சமூகத்தை மாற்ற திருக்குறளால் தான் முடியும்?



தமிழ்ப் பாடத்தில் ஒரு ஓரமாக ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இனியும் திருக்குறளுக்கு இல்லை. ‘‘திருக்குறளை கட்டாய தனிப் பாடமாக பள்ளிகளில்  அறிமுகப்படுத்த வேண்டும்!’’ என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை நீதிமன்றத்தின் மதுரை கிளை.

இப்படி ஒரு தீர்ப்பைப் பெற, வழக்கு தொடுத்தவர் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜரத்தினம். ஓய்வுபெற் வணிகவரி அதிகாரி. உண்மையான சமூக நிலையை உணர்ந்து பேசுகிறார் இந்த மனிதர்!

‘‘தமிழ்ப் பண்பாடும் ஒழுக்கமும் இப்ப யாருக்கும் தெரியறதில்லை. மனுஷங்களுக்கு மத்தியில பொறுமை இல்லை... அடுத்தவங்களை மதிக்கிற மனசு இல்லை. அதனால விவாகரத்துகள் அதிகரிச்சிருக்கு. கொலை, கற்பழிப்பு போன்ற கொடூரக் குற்றங்கள் அதிகமாகியிருக்கு. சின்னப் பசங்க கூட குற்றச் செயல்கள்ல ஈடுபடுறாங்க. யாராவது உதவி கேட்டு வந்தா கூட, ‘இவங்க கொள்ளை கும்பலோ’னு சந்தேகம்  வர்ற அளவுக்கு நிலைமை இருக்கு.

இதுக்கெல்லாம் காரணம், கல்வியோடு நல்லொழுக்கங்களை நாம சொல்லிக் கொடுக்காததுதான். சமீபத்துல ரிசர்வ்  வங்கி ஆளுநர்  ரகுராம் ராஜன் கூட, ‘பணத்தை எப்படி  ஈட்ட வேண்டும் என்பதைச்  சொல்லித் தரும்  கல்வி முறை, பண்புள்ளவர்களை  உருவாக்காது’னு சொல்லியிருக்கார். ஒழுக்கங்களைச் சொல்லித் தர திருக்குறளை விட சிறந்த நூல் உலகத்துலயே இல்லை.

திருக்குறளை தனிப் பாடமாக்கணும்னு 1948வாக்கிலேயே அரசு ஆணை பிறப்பிச்சாங்க. அதை அமல்படுத்தாமல் விட்டதன் பலனைத்தான் இப்போ அனுபவிக்கறோம். கரப்ஷன் புரையோடிப் போயிருக்குற நம்ம சமூகத்தைக் காப்பாற்ற திருக்குறளால மட்டும்தான் முடியும். இனியாவது காலம் கடத்தாம அதைச் செய்யணும்னுதான் வழக்கு தொடுத்தேன்!’’ என்கிறார் ராஜரத்தினம் தெளிவாக.

இவர் சார்பாக இந்த வழக்கில் வாதாடி வெற்றி கண்டிருக்கும்  வழக்கறிஞர்  ஏ.சரவணகுமார் தொடர்கிறார்...‘‘திருக்குறள் ஏற்கனவே தமிழ்ப் பாடத்தில் இருக்கு. அதை தனிப் பாடமாக்கினா பிள்ளைகளுக்கு பாடச் சுமை கூடும்னு எதிர் வாதம் வச்சாங்க.

ஆனா, வழக்கை விசாரிச்ச  நீதிபதி  மகாதேவன்  அதை ஏத்துக்கலை. மாணவப் பருவத்தில் எல்லா பாடங்களும் சுமைதான். வளர்ந்த பிறகுதானே படிப்பின் அருமை பிள்ளைகளுக்குப் புரியும்? அறிவை வளர்க்கிற பாடங்கள் மட்டுமே பிள்ளைகளுக்குப் போதாது.

தர்மம், நீதி, நியாயம், சகிப்பு உணர்வுகள்  இல்லாத  அறிவாளிகள் இந்த சமூகத்தைச்  சீரழிச்சிடுவாங்க. இதையெல்லாம் நீதிபதி ஏத்துக்கிட்டுத்தான் இந்தத் தீர்ப்பை கொடுத்திருக்கார்.

திருக்குறளை விரிவாக கற்பிக்கும் பாடத் திட்டத்தை  அரசு  உருவாக்கி, அடுத்த கல்வி ஆண்டில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அதை அறிமுகப்படுத்தணும்னு தீர்ப்பு சொல்லுது!’’ என்கிறார்  சரவணகுமார் உற்சாகமாக!
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்!

அறிவை வளர்க்கிற பாடங்கள் மட்டுமே பிள்ளைகளுக்குப் போதாது. தர்மம், நீதி, நியாயம், சகிப்பு உணர்வுகள்இல்லாத அறிவாளிகள் இந்த சமூகத்தைச் சீரழிச்சிடுவாங்க.

- பிஸ்மி பரிணாமன்