நாத்தழும்பேற நாமம் சொல்வோம்!



வணக்கம் நலந்தானே!

ஏன் இறைவனின் நாமங்களை மட்டுமே நினைக்க வேண்டும்.  எந்த எண்ணம் மற்ற எல்லா எண்ணங்களையும் வராமல் தடுக்கிறதோ அந்த எண்ணத்தை கைக்கொள்ள வேண்டும்.
ஒரு வீட்டின் சுவரில் எல்லோரும் என்னென்னவோ நோட்டீஸ் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் அந்த வீட்டின் சொந்தக்காரர் சொல்லிப் பார்க்கிறார்.
மெதுவாக கெஞ்சிப் பார்க்கிறார். ஒன்றும் பிரயோஜனமில்லை. ஆனால், அவரே ஒருநாள் இங்கு யாரும் நோட்டீஸ் ஒட்டாதீர்கள். மீறினால் தண்டிக்கப்படுவீர்கள் என்று எழுதப்பட்ட நோட்டீஸை ஒட்டுகிறார். இப்போது அங்கு நோட்டீஸை ஒட்டத் தயங்குகிறார்கள்.

அதுபோல மனம் என்பது வெறும் எண்ணங்கள். துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டாக்கள் போல மனதிலிருந்து எண்ணங்கள் உருவாகியபடி இருக்கும். இந்த எண்ணங்களை வரவிடாமல் தடுக்க வேண்டுமெனில் நாம் தெய்வத்தின் தொடர்புடைய எண்ணத்தை கைக்கொள்ள வேண்டும். அதனால்தான் ராமா.... கிருஷ்ணா.... நமச்சிவாய... விக்னேஸ்வரா... முருகா... பராசக்தி... என்று பகவானின் நாமத்தை மனதிற்கு கொடுத்தால் ஆலமரத்தை கரையான்கள் எப்படி மெதுவாக சாய்க்குமோ அதுபோல மனதை மெதுவாக இந்த நாமங்கள் அரித்து இறுதியில் மனதையே வேறோடு சாய்த்து விடும்.

யானையின் தும்பிக்கையில் சங்கிலியை கொடுத்து தும்பிக்கையின் அசைவை நிறுத்துவதுபோல, இடதும் வலதும் ஊசல் குண்டுபோல அசைந்து கொண்டேயிருக்கும் மனதிற்கு நாமம் எனும் சங்கிலியை கொடுக்க வேண்டும். ஏனெனில் எல்லா நாமங்களுமே ரிஷிகளால் பேரண்ட பிரபஞ்சத்திலிருந்து ஆதியில் தியானத்தில் கண்டெடுக்கப்பட்டவை.
எதுவரை நாமத்தை சொல்ல வேண்டும்?

இந்த கேள்வியே மனம் செய்யும் தந்திரம்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எதுவரை சொல்வது எனும்போதே எப்போது இவன் நாமம் சொல்வதை நிறுத்துவான் என்று மனம் யோசிக்க ஆரம்பித்து விட்டதை அறிந்து கொள்ளுங்கள். மெதுவாக மெதுவாக நாமத்தை நாவால் புரட்டிப் புரட்டி உங்களுக்கென்று நீங்கள் பாடுவீர்களல்லவா.... அதுபோல அந்த ராகத்திலோ அல்லது உங்களுக்கென்று பிடித்த குரலிலோ சொல்லுங்கள். வாய்விட்டுச் சொல்லும்போதே மானசீகமாகச் சொல்லவும் முயற்சியுங்கள். நாமத்தைச் சொல்லச் சொல்ல அடிநாக்கில் தேன் சொட்டுவது போல மனதிற்கு நாமத்தின் மீது ருசி பிறக்கும். மனம் ஒருமையோடு அடிக்கடி ஈடுபடும். அவ்வளவுதான் பட்டாசு திரி போன்று நாமம் சுருசுருவென பற்றிக் கொண்டுவிடும்.

கலியுகத்தில் அதனால்தான் எல்லோருக்கும் இறைவனின் நாமங்களையே பெயராக வைத்தனர். நம்முடைய பாரத தர்மத்தில் நாம மகிமையை கிராமங்களில் விளையாட்டாக, ஏன் ஒருவரை திட்டும்போது கூட, ‘‘சிவ..சிவான்னு கொஞ்ச நேரம் இரேன்’’ என்றெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார்கள். ராம... எனும் இருவார்த்தையைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால், அது மனதிற்குள் சென்று தங்கி விட்டதெனில், ராம நாமத்தில் உங்களுக்கு ருசி வந்துவிட்டதெனில் ஞான பரியந்தம் வரை உங்களை கொண்டுபோய் சேர்த்து விடும்.

கிருஷ்ணா
(பொறுப்பாசிரியர்)