அப்பருக்கு அன்னமளித்த அரன்



*திருப்பைஞ்ஞீலி
* அப்பர் கூட்டமுது - 29.04.2019


பரமன் ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் என்ற பெயர்களைத் தாங்கியும், பார்வதி விசாலாட்சியாகவும் ஆட்சிசெய்யும் தலம் திருப்பைஞ்ஞீலி. திருநாவுக்கரசருக்கு இறைவன் பொதிசோறு கொடுத்தருளிய தலம் திருப்பைஞ்சீலி ஆகும். திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவத் தலங்களை தரிசித்து விட்டு திருநாவுக்கரசர் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் நீர்வேட்கையும், பசியும் அவரை வாட்டின.

எனினும் மனம் தளராமல் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் களைப்பைப் போக்க இறைவன் எண்ணினார். அவர் வரும் வழியில் ஒரு குளமும் தங்கி இளைப்பாறும் மண்டபமும் உருவாக்கி கூட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் உருவத்தில் இறைவன் காத்துக் கொண்டிருந்தார். களைத்து வந்த அப்பருக்கு தன்னிடம் உள்ள பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி வற்புறுத்தினார். அப்பரும் ஒன்றும் கூறாமல் உண்டு களைப்பாறினார். அந்தணரை நீர் எங்கு செல்கிறீர் என்று அப்பர் கேட்டதற்கு தானும் திருப்பைஞ்சீலி செல்வதாக இறைவன் கூற இருவரும் பேசிக்கொண்டே சென்றனர்.

திருப்பைஞ்சீலி ஆலயம் அருகே வந்தவுடன் அந்தணர் மாயமாய் மறைந்து விட்டார். அப்போது தான் இறைவனே அந்தணராக வந்து தனக்கு உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார். ராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் முன் இடதுபுறம் சோற்றுடை ஈஸ்வரர் சந்நதி காணப்படுகிறது. திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்து திருப்பைஞ்ஞீலி தலம் வரை கூட்டி வந்து சிவபெருமான் மறைந்து போன இடம் இதுவென்றும், பின்பு திருநாவுக்கரசருக்கு லிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. அந்த லிங்க உருவே சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் இச்சந்நதியில் அருட் பாலிக்கிறார். சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் இச்சந்நதியில் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறுகிறது.

ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. ஞீலிவனேஸ்வரர் ஆலயம் முதலில் ஒரு முற்றுப்பெறாத மொட்டை கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. இந்த முதல் கோபுரத்தின் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு 4 கால் மண்டபமும் அதன் பின்புறம் 3 நிலைகளை உடைய ராவணன் வாயில் என்று கூறப்படும் இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது.

இத்தலம் திருச்சிக்கு அருகில் சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்ஞீலி செல்ல நகரப் பேருந்து வசதிகள் உண்டு. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவெள்ளரை என்ற திவ்யதேசம் ஸ்தலம் இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சுமார் இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் பத்மநாபபுரத்தை தலைநகரமாகக் கொண்டு சேரநாட்டை மார்த்தாண்ட வர்மா ஆண்டு வந்தார். அவருடைய காலம் (1706 - 1758), வேணாட்டின் அரசுரிமையை இவரது மாமனார் ராஜராமவர்மர் இவருக்கு கொடுத்தார்.

 ந.பரணிகுமார்