட்டினம் அருகிலுள்ள சிம்மாசலம், கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில், நாமக்கல், மதுரை ஒத்தக் கடைநரசிம்மர் கோயில்கள் சிறப்பானவை.

திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் பரபரப்பான நொடியில் தோன்றிய நரசிம்ம அவதாரம் தனிச்சிறப்பு பெற்றது. தன் பக்தன் பிரஹலாதனைக் காக்க மனிதனும். மிருகமும் கலந்த உருவமெடுத்து தூணிலிருந்து வெளிப்பட்ட தனிப்பெரும் அவதாரம் அது. பிரஹலாதன் கருவிலே திருவுடையவன். நாரத முனியால் நாராயண மந்த்ரோபதேசம் பெற்றவன். ஆனால் அந்த கருவுக்குக் காரணமான தந்தைக்கே பெரிய எதிரியாக்கிவிட்டது அவனுடைய நாராயணபக்தி.  தானே கடவுள் என்ற இரண்யனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கத் தயாரில்லாத தனயன் அவன்.

மெய்யை வருத்தும் எத்தனையோ தண்டனைகளை தந்தை சிறிதும் இரக்கமின்றித் தந்தும், நாராயண நாமத்தால் அவற்றையெல்லாம் தன் மீதான பக்தி சிலிர்ப்பாகவே அனுபவித்தான் ப்ரஹலாதன். ஹிரண்யன் பிரஹலாதனை பல விதங்களில் துன்புறுத்தினான். இங்கு வால்டேரில் இருக்கும் (விசாகப்பட்டினம் அருகில் உள்ளது, அழகிய கடற்கரையை கொண்டது) கடலில் தள்ளிவிட்டான். ப்ரஹலாதன் “தராகீ, தராகீ”, என பகவானை சரண் அடையக் கூப்பிட்டான்.  ஹிரண்யனுக்கோ தன் நாட்டிலுள்ள பிற எல்லோரையும் போல் அவனும் தன் னுடைய பக்தனாக வேண்டும் என்று வெறி.

பிரஹலாதனுக்கோ ஹரியே சரி என்ற நெறி. கடலில் அமிழ்ந்து கொண்டிருக்கும் ப்ரஹலாதனை காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில், தன்னுடைய பீதாம்பரம் அவிழ்ந்துவிட்டதைக் கட்டி முடிந்தால் நேரமாகிவிடும் என்பதால், அதனைக்கூட முடியாமல், ஒரு கையில் பீதாம்பரத்தைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் உள்ள கட்டை விரலால், கருடனுக்கு வாயில் அமிர்தத்தை கொடுத்துக் கொண்டு, குதிக்கிறார். குதித்த வேகத்தில் பகவானின் பாதங்கள் பாதாளம் வரை சென்று விட்டன. .ஹிரண்யகசிபுடன் 32 ரூபங்கள் எடுத்துப் போர் புரிந்தாராம் ஹரி. அதில் ஒன்று வராகநரசிம்மர் அவதாரம் ஆகும்.

சிறிது காலம் ப்ரஹலாதன் இவரை ஆராதித்துவிட்டு தன்னுடைய ராஜ்யத்திற்கு திரும்பினார். சிறிது காலம் பகவானுக்கு ஆராதனம் இல்லாமல் போலவே, புற்று மூடி அந்த இடம் காடாக மாறிவிட்டது. பின்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற சக்கரவர்த்தி இந்த இடத்தைக் கடந்து செல்லும் போது, அவரது விமானம் தடைபட்டது. என்ன காரணம் என்று திகைத்தார் மன்னர்.  நரசிம்மமூர்த்தி அவரதுகனவில் தோன்றி, “நான் இங்குள்ள காங்கதாரா என்ற தீரத்தத்தின் அருகில் உள்ள புற்றில்” இருப்பதாகச் சொல்ல, அவரை எழுந்தருளப்பண்ணி, காங்கதாரா தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்து பிரதிஷ்டை செய்தார் புரூவரஸ். அந்த நாள் அக்ஷயதிருதியை எனப்படும் நாள்.  எனவே அந்த நாளில் மட்டுமே  பெருமான் நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

