ஆர்க்டிக் பனிக்கு அஞ்சலி!



எதிரில் ஆடியன்ஸே இல்லாத மேடையில் நிகழ்ச்சி நடத்துவது என்பது எந்தக் கலைஞனுக்கும் அவமானம். பணம் கொடுத்தாவது கூட்டத்தைத் திரட்டும் அரசியல்வாதிகளும் இந்த தலைகுனிவுக்கு அஞ்சுகிறார்கள். உலகப் புகழ்பெற்ற இத்தாலி இசைக்கலைஞர் லுடோவிகோ ஐனாடி, எதிரில் யாருமே இல்லாத ஒரு மேடையில் சமீபத்தில் இசை நிகழ்ச்சி நடத்திவிட்டு, ‘‘உலகிலேயே நான் ஏறிய மிகச் சிறந்த மேடை இதுதான்’’ என்றார். காரணம், அதன் நோக்கம்!



‘உலகின் தெர்மாமீட்டர்’ என ஆர்க்டிக் பிரதேசத்தைச் சொல்வார்கள். இங்கு என்ன விபரீதம் நிகழ்ந்தாலும், அதன் விளைவுகள் இயற்கைப் பேரழிவாக உலகைத் தாக்கும். சமீப ஆண்டுகளாக இங்கு பனிப்பாறைகள் அதிகமாக உயர்வதும், இதனால் கடல் மட்டம் உயர்வதும், உலகெங்கும் பெருவெள்ளங்களாக, பேரழிவு தரும் சூறாவளிகளாக, வாட்டியெடுக்கும் வறட்சிகளாக விளைவுகளைத் தருகின்றன.

வடகிழக்கு அட்லான்டிக் மற்றும் ஆர்க்டிக் பிரதேசங்கள் அனைத்தும் 15 ஐரோப்பிய நாடுகளின் எல்லையை ஒட்டி வருகின்றன. இந்த நாடுகள் கூடிக் கூடிப் பேசுகின்றன. ஆனால் ஆர்க்டிக் பகுதியின் சூழலைப் பாதுகாப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ‘உலகிலேயே பாதுகாப்பற்ற கடல்பகுதியாக ஆர்க்டிக் இருக்கிறது. இங்கு நிகழும் பேரழிவைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கிரீன்பீஸ் அமைப்பு கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. சுமார் 80 லட்சம் பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த 80 லட்சம் பேரின் குரலாக ‘ஆர்க்டிக்கிற்கு ஒரு அஞ்சலி’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்க கிரீன்பீஸ் அமைப்பு திட்டமிட்டது. இதற்காகவே பியானோ இசைத்தார் ஐனாடி. பிரமாண்ட பியானோவை கப்பலில் ஏற்றிச் சென்று, நார்வே நாட்டின் ஸ்வால்பார்ட் அருகே ஆர்க்டிக் பனிப்பாறைகளுக்கு மத்தியில் மரத்தில் மேடை போட்டனர்.

ஐனாடி பாடலை பியானோவில் இசைக்க, ஆங்காங்கே பனிப்பாறைகள் சரிந்துவிழும் காட்சிகளும் ஓசைகளும்கூட சேர்ந்து அவல உணர்வைத் தந்திருக்கின்றன. ‘‘ஒரு புனிதம் நொறுங்கிச் சரிவதை என் கண்களால் பார்த்தேன். இந்த அழிவைத் தடுக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஐனாடி.

- அகஸ்டஸ்