நாணயங்களில் மறைந்திருக்கும் வரலாறு!



சிவகாசியின் நகரத்து நசநசப்பிலிருந்து ஒதுங்கி உள்ளடங்கி இருக்கிறது ஐ.கே.ராஜராஜனின் வீடு. அந்த ஒற்றைப் படுக்கையறை வீட்டுக்குள் உலகத்தின் பல நூற்றாண்டு சரித்திரத்தின் சாட்சியங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட நாணயம் முதல், கிரேக்கர்கள், ரோமானியர்கள் நாணயங்கள் வரை சுமார் 20 ஆயிரம் நாணயங்களை சேகரிப்பில் வைத்திருக்கிறார் ராஜராஜன். நான்கு தலைமுறையின் துளித்துளி சேகரிப்பு.

ராஜராஜன் பட்டாசு முகவர். எளிய குடும்பம். ஆனால் வரலாற்றின் மீது ஈர்ப்பு. இந்த நாணய சேகரிப்பின் கர்த்தா, பாபநாசம் நாடார். ராஜராஜனின் கொள்ளுத்தாத்தா. அவருக்குப் பின் வந்த அய்ய நாடாரும் பழம்பொருள், நாணய சேகரிப்பில் தீவிர ஆர்வமுள்ளவர். ராஜராஜனின் அப்பா காளிராஜ நாடார் அதையே பிரதான வேலையாக செய்தார். ராஜராஜனுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அது தொற்றிக்கொள்ள, இன்று ராஜராஜன் வீடு ஒரு தொல்பொருள் அருங்காட்சியமாகவே மாறிவிட்டது.

‘‘வட தமிழகத்துல இருந்து கேரளாவுக்குப் போற பெருவழிப்பாதையா சிவகாசி இருந்திருக்கு. மன்னர்களும், வணிகர்களும் இந்தப் பாதையை பெருமளவு பயன்படுத்தியிருக்காங்க. எங்கே பள்ளம் தோண்டினாலும் ஏதாவது ஒரு நாணயம் கிடைக்கும். எங்க கொள்ளுத் தாத்தாவும் தாத்தாவும் புண்ணாக்கு வியாபாரிங்க. ஊரு ஊராப் போய் விப்பாங்க.

அந்த நேரத்துல ஆங்காங்கே கண்டெடுக்கிற நாணயங்களை எல்லாம் வாங்கி சேகரிக்கத் தொடங்கியிருக்காங்க. அப்படி ஆரம்பிச்சதுதான். இன்னைக்கு மிகப்பெரும் சேகரிப்பா ஆகிடுச்சு. எங்க அப்பாவும் இதுக்கு நிறைய செலவு செஞ்சிருக்கார். இதுக்காகவே மாட்டு வண்டியைக் கட்டிக்கிட்டு ஊரு ஊராப் போவார்.

அவருக்குப் பிறகு இது எனக்கு முழுமூச்சா ஆகிடுச்சு. இப்போ பழங்காசுகள் ரொம்பக் கிடைக்கிறதில்லை. பிரிட்டிஷ் நாணயங்கள்தான் கிடைக்குது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், ஆறாம் ஜார்ஜ் மன்னர், எலிசபெத் ராணி, விக்டோரியா மகாராணி நாணயங்களை என் பங்குக்கு சேர்த்திருக்கேன். தொடக்கத்துல எனக்கு இந்த நாணயங்களோட வரலாறு தெரியலே! குஜராத் மாநிலத்தில, மத்திய அரசின் தொல்பொருள் துறையோட நாணய ஆய்வுப் பிரிவு இருக்கு.

 நாணயத்தையும் 1000 ரூபாய் பணத்தையும் தபால்ல அனுப்பினா, அவங்க அதை ஆய்வு செஞ்சு எந்த வருஷத்து நாணயம், எந்த மன்னர் வெளியிட்டதுன்னு அச்சு போட்டு பேக் பண்ணி அனுப்பிடுவாங்க. அதுமூலமாதான் இந்த நாணயங்களோட அருமையை உணர முடிஞ்சது...’’ என்கிறார் ராஜராஜன்.

2300 வருடங்களுக்கு முன்பு அசோகரின் தாத்தா வெளியிட்ட இந்தியாவின் முதல் நாணயத்தில் ஆரம்பித்து, மிகப்பழமையான நாணயங்கள் ராஜராஜனின் சேகரிப்பில் இருக்கின்றன.  ‘‘கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்கள் எல்லாம் தமிழகத்தோட வணிகத் தொடர்புல இருந்தாங்கன்னு சரித்திரத்துல படிச்சிருக்கோம். அதுக்கான ஆதாரங்கள் என்கிட்டே இருக்கு.

கிரேக்க மன்னர் செலுக்கஸ் நிகோடர் கி.மு.500ல வெளியிட்ட காசு, ரோமானியர்களோட நாணயங்கள், கி.பி.900ல வெளியிடப்பட்ட ஓட்டை சீனா காசு வச்சிருக்கேன். கி.மு. காலத்துல வாழ்ந்த உதயன் சேரலாதன் (கி.மு.350), சேரன் பெருஞ்சேரலாதன் (கி.மு.220), கோப்பெருஞ்சோழன் (கி.மு.25), பழையன் மாறன் (கி.மு.25), பசும்பூட் பாண்டியன்(கி.மு.180), முதுகுடுமிப் பெருவழுதி (கி.மு.350) நாணயங்களும் இருக்கு. அதற்குப் பிறகான சேரன் செங்குட்டுவன் (கி.பி.175), உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன் (கி.பி.225), பாண்டியன் நெடுஞ்செழியன் (கி.பி.3ம் நூற்றாண்டு), ராஜராஜ சோழன் (கி.பி.1014), ராஜேந்திர சோழன்(கி.பி.1035) நாணயங்களும் வச்சிருக்கேன்.

அசோகர், குட்டுவன் கோதை, பாண்டிச்சேரி பழைய நாணயம், விக்கிரமாதித்தனை ஜெயித்த சாலிவாகனன் நாணயம், வஸ்தா, சிவாஜி, உதய கணேச ஜெயபாண்டியன் நாணயங்களும் இருக்கு...’’ என்கிறார் ராஜராஜன்.  1526 முதல் 1858 வரை 333 ஆண்டுகள் 21 மொகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்டார்கள். இந்த மன்னர்கள் வெளியிட்ட எல்லா நாணயங்களும் ராஜராஜனிடம் இருக்கின்றன.

‘‘ஒருமுறை ஜஹாங்கிர் மன்னனுக்கு உடல்நிலை ரொம்பவே மோசமாயிடுச்சு. அவருக்குப் பதிலா, அவரது மனைவி நூர்ஜஹான் ஆட்சிக்கு வந்தாங்க. அவங்க ஒரு நாணயத்தை அச்சிட்டு (கி.பி.1620) பயன்படுத்தினாங்க. ஜஹாங்கிர் குணமாகி திரும்பவும் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு, நூர்ஜஹான் வெளியிட்ட நாணயங்களுக்கு தடை விதிச்சுட்டார். அதை வச்சிருக்கவங்கல்லாம் உடனடியா அரச சபையில ஒப்படைக்கணும். மீறி வச்சிருந்தா தலை துண்டிக்கப்படும்னு அறிவிச்சார். தப்பித் தவறி என்கிட்ட ஒரு நாணயம் வந்து சேந்திருக்கு.

ராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றியபோது வெளியிடப்பட்ட நாணயங்களும் இருக்கு. அதுக்கெல்லாம் இப்போ பல ஆயிரம் ரூபாய் மதிப்பு. கிருஷ்ணதேவராயர், ராஜராஜ சோழன் தங்கக்காசுகளும் வச்சிருக்கேன். 4.400 கிராம், 3.300 கிராம்ங்கிற அளவுல ராஜராஜன் தங்கக்காசுகளை வெளியிட்டிருக்கார். ராஜராஜ சோழனின் சித்தப்பா உத்தமசோழன் கி.பி. 1000ல் வெளியிட்ட முக்கியமான நாணயத்தையும் சேகரிச்சிருக்கேன்.
என் பாட்டனும், தாத்தாவும், தந்தையும் கொடுத்துட்டுப் போன பெருஞ்செல்வம் இது.

என்னைப் போலவே என் பிள்ளைகளுக்கும் இதுல தீராத ஆர்வம் இருக்கு. பள்ளி, கல்லூரிகள்னு எடுத்துட்டுப் போய் பிள்ளைகளுக்கு வரலாற்றைச் சொல்லித் தர்றோம். இறந்த காலத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டாதான் எதிர்காலம் நல்லாயிருக்கும்.

வெறும் வாய்ச்சொல்லா இல்லாம வரலாற்றை சாட்சியத்தோட சொல்லிக் கொடுக்கிறேன். என் வருமானத்துல ஒரு தொகையை இந்த சேகரிப்பை பாதுகாக்கவும், புதுசா சேகரிக்கவும் செலவு பண்றேன். இப்போ என் பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கியிருக்காங்க. அவங்களும் இதுக்குன்னு தனியா செலவு பண்றாங்க.

இன்னும் ஏராளமான சரித்திரங்கள் நாணயங்களா, சிற்பங்களா, புழங்கு பொருட்களா, கல்வெட்டுக்களா, பட்டயங்களா பூமிக்குள்ள புதைஞ்சு கிடக்கு. மதிப்பு தெரியாம பல பேர் வீடுகள்ல முடங்கிக் கிடக்கு. அதையெல்லாம் சேகரிக்கணும்...’’ - உற்சாகமாகச் சொல்லி முடிக்கிறார் ராஜராஜன்.
ஏராளமான சரித்திரங்கள் நாணயங்களா, சிற்பங்களா, புழங்கு பொருட்களா, கல்வெட்டுக்களா, பட்டயங்களா பூமிக்குள்ள புதைஞ்சு கிடக்கு.

 - வெ.நீலகண்டன்
படங்கள்: நாகராஜ்