மற்ற நாட்களில் சந்தனகாப்பிட்ட தரிசனம் தான். சந்தனகாப்பு என்றால் எவ்வளவு தெரியுமா? வைகாச சுக்ல த்ருதீயை, வைகாச பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறார்கள். எல்லா நாட்களும் சந்தனகாப்புடன் காட்சியளிக்கிறார் இந்த வராஹ நரசிம்மர்  என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இத்தலத்தில் குடி கொண்டிருக்கும் பகவான் ஸ்ரீவராகலஷ்மி நரசிம்ஹ ஸ்வாமியின் நிஜரூப தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் அக்ஷயத்ரிதியை என்ற வைசாக சுக்ல த்ரிதியை நாளில்  சந்தனத்திருவிழாவிற்கு கூடுவர். வருடா வருடம் நடக்கும் இந்த சந்தனத் திருவிழா முதல் நாள் இரவு முதல் எல்லா வைதீக காரியங்களுடன் துவங்கும். இந்த கோயிலின் பாரம்பரிய ட்ரஸ்டீ என்று அழைக்கப்படும் குடும்பத்தினர் (விஜயநகரம் மஹாராஜாவின் பரம்பரை) சந்தன மரக்கட்டைகள் மற்றும்  வெள்ளிப் பாத்திரத்தில்  வாசனைத்திரவியங்களுடன் அரைத்த சந்தனத்தை தலையில் சுமந்துகொண்டு பாண்ட் வாத்ய கோஷங்களுடன்  ஊர்வலமாக கோயிலில் குடியிருக்கும்  அப்பண்ணா என்று அழைக்கப்படும் பகவான் நரசிம்ம ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கிறார்கள். அந்த குடும்பத்தினர் மட்டும் அன்று முதல் மரியாதையுடன் பகவானின் நிஜ ரூப தரிசனம் செய்வதற்காக அலங்காரம் முடிந்தவுடன் முதலாவதாக அனுமதிக்கப்படுவார்கள்.

ராமானுஜர் ஸ்ரீ கூர்மத்தில் வைணவத்தை நிலைநாட்டியபின், தெற்கே அடுத்த தலமான சிம்மாசலமான இம் மலையை அடைந்தார். விசாகப்பட்டினத்திற்கு பதினைந்து மைல் தூரத்தில் இருக்கும் மலைக் கோயில் இது. இங்கு கோயில் கொண்டிருக்கும் வராக நரசிம்மர், பின்னாளில் ஹிரண்யகசிபுவை வதைத்தபின் இங்கு பிரஹலாதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வராக முகத்துடன் மனித உடலோடு, சிங்கத்தின் வால்கொண்டு, வராக நரசிம்மனாக காட்சி அளிக்கிறார். பிரஹலாதன் பெருமாள் காத்தருளிய அந்த இடத்தில் நரசிம்மருக்கு கோயிலைக் கட்டிய இடமே சிம்மாசலம்.

பின் சோழர்கள் காலத்தில் பெரிய கோயிலாக விரிவடைந்த தலமாகும். இயற்கை எழில் சூழ்ந்த தலம்.  இக்கோயில் மலையை முழுக்க குடைந்தெடுத்து அமைக்கப்பட்டது. பாறையால் செய்யப்பட்ட ஒரு தேர், சக்கரங்களுடன் குதிரைகள் இழுத்துச் செல்லும் முறையில் உள்ளது. வாழ்வில் உண்டாகும் துன்பங்களைப் போக்கி பக்தர்களைக் காப்பதில் சிம்மாசலம் நரசிம்மருக்கு இணை வேறு யாருமில்லை.

ஹரியும், சிவனும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் சிம்மாசல மூர்த்தியான வராக லட்சுமி நரசிம்மமூர்த்தியை தரிசித்தால் சிவலிங்க உருவத்தில் நாராயணனின் நாமம் சாத்தப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. தூணிலிருந்து தோன்றியதாலோ என்னவோ மூலவர் தூண் போன்றே தரிசனமளிக்கிறார். வராகரும் இவருடன் அரூபமாக உள்ளார்.

11ம்  நூற்றாண்டில் கலிங்க நாட்டை வென்ற குலோத்துங்க சோழனால் பகவான் நரசிம்மருக்காக இத்தலம் கவினுற எழுப்பப்பட்டது. இங்கு 525 அதியற்புதமான சிற்பங்கள் சிற்பக்கலையின் நுட்பமான சிறப்புகளை பறைசாற்றும் வண்ணம் காட்சியளிக்கின்றன. திருமகள் நரசிம்மரின் திருமார்பில் உறைவதாக ஐதீகம் உள்ளதால் இங்கு தாயாருக்கு தனி சந்நதி இல்லை.

