வெயிலுகந்த அம்மன்



* அயன் சிங்கம்பட்டி, அம்பாசமுத்திரம்

இதனால் ராஜராமவர்மரின் பிள்ளைகளும், அவரது தம்பிமார்களான பத்மநாபன் தம்பி, ராமன்தம்பி ஆகியோரும், எட்டுவீட்டு பிள்ளைமார்களோடு சேர்ந்து மார்த்தாண்ட வர்மாவை கொலை செய்ய சதி செய்தனர். இதையறிந்த மன்னர் தனது எல்கைக்குட்பட்ட காரையாறில் உள்ள சொரிமுத்தய்யன் கோயிலில் வந்து பதுங்கி இருந்தார். இந்த தகவலை அறிந்த எட்டுவீட்டுபிள்ளைமார்களும், மன்னரின் உறவினர்களும் சொரிமுத்தய்யன் கோயிலை நோக்கி படையெடுத்து வந்தனர். இதையறிந்த மார்த்தாண்ட வர்மா, பாளையக்காரர்கள் உதவியை நாடினார்.

பாளையக்காரர்கள் தங்கள் படைகளை அனுப்பியதோடு மட்டுமல்லாமல் சிங்கம்பட்டி சிற்றரசரை தலைமையேற்று போரை நடத்தி, மார்த்தாண்ட வர்மாவை காப்பாற்றுமாறு கூறினர். அதனையேற்று சென்ற சிங்கம்பட்டி மன்னர் தனது படைகளுடன் சென்று எட்டுவீட்டு பிள்ளைமார்கள் தலைமையில் வந்த படையை விரட்டியடித்தனர். போர் ஓய்ந்த நிலையில் எதிர்பாராத விதமாக சிங்கம்பட்டி இளவரசர் போரில் மாண்டு விட்டார்.

இவர் வேல்கம்பு வீச்சில் திறன் பெற்றவர். தனது பிறந்த நாளின் போது வீரர்களுக்கு வேல்கம்பும், வீச்சருவாளும் கொடுத்து அதனுடன் ஆடைகளும் தானம் கொடுப்பார். அத்தகைய மாவீரனை இழந்த சிங்கம்பட்டி ஜமீனிடம் சென்று உங்களுக்கு ஏதாவது செய்ய நினைக்கிறேன். எது கொடுத்தாலும் இளவரசனுக்கு ஈடாகாது. ம்ம்... என்ன வேண்டும் கேளுங்கள்.. என்று மார்த்தாண்ட வர்மா கேட்டார்.  

குச்சி ஒடிக்க காடு வேண்டும் என்று கேட்டார் சிங்கம்பட்டி ஜமீன், உடனே மார்த்தாண்ட வர்மா தனது ஆளுகைக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் சொரிமுத்தய்யைன் கோயில் இருக்கும் இடத்தை உள்ளடக்கி 74 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவு நிலத்தை தானமாக பட்டயம் போட்டு கொடுத்தார். அதிலிருந்து சொரிமுத்தய்யன் கோயில் சிங்கம்பட்டி ஜமீன் நிர்வாகத்திற்கு வந்தது. அப்போது மகாலிங்கம், சொரிமுத்தய்யன் சந்நதிகள் மட்டுமே கோயிலில் இருந்ததாக கூறப்படுகிறது.

மகனை இழந்த துயரத்தில் இருந்த மன்னர் இந்த இடம் கிடைத்த பிறகு தாமிரபரணி ஆற்றில் நீராடி மகனுக்கு திதி கொடுத்தார். அன்றைய தினம் அமாவாசையாகும். இதுவே நாளடைவில் அமாவாசை தீர்த்தமாடல் எனவும், திதி கொடுத்தலாகவும் வழக்கத்தில் வந்ததாக கூறப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீனுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் எல்கைக்குள் அகத்தியர் தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பாண தீர்த்தம் என தீர்த்தங்கள் இருப்பதால் தீர்த்த பதி. பதி என்றால் உறைவிடம் என்றும் பொருள் உண்டு. அந்த வகையில் தீர்த்தபதி என்ற பெயர் சிங்கம்பட்டி ஜமீன்தார்களுக்கு வந்தது.

ஒரு நாள் பாணதீர்த்தம் சென்று வந்தார் ஜமீன்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அம்மன், தான் உன் எல்கைக்குட்பட்ட இடத்திற்குள் இருக்கிறேன். எனக்கு உன்னிடத்தில் நிலையம் கொடு (கோயில்) என்று கேட்க, அம்மனுக்கு கோயில் கட்டி, அமர்ந்த நிலையில் அருட்பாலிக்கும் அம்மன் சிலையை நிறுவினர். அம்மன் எனக்கு இடம் தானே கேட்டேன். கோயில் கேட்கவில்லையே, பரவாயில்லை. எனக்கு வெயில் வேண்டும். என்றது. உடனே கோயிலின் மேற்கூரையில் துளைகள் இட்டு, அம்மன் மேல் வெயில் படும்படி செய்தனர். அம்மனுக்கு தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.

வெயிலை விரும்பி கேட்டதாலே வெயில் தாங்கி அம்மன் என்ற நாமத்தில் அம்மன் அழைக்கப்பட்டாள். வெயிலாச்சி அம்மன் என்றும் அழைக்கப்பட்டாள். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திற்குட்பட்டது சிங்கம்பட்டி. அயன் சிங்கம்பட்டி பூதத்தார் கோயிலுக்கு பின்புறம் தான் முதல் அரண்மனை இருந்துள்ளது. தினமும் ஜமீன்தார் ஏவலர்கள் புடை சூழ மகாதேவர் கோயிலுக்குச் செல்வார்.

சிவனை மனமுருக வணங்கிய பிறகே அன்றைய காரியங்களை தொடங்குவர். அம்மையையும், ஐயனையும் திருவிழா காலங்களில் பொன்னாலும் பூவாலும் அலங்கரித்து தங்களது தோளில் சுமந்து கண்ணீர் மல்க ஜமீன் குடும்பத்தினர் வணங்கி நிற்பர். அரண்மனை இடம் மாறிய பிறகும் கூட இந்த வழக்கத்தை அவர்கள் விட்டு விடவில்லை.
இதே ஊரில் உள்ள வெயிலுகந்த அம்மன் கோயிலும் ஜமீன் ஆளுகைக்கு உட்பட்டது தான்.

இந்தக் கோயிலில் மார்கழி மாதம் தோறும் சிறப்பு பூஜை நடக்கும். சித்திரை மாதம் கோயில் கொடை விழாவின் போது மூன்றாம் நாள் இங்கு ஜமீன்தார் தனது பரிவாரத்துடன் வருவார். அவருக்கு பரிவட்டம் கட்டி திருவிழாவை ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் நடத்தி வருகின்றனர்.

- முத்தாலங்குறிச்சி காமராசு