உள்ள(த்)தைச் சொல்கிறோம்



சித்திரை மாத சிறப்புகளோடு தொடங்கி, வைகையில் இறங்கும் அழகரின்  லீலைகளுடன், மதுரை சித்திரை திருவிழாவையும் சிறப்பித்து, வல்லாள கணபதியை துதித்து, ஸ்ரீவராஹி சித்ர குப்தர், ரமணர் ஜெயந்திகளோடு தெரியாத ஸ்ரீ மத்ஸிய ஜெயந்தியையும் விளக்கி, குரு பெயர்ச்சியை முன்னிட்டு, தட்சிணாமூர்த்தி வடிவங்களை விவரித்து, அக்னி நட்சத்திரமாகும் சூரிய பகவான்  வணங்கிய தலங்களையும் தொகுத்து தந்து, தமிழ் வருடப் பிறப்பில் பஞ்சாங்கம் வாசிக்கும் பழக்கத்தையும் மறக்காமல், நடைமுறை வாழ்வில் ஜோதிடம் குறித்தும் பாடம் நடத்தி, திருப்தியான அத்தரைப் போல மணத்த சித்திரை சிறப்பிதழை பத்தரை மாற்றுத் தங்கம் போல கொடுத்து, முத்திரை பதித்துவிட்டீர்கள்.
 - அ. யாழினிபர்வதம், சென்னை.

கள்ளழகர் பக்தி ஸ்பெஷலுக்கு ஏற்ற ஆன்மிகம். அட்டைப்படத் தரிசனத்தில் கூட `பளிச்’ என்று பிரகாசித்தது. கூடுதலாக சித்திரை மாத ராசிபலன்கள் தனிப்புத்தகம் ஆத்மாவின் ராகமானது!
 - என். ஜானகி ராமன், திருநெல்வேலி.

“கண்ணைக் கவரும் சித்திரைத் திருவிழா” இரு சமயங்கள் ஒற்றுமையை மேலோங்க செய்யும். இவ்விழாவை காண கண்கோடி வேண்டும். சைவத்தையும், வைணவத்தையும்  இணைக்கும் விழாவாக கருதாமல், நமது பண்டைத் தமிழர்கள் பண்பாட்டினையும், கலாச்சாரத்தையும் விளக்கும் இத்திருவிழாவை காண குடும்பத்துடன் மதுரைக்கு  செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது.
- ரீஜா மனோகரன், சூளை.

பொறுப்பாசிரியரின் `நான் யார்?’ என்ற தலையங்க விளக்கம் தரணிக்கே உரித்தான கலங்கரை விளக்கம். பகவான் ஸ்ரீரமணரின் அவதாரத்தில் அருளியது என்பதால் 780 கோடி மக்களுக்கும் உரித்தான கேள்வி! அந்த `நான்’ யார் என்று ஆத்மாவின் உட்புகுந்து கொட்டிய தத்துவம் அகத்தைக் குளிப்பாட்டிய தீர்த்தம் போன்றது!
- ஜா.கல்யாணி, நெல்லை.

“வாராரு வாராரு அழகர் வாராரு…” என்ற அமர்க்களமான பாடல் வரிகளோடு மதுரை  வைகையாற்றில் கள்ளழகர் பெருமான் எழுந்தருளுகின்ற கோலாகல வைபவத்தின் மகத்துவங்களை முப்பது முத்துக்களாய் கோர்த்து வழங்கப்பட்ட கட்டுரை ரொம்ப... ரொம்ப... ஜோரு! உள்ளத்தைக் கொள்ளைகொண்டு விட்ட, அழகிய மணி மாலையாக இந்தக் கட்டுரை மின்னுகிறது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

மான் மழுவேந்திய கணபதி + அவதரித்தார் வல்லாள கணபதி என்ற இரு பெரும் தரிசனங்களுமே இல்லத்தின் பிரதிஷ்டையாக பூஜை அறையில் பொக்கிஷமானது.
  - மருதூர் மணிமாறன், திருநெல்வேலி.

உத்கடி ஆசனத்தில் தட்சிணாமூர்த்தியின் திருக்கோலம் கண்டேன். தக்கோலத்தில்  உள்ள ஜலநாதேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சிற்பங்கள் காண கிடைக்காத தரிசனம். பார்த்து பார்த்து மகிழ்ந்தேன்.
 - வண்ணை கணேசன், சென்னை.

திருப்பூர் கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் அனைத்துமே, இதயத்தின் இனிப்புதான்! தித்திப்பான அவரது சொல் ஓவியத்தை திருக்குறள் மழையில், குறளின் குரலாக மனச்செவியில் கேட்பது ஆன்மீக வாசகர்களின் அரும்பெரும்பாக்கியம். திருக்குறளில், காதலியின் நெஞ்சம் என்ற உதாரணக் குறள் உவகைகளின் உச்சம்! உண்மைகளின் மிச்சம்!
 - ஆர். உமா ராமர், நெல்லை.