நரசிம்ம ஜெயந்தி விசேஷமாக கொண்டாடப்படும் தலங்களுள் இதுவும் ஒன்று. இங்கு நித்யபூஜைகளும் திருவிழாக்களும் மிகுந்த அக்கறையோடு நடத்தப்படுகின்றன. திருமலையைப்போலவே இந்த சிம்மாசலத்திலும் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர். தெலுங்கில் வைகாசி மாதத்திற்கு வைசாகம் என்று பெயர். இம்மாதத்தில் இப்பட்டினத்தில் விசாக நட்சத்திரத்தில் இத்திருவிழா நடப்பதால் விசாகப்பட்டினம் என இத்தலம் பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

இத்தலத்திலும் சைவ வைணவ சண்டை வந்ததாக கதை உண்டு. முதலில் இந்த மூர்த்தி இங்கு லிங்க ரூபத்தில் வழிபடப்பட்டதாகவும், ராமானுஜர் ஸ்ரீகூர்மத்திலிருந்து இந்த மலைக்கு வந்தவுடன் நாராயணனின் தலம்தான் இது என்றும் இங்கு வராகநரசிம்மனின் அர்ச்சா ரூபம் நிறுவப்படவேண்டும் என்றும் வாதம் செய்ததாகவும், வாதமுடிவில், உள்ளே இருப்பவர் நாராயணனா இல்லை நமசிவாயமா என்பதைக் கண்டுகொள்ள லிங்கத்தின் கீழே துளசியும் விபூதியும் இரவில் வைக்கப்பட்டு, காலையில் எது ஏற்றுக் கொள்ளப்பட்டதோ, (துளசி, திருமாலுக்குடையது, விபூதி சிவனாருக்குகந்தது) அவரே அங்கே நாயகன் என்று முடிவு செய்யப்பட, அனைவரும் அப்படியே செய்கின்றனர்.

மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது துளசி மட்டுமே அங்கே கிடந்ததைக் கண்டு உடையவரின் கருத்தில் உடன்பாடு கொண்டு அனைவரும் லிங்கத்தை அகற்றிவிட்டு அங்கே ராமானுஜரின் கட்டளைப்படி வராகநரசிம்மனின் அர்ச்சாரூபத்தை செதுக்கினர். அப்படி வழிபடும்போது, அவர் (அர்ச்சாரூபத்தின்) உடலில் ரத்தம் வழிந்ததாகவும், ரத்தத்தை மறைக்க சந்தனத்தை உருவம் முழுவதும் சார்த்தி மூடிவிட்டதாகவும் சொல்வர்.

ஒவ்வொரு வருடமும் தமிழ் சித்திரைக்கும் வைகாசிக்கும் நடுவில் வரும் அமாவாசையின் அடுத்த மூன்றாம் நாள் (அட்சயதிரிதியை) இந்த சந்தனம் முழுவதும் அகற்றப்பட்டு, புதிய சந்தனம் பூசப்படும். அன்று பகல் முழுவதும் சுவாமியின் உண்மையான சொரூபத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். நிஜரூபத்தில் பார்க்கும்போது சுவாமியின் கால்களுக்குக் கீழே பாதம் இல்லை. கைகள் நீண்டு இருந்தாலும் உள்ளங்கைகளும் விரல்களும் தெரியாது. முகத்தில் வராக ரூபமும் பின்னால் வால் ரூபமும் கூட இப்போதெல்லாம் சரியாகத் தெரிவதில்லை, ஸ்வாமி எப்படி இருந்தாலும், இங்கும் ராமானுஜர் சம்பந்தப்பட்ட ஒரு அழகான கதை உண்டு. காந்தா கிருஷ்ணாமாச்சாரி தினமும் வராகருக்கு பூஜை செய்வதோடு அருமையான கருத்துகள் கொண்ட பாடல்களையும் பாடுவார்.

அந்தப் பாடலை தினமும் இரவில் கர்ப்பகிரக கதவைச் சார்த்திக் கொண்டு, கிருஷ்ணமாச்சாரி பாட அந்தப் பாட்டின் பொருளில் மயங்கி வராகநரசிம்மனும் ஆனந்த நடனம் ஆடுவாராம். ஆண்டவனே ஆடும் ஆட்டம் கண்டு பாடகரும் சொக்கிப்போய் மனம் மகிழ்வாராம். இது நாளும் நடக்கும் கதை. அந்த சமயத்தில் ராமானுஜர் தன் சீடர் குழாத்தோடு கோயிலில் தங்கி முக்திக்கு ஒரே மந்திரம் ஸ்ரீமன்நாராயண மந்திரம்தான் என்றும் அதையும் குருவழி அடைந்தால் மட்டுமே சாத்தியம் என்றும் எல்லோரிடமும் உபதேசம் செய்தார்.

நம் கிருஷ்ணமாச்சாரிக்கு அந்த நாராயணனே நண்பன் ஆனதால் கோயிலின் வெளிவாசலில் அமர்ந்திருக்கும் ராமானுஜரை லட்சியம் செய்யவில்லை. ஒருநாள் இரவு இவர் பாட, அவர் ஆட, இந்த கூத்தெல்லாம் ஓய்ந்த பிறகு, மெல்ல கிருஷ்ணமாச்சாரி இறைவனிடம் ஒரு கோரிக்கை வைத்தார். ‘தான் பாடி நீ ஆடியது போதும். இந்தப் பிறவிக் கடலிலிருந்து மீட்டு எனக்கு முக்தி கொடு இறைவா.’ என்றார்.

“அடடே. முக்தி விஷயமெல்லாம் பெரிய விஷயம். அதை அங்கே வெளியே ராமானுஜரிடம் பேசினால் கிடைக்க வழி உண்டு. உனக்கு ஏன் அந்தக் கவலை.” என்று ஆறுதல் சொன்ன கையோடு முக்திக்கான கையையும் விரித்து விட்டார் வராக நரசிம்மர். கிருஷ்ணமாச்சாரிக்கு கோபம் வந்தது. “அப்படியானால் நான் பாட நீ ஆட இதெல்லாம் வெறும் நாடகம்தானா” என்று கேட்டார். இறைவனோ, ‘ஏன் அப்படி நினைக்கிறாய். ஒருவருக்கொருவர் ஆனந்தம் கொண்ட நிகழ்ச்சியாக எடுத்துக் கொள்.

 நீ அருமையாகப் பாடினாய். நான் மயங்கி ஆடினேன். என் ஆட்டம் உனக்கு மயக்கத்தைக் கொடுத்தது. சொக்கிப் போய் நின்றாய்” என்று பதில் தந்தார். கோபக்கார கிருஷ்ணமாச்சாரிக்கு என்ன பதில் பேசுவது என்று புரியாமல் சுவாமியின் மீதே ‘உன் கோயில் சாம்பலாகக் கடவது’ என்று சாபமிட்டார். இதற்கும் ஸ்வாமி பதில் சொல்லும் முறையில் ‘இவ்வளவு அழகான பாடல்கள் பாடினாய் அல்லவா.

அந்தப் பாடல்கள் காலகட்டத்தில் அழிந்துவிடும்’ என்று சொல்கிறார். (இருவருக்குமே இந்த சாபம் பலித்ததாகச் சொல்வர். ) சிறிய மலையின் மீது கோயில் உள்ளது. எக்காலத்திலும் பக்தர்களின் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது போலுள்ளது. தங்குவதற்கு தேவஸ்தானம் நிறைய அறைகள் கட்டி உள்ளார்கள். பெருமாளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். வெளியே வந்து காங்கதாரா அருவி, எங்கிருந்து வருவதென்று தெரியவில்லை.  ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் தெளித்துக்கொள்ளலாம்.  

சனக, சனந்தன, சனாத, சனத்குமாரர்களுக்கும், தேவர்கள், நாரதர், ரிஷிகளுக்கும், இவர்  தரிசனமளித்ததாக தலபுராணம் கூறுகிறது. இங்குள்ள நரசிம்ம தீர்த்தம், கங்காதாரா தீர்த்தம் எனும் இரு அருவிகளிலும் நீராடி வராஹநரசிம்மரை வணங்க தீரா நோய்கள் தீர்ந்து பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். உடல் வளமும் உள்ள வளமும் பெற இந்த வராஹ லட்சுமிநரசிம்மர் பேரருள்  புரிகிறார்.

மலையுச்சியும் அங்கிருந்து காணும் கடலும், ஹிரண்யகசிபுவையும் ஹரி நெறியே அறநெறி என வாழ்ந்த பிரஹலாதனையும் இன்றும் நினைவில் நிறுத்துகிறது என்பதில் ஐயமில்லை. ஆலய நிர்வாக பேருந்துகளும் ஆந்திர மாநில அரசுப்பேருந்துகளும் மலையடிவாரத்திலிருந்து உச்சிக்குச் செல்கின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ளது இத்திருத்தலம்.

(தரிசனம் தொடரும்)
ந.பரணிகுமார்