தமிழ் சினிமாவின் பாவமன்னிப்பு கூண்டு!



நான் உங்கள் ரசிகன்

மனோபாலா

சுஹாசினியோட வீட்ல எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும். அவங்க அம்மாவை ‘மன்னி’ன்னும், அப்பா சாருஹாசனை ‘அண்ணா’ன்னும்தான் கூப்பிடுவேன். அவங்க வீட்ல பொறக்காத புள்ள நான். ‘எம் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ படப்பிடிப்பு நடக்கும்போதுதான் மணிரத்னத்தை சுஹாசினி சந்திச்சாங்க. அவங்க திருமணம் நடந்துச்சு. அதன் பிறகுதான் அந்தப் படத்தோட க்ளைமேக்ஸை எடுத்தேன். சுஹாசினி மனசில் உள்ளது அவங்க முகத்தில் உடனே ரிஃப்ளெக்ட் ஆகிடும். ‘‘என்ன சுஹாசினி, கோபமா இருக்கியா?’’னு கேட்டால் போதும். ‘‘ஆமாம்’’னு  சொல்லி, கடகடனு அதுக்கான காரணம் முழுக்கச் சொல்லிடுவாங்க.



‘‘உங்ககிட்ட சொன்னதால என்னோட ஸ்ட்ரெஸ் குறைஞ்சிருக்கு’’னு சொல்லுவாங்க! பொதுவா தமிழ் சினிமாவில் எல்லாருமே என்னை ‘பாவமன்னிப்பு கூண்டு’னுதான் சொல்வாங்க. காரணம், நிறைய நடிகைகள் அவங்களோட பர்சனல் பிரச்னைகளை எங்கிட்ட பகிர்வாங்க. அந்த வகையில் நான் ரொம்ப கொடுத்து வச்சவன்னு நினைக்கறேன். ‘எம் புருஷன்தான்...’ படத்தை இந்தியில் இயக்கும்போது, ‘‘தமிழ்ல சுஹாசினி பண்ணின ரோல்தான் வேணும்.

அதுலதான் ஸ்கோப் அதிகம்’’னு கேட்டு வாங்கினாங்க ரேகா. ‘‘எங்களுக்கெல்லாம் ஒரே மாதிரி கேரக்டர்களா ஏன் கொடுக்குறீங்க?’’னு ரேகாவும், சுஹாசினியும் ஆதங்கப்பட்டதும் உண்டு. சுஹாசினியை தமிழ் சினிமா சரியா பயன்படுத்திக்கலைன்னு சொல்லுவேன். அவ்வளவு திறமைசாலி அவங்க! 

1980கள்ல ஜொலித்த நட்சத்திரங்கள் எல்லாம் ஒரு குரூப்பா இருக்கோம். அதுக்கு தலைமையே சுஹாசினிதான். அவங்க கேங்ல நானும் இருக்கேன்றதுல ஒரு சந்தோஷம். ‘எய்ட்டீஸ் குரூப் மாதிரி ஒரு கோல்டன் குரூப் வேற எங்கேயும் கிடையாது’னு இப்ப உள்ள தலைமுறையினரும் வியக்குறாங்க. சமீபத்துல ‘அந்தாராம்’னு நடன நாடக நிகழ்ச்சி ஒண்ணு பண்ணினாங்க சுஹாசினி. அதுல அவங்க ஒரு சீன்ல அந்தரத்துல இருந்து இறங்கி வரணும். ரோப் கட்டி இறங்கினால்தான் அது சாத்தியம். ‘இந்த மாதிரி ரிஸ்க் காட்சிகள் வேணாம்’னு அவங்ககிட்ட சொன்னேன்.



ஆனா, அதையும் தாண்டி அந்த நிகழ்ச்சியை சிறப்பாக்கினாங்க. ‘அந்தாராம்’ ஹிட் ஆனதால இப்ப வெளிநாடுகள்ல கூட அந்த நிகழ்ச்சியை பண்ணிட்டு வர்றாங்க. இப்போ இன்னொரு புது கான்செப்ட்டுக்காக ஆந்திரா அரசாங்கத்துல இருந்து அழைப்பு வந்திருக்கு. இந்த முறை ‘தந்தைக்கும் மகளுக்குமான புரிதல்’... அதோட சீன்ஸ் சொன்னாங்க. அவ்வளவு இன்ட்ரஸ்ட்டிங். கண்டிப்பா அதுவும் ஹிட் ஆகும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!

ரேவதியோட குட் புக்லயும் நானிருக்கேன். அவங்க ஒரிஜினல் பெயர் ஆஷா. ‘மண்வாசனை’யில் ரேவதியின் செலக்‌ஷன் ரொம்ப சுவாரஸ்யமானது. அவங்க சைக்கிள்ல எங்கேயோ போய்க்கிட்டு இருந்தாங்க. அப்போ பாரதிராஜாவோட பார்வையில் பட்டாங்க. ‘‘உங்களை டைரக்டர் கூப்பிடுறார்’’னு அவங்ககிட்ட அசிஸ்டென்ட் போய்ச் சொல்றார். ‘‘யார் அந்த டைரக்டர்?’’னு ரேவதி, பாரதிராஜாவைப் போய்ப் பார்த்தார். ‘‘நடிக்க வர்றீயா?’’னு அவங்களப் பார்த்து பாரதிராஜா கேட்க, ‘‘நீங்க யாரு என்னைக் கேட்குறதுக்கு?’’னு சொல்லிட்டார் ரேவதி. அப்புறம் ரேவதியோட அப்பாவை சந்திச்சுப் பேசினார் பாரதிராஜா. ‘‘உங்க பொண்ணை நடிக்க அழைச்சிட்டுப் போறேன்.

உங்க பொண்னு நல்ல நடிகையா வருவாங்க’’னு சொன்னார். ரேவதியோட அப்பா, அம்மா, சகோதரி...  மூணு பேருக்குமே ஆஷா ஒரு நடிகையா வருவாங்கனு நம்பிக்கையே இல்லை. பின்னாளில் ‘மண்வாசனை’ பார்த்துட்டு பிரமிச்சுப் போனாங்க. பாலசந்தர், பாரதிராஜா இவங்க கண்டுபிடிப்புகள் எப்பவும் எக்ஸ்க்ளூசிவ்வா இருக்கும். திறமைசாலிகளை அவங்க எப்படிக் கண்டுபிடிக்கறாங்க என்பதே பெரிய ஆச்சரியம். பாரதிராஜா படம்னாலே, ஹீரோயின் மொதல்ல கிடைச்சிடுவாங்க. அப்புறம்தான் ஜாடிக்கேத்த மூடி மாதிரி ஹீரோவைத் தேடுவாங்க.

‘மண்வாசனை’யில் ரேவதி செட் ஆன பிறகுதான் பாண்டியன் கிடைச்சார். அதுக்குப் பிறகு அவங்க பிஸியாகிட்டாங்க. விருதுகள் எக்கச்சக்கம் வாங்கியிருக்காங்க. ரேவதி, சுஹாசினி உள்பட எய்ட்டீஸ் குரூப் பெண்கள் பலரும் சினிமாவை அவ்வளவு நேசிக்கறவங்க. திரைப்பட விழா எந்த நாட்டுல நடந்தாலும் வெறி கொண்டு போய்ப் பார்த்து ரசிப்பாங்க. அவங்களாலதான் உலக சினிமாக்கள் மீது எனக்கும் ஒரு பிடிப்பு வந்து பார்க்க ஆரம்பிச்சேன். ‘மௌனராகம்’ மணிக்கும், ரேவதிக்கும் பெயர் வாங்கிக் கொடுத்த படம். என் ஒப்பீனியன்ல, மணிக்கு தி பெஸ்ட் ஃபிலிம் அதுதான்!

‘அஞ்சலி’யில் ரேவதி பண்ணியிருக்கும் ரோல் அவ்வளவு கஷ்டமானது. ஆனா, வெகு இயல்பா பண்ணியிருப்பாங்க. ரேவதியை ஏதாவது ஒரு ஃபங்ஷனுக்கு கெஸ்ட்டா நான் கூப்பிட்டால், ‘‘உங்களுக்கு வேற யாரும் கிடைக்கலைனு தானே என்னை இன்வைட் பண்றீங்க?’’னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்க. மீண்டும் மீண்டும் களத்துல இறங்கி இப்போ தெலுங்கு, தமிழ்னு எல்லா இடத்திலும் சிறகடிச்சுப் பறந்திட்டிருக்காங்க. அவங்க தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துறேன்.

என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத ‘நாட்டியப் பேரொளி’ பத்மினியம்மாவைப் பத்தி சொல்ல மறந்துட்டேன். குட்டி பத்மினி தயாரிப்பில், நான் இயக்கின இந்தி டி.வி சீரியல்ல பத்மினியம்மா நடிச்சிருந்தாங்க. அந்த சீரியல்ல, மார்க்கெட் இழந்த நடிகை மீண்டும் சீரியல்ல நடிக்க வர்ற மாதிரி கதையமைப்பு. யாருமே மதிக்காதபோது, ஒரே ஷாட்ல அந்த நடிகை தன் நடிப்பால் கைதட்டல் வாங்கிக் குவிக்கற மாதிரியான சீன்கள் வச்சிருந்தேன். அந்த சீன்களை உயிரோட்டமா நிகழ்த்திக் காட்டினார் பத்மினியம்மா. பிரசாத் ஸ்டூடியோவில்தான் ஷூட்டிங். பக்கம் பக்கமான இந்தி டயலாக்கை ஒரே டேக்ல அவங்க பேசி, நடிச்சு யூனிட்டையே பிரமிக்க வச்சிட்டாங்க. 

‘‘நான் நாட்டியத்துலதான் ஆர்வமா இருந்தேன். எனக்குள்ள நடிப்புத் திறமை இருந்தது எனக்கே தெரியாதது. படிப்படியாத்தான் நடிப்பில் பெயர் வாங்கினேன். நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போதுதான் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய நிலை. கல்யாணம் ஆகி செட்டில் ஆன பிறகு வந்த பட வாய்ப்பு, ‘தில்லானா மோகனாம்பாள்’. எனக்கு அப்போ 41 வயசு. ‘உன்னை ஒரு 16 வயசுப் பொண்னா நினைச்சு நடிக்கணும்’னு சிவாஜி சொன்னார்.

காதலை கண் பார்வையிலேயே சொல்லணும்னு சில டிப்ஸ்களை சொல்லிக் கொடுத்தார். அந்தப் படத்துல நான் அவ்வளவு சிறப்பா நடிச்சதுக்கு சிவாஜியும் ஒரு காரணம்!’’னு பத்மினியம்மா சொன்னாங்க. திருமணத்திற்குப் பிறகு அவங்க நடிச்ச படங்கள்தான் அவங்களுக்கு மிகப்பெரிய பெயரையும், புகழையும் கொடுத்துச்சு. ‘‘கல்யாணம் ஆனதும் அம்மா கேரக்டர்களுக்கு கூப்பிடுறது தமிழ் சினிமாவில் வழக்கமா இருக்கு.

நான், சரோஜாவெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுதான் ஹீரோயினா மிகப்பெரிய புகழ் பெற்றோம். நல்ல நடிகைகளை இன்னும் கொஞ்ச காலம் நடிக்க வையுங்க!’’னு படப்பிடிப்பில் அவங்க சொல்வாங்க. பத்மினியம்மாவுக்குப் பிடிச்ச வஞ்சிரம் மீன் குழம்பைப் பத்தியும் கடைசியா அதை அவங்க ஆசைப்பட்டு கேட்ட சம்பவத்தையும் தொடர் ஆரம்பத்துலயே சொல்லியிருப்பேன். அவங்க இறந்த அன்னிக்கு வீனஸ் காலனியிலுள்ள ராகினி வீட்டுக்கு போய்ப் பார்த்தப்போ ஒரே அதிர்ச்சி...

பாலசந்தர், பாரதிராஜா இவங்க கண்டுபிடிப்புகள்

எப்பவும் எக்ஸ்க்ளூசிவ்வா இருக்கும். திறமைசாலிகளை அவங்க எப்படிக் கண்டுபிடிக்கறாங்க என்பதே பெரிய ஆச்சரியம்.

(ரசிப்போம்...)
தொகுப்பு: மை.பாரதிராஜா
படங்கள் உதவி: ஞானம்