பத்மினி ஏகாதசி விரதம் (இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை வருவது)



பத்மினி ஏகாதசி செப்டம்பர் 27

கந்தமாதான மலையின் முகடு அது. அங்கே ஒரு அடர்ந்த மரத்தின் அடியில் துரும்பாய் இளைத்திருந்த ஒரு மனிதர். உடலில் எலும்பு எது, தோல் எது, சதை எது, என்று பிரித்து அறியமுடியாத படி இளைத்திருந்தார். ஆனால் மூடிய கண்களும், மந்திரத்தை முணுமுணுக்கும் திருவாயும், அவர் நிச்சயம் தவமிருக்கிறார் என்று மவுனமாக உலகிற்கு எடுத்துரைத்தது.

அவருக்கு எதிரில் அவரைப் போலவே இளைத்து மெலிந்துபோன ஒரு அம்மையார், அவருக்கு சேவகம் செய்தபடி இருந்தார். நிச்சயம் அவர் அந்த மனிதரின் மனை மங்கலமாகவே இருக்கவேண்டும். அதற்கு அவரது கழுத்தில் மின்னும் திருமாங்கல்யமே சாட்சி. நல்ல வேளை, அவளது மாங்கல்யம் அவளது அன்னையுடைய மாங்கல்யம் போல, அவளது கணவனுக்கு மட்டுமே தெரியும்படி இல்லை. ஆம் அந்த அம்மையார் சாட்சாத் அரிச்சந்திர மகாராஜனின் அருந்தவப் புதல்வி தான். சரி! மன்னன் மகள் கானகத்தில் என்ன செய்கிறாள்?

விதியின் விளையாட்டு யாரை விட்டது?. மன்னன் அரிச்சந்திரனின் மகளாக பிறந்து, ஹைஹய தேசத்து மகாராஜனுக்கு வாழ்க்கைப் பட்டவள், இன்று கானகத்தில் இடர் பட வேண்டிய அவலம்! ஹைஹய தேசத்து மன்னனான கார்த்த வீரியனுக்கும் இந்த அம்மையாருக்கும், அனைத்து செல்வமும் வாய்த்த போதிலும் புத்திரச் செல்வம் வாய்க்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இருவரும், பொறுமை இழந்தார்கள். செய்த புண்ணியத்தை மனதில் கொண்டு, அந்த தெய்வம், புத்திரப் பேற்றினை தரவில்லை. ஆதலால் புத்திர செல்வம் வேண்டி மாலவனின் வைகுண்ட வாசலை, தனது தவ வலிமையால் தட்ட, திட்டமிட்டான் கார்த்தவீரியன். நாட்டை துறந்தான் முடியைத் துறந்தான், அரச போகத்தை துறந்தான், ஜடா முடி தரித்தான், மரவுறி தரித்தான் தவக்கோலம் பூண்டான்.

நாட்டை மந்திரிகளிடம் ஒப்படைத்து விட்டு, மகவு வேண்டி கானகம் செல்லும் தனது தெய்வத்தைக் கண்டாள் மகாராணி பத்மினி. கணவனே தெய்வம், அவன் இருக்கும் இடமே சொர்க்கம் என்று வாழ்ந்த அந்தக் காரிகை, தன்னையும் உடன் அழைத்து செல்லுமாறு கார்த்தவீரியனிடம் மன்றாடினாள். கார்த்தவீரியனும் எப்படி மறுப்பது என்று விளங்காமல் சம்மதம் தெரிவித்தான். இப்படித் தான் விதியின் கோர விளையாட்டால், மன்னன் கார்த்தவீரியனும் அவன் மனைவி பத்மினியும் நாட்டைத் துறந்து, காட்டை அடைந்தார்கள்.

காட்டை அடைந்து பல காலம் ஆனதால், இருவரும் தவத்தால் உடல் மெலிந்து நலிந்து போய் இருந்தார்கள். நாடாளும் தனது பதி, இப்படி கானகத்தில் துன்பப்படுவது பத்மினி அம்மையாரைப் பெரிதும் வருத்தியது. இதற்கு ஏதாவது ஒரு தீர்வைக் கண்டே ஆகவேண்டும் என்று, அவளது உள்மனது சொன்னது. காலம் கடத்தினால் கணவனின் உடல் நிலை மேலும் கெட்டு விடும் என்று தோன்றியது. என்ன செய்வது என்று தெரியாமல், கைகளைப் பிசைந்து கொண்டு யோசித்தாள் அந்தக் காரிகை.

அவளது மீன்விழியில் அத்ரி அனுசூயா ரிஷி தம்பதிகளின் ஆசிரமம் தென்பட்டது. அந்த தவசிகள் வாழும் தபோவனத்தில் நிச்சயம் தனக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று முடிவு செய்த பத்மினி, அங்கு விரைந்து சென்றாள். அவளை அனுசூயா தேவியின் மதிவதனம் புன்னகையோடு வரவேற்றது. தவத்தில் சிறந்த அந்த அம்மையாரின் கால்களில் வேரற்ற மரம் போல சரிந்தாள் பத்மினி. தனது துன்பங்களை எல்லாம் அவளது பாதத்தில் கொட்டி, கதறினாள்.

மெல்ல அவளை கைத்தாங்கலாக எழுப்பி அமர வைத்து இளைப்பாற்றிய அனுசூயா தேவி, அவளைக் கருணை பொங்கப் பார்த்தாள். அவளது பார்வையே‘‘உனது துன்பம் இன்றோடு ஒழிந்து விட்டது மகளே’’ என்று பத்மினிக்கு மட்டும் கேட்கும் குரலில் கிசுகிசித்தது. புல்லரித்துப் போய், பய பக்தியோடு அனுசூயா தேவியை நோக்கினாள் பத்மினி. அதை கவனித்த அனுசூயா தேவி பொறுத்தது போதும் என்று, தனது மலர் வாயை திறந்து
உபதேசிக்க ஆரம்பித்தாள்.

‘‘மகளே! சாதாரணமாக எல்லா வருடங்களிலும். பன்னிரண்டு மாதங்கள் தான் இருக்கும். ஆனால், சரியாக ஒவ்வொரு, முப்பத்திரண்டு மாதங்களுக்கு பிறகு, ஒரு மாதம் அதிகமாக வரும். இப்படி அதிகமாக வரும் மாதத்தில் வரும் இரண்டு ஏகாதசிகளுக்கு பெயர் பத்மினி ஏகாதசி மற்றும் பரம ஏகாதசி. இதில் பத்மினி ஏகாதசி வளர்பிறையில் வரும்.

பரம ஏகாதசி தேய்பிறையில் வரும். இப்படி அதிகமாக வரும் மாதத்தில், வரும் இரண்டு ஏகாதசி, புண்ணிய காலத்திலும், கோவிந்தன் திருப்புகழைப் பாடிப்பரவி விரதம் இருந்து, இரவு கண்விழித்து திருமாலை பூஜித்தால் இந்த உலகில் நடக்காதது ஒன்றும் இல்லை. மகளே நீ செய்த புண்ணியம், நாளையே பத்மினி ஏகாதசி நன்னாள் வருகிறது. நான் சொன்னது போலவே, நீயும் உன் பதியும், அந்த பதியை வேண்டி விரதம் இருந்து வழிபடுங்கள்! நீங்கள் நினைப்பது நடக்கும்” என்று வாய்மலர்ந்தருளி, கை உயர்த்தி, ஆசி வழங்கினாள் அனுசூயாதேவி.

அவளை வணங்கி விடைபெற்ற பத்மினி தேவி தனது கணவனிடம் நடந்ததை சொன்னாள். கணவன் கார்த்தவீரியன் வெகு சந்தோஷம் அடைந்து, மனைவியோடு சேர்ந்து பத்மினி ஏகாதசி விரதம் இருந்தான். மன்னனுடைய தவவலிமை, வைகுண்டத்தின் கதவை தட்டியதா? என்று தெரியாது. ஆனால், நிச்சயமாக பத்மினி ஏகாதசி விரத மகிமை வைகுண்டத்தில் நாராயணனை மகிழ்வித்தது.

மனமுவந்த கருணை முகில் வண்ணன், கருட வாகனம் ஏறி, திருமகளோடு கூடியவனாக இருவருக்கும் காட்சி தந்தான். அந்தப் பரம்பொருளின் அற்புத தரிசனம் கண்டு இருவரின் கண்களும் பிறந்த பயனை அடைந்தன. கண்களில் நீர் மல்க, நா தழுதழுக்க, கரம் குவித்து, சிரம் தாழ்த்தி இருவரும் மாலவனைத் தொழுதார்கள்.‘‘அப்பனே வேண்டும் வரத்தை கூச்சமின்றி கேட்டுப் பெறலாம்’’ என்று முகில் வண்ணன் தேனாய்ப் பேசினான். அந்தத் தேன் குரலில் கரைந்தபடியே தன்னை மறந்த ராஜ தம்பதிகள் மெல்ல சுயநினைவுக்கு வந்து பேச ஆரம்பித்தார்கள்.

‘‘பரம்பொருளே! பரந்தாமா! பரமாத்மனே! யாரைக் கண்டவுடன் வேதங்கள்,‘‘பரம்பொருள் யார்?” என்ற ஆராய்ச்சியை நிறுத்தி விட்டு, உன் பாதமே கதி என்று உன்னை சரணடையுமோ, அப்படிப்பட்ட உன்னைக் கண்டபின் வேறென்ன வேண்டும் பரம்பொருளே! முக்திக்கு வித்தே! இருப்பினும், புத்திரனை வேண்டி மாலவனை சரணடைந்த கார்த்தவீரியன் வெறும் கையோடு திரும்பினான் என்ற அவச் சொல் உனக்கு வேண்டாம்
சுவாமி! ஆகவே அந்த அவச்சொல் நீங்க, ஒரு புத்திரனைத் தர வேண்டும். அந்த புத்திரனை யாராலும் வெல்ல முடியாதவனாக இருக்க வேண்டும். உங்கள் திருக்கரத்தால் தான் அவன் வெல்லப்பட வேண்டும்! அப்படிப்பட்ட புத்திரனை நான் அடைந்து சுகமாக வாழ்ந்து, இறுதியில் உன் பாத சேவையில் ஈடுபட்டு முக்தி அடைய வேண்டும்! இவை அனைத்தையும் ஒரு வார்த்தை மாறாமல் நீ தந்தருள வேண்டும்’’ உறுதியாக வேண்டினான் கார்த்தவீரியன்.

அவனது பக்தியும் வைராக்கியமும் மாலவனையே கிறங்கடித்தது. அவனுக்காக தனது அபய ஹஸ்தத்தை உயர்த்தி ஆசி வழங்கிய பகவான், ‘‘நீ வேண்டிய அனைத்தும் வார்த்தை மாறாமல் நடக்கும். உலகே வியக்கும் வண்ணம் உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவனை ‘‘கார்த்தவீர்யார்ஜுனன்” என்று இந்த உலகம் போற்றும். ஈசன் இருக்கும் கயிலாய மலையையே அசைத்த ராவணனால் கூட அவனை அசைக்க முடியாது. அந்த ராவணன் உனது மகனிடம் மோதி, அவன் கையில் ஒரு பத்துத்தலை பூச்சியை போல அல்லல்படுவான்.

இறுதியில் உன் மகன் என் கையாலேயே மோட்சம் அடைவான்! ஆசிகள்!’’ என்று ஆசி மொழி மொழிந்தபடியே காற்றில் கரைந்து மறைந்து போனான் மாயவன். அவனது அமுதக்குரல் மட்டும் காட்டில் எதிரொலித்து, அவன் வந்து, வரம் தந்து, சென்றதை உணர்த்தியது.

நர்மதை நதி தீரத்தில் ஒரு முறை கார்த்தவீர்யார்ஜுனன் தன் மனைவியோடு இன்பமாக இருக்கும்போது, ஆற்றின் குறுக்கே தனது கைகளைப் போட்டு ஆற்றின் போக்கை மாற்றி விளையாடினான். அப்போது ஆற்றங்கரையில் சிவ பூஜையில் இருந்த ராவணன், கார்த்தவீர்யார்ஜுனனின் இந்த செயலால் வெள்ளத்தில் பெரிதும் இடர் பட்டான். ஆகவே வெகுண்டு, கார்த்த வீர்யார்ஜுனனிடம் சண்டைக்கு வந்தான் ராவணன். உடன், ராவணனின் திமிரை அடக்கி, அவனை பத்துத்தலை பூச்சி போல கட்டி கார்த்தவீர்யார்ஜுனன், இழுத்துச் சென்றது அனைவரும் அறிந்த ஒரு சம்பவம்.

இப்படி ஒரே ஒரு முறை பத்மினி ஏகாதசி விரதம் இருந்து, ராவணனையே வெல்லும் குழந்தையை பெற்றார்கள் பத்மினியும் கார்த்த வீர்யனும். இந்தக் கதையை வெகு அழகாக ஸ்காந்த புராணம் கூறும். இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரும் இந்த புண்ணிய தினத்தை இந்த முறை தவற விட வேண்டாம். ஸ்காந்த புராணம் கூறியபடி பத்மினி ஏகாதசியில் விரதம் இருந்து வேண்டியதெல்லாம் பெறலாம்.

ஜி.மகேஷ்