திருமணம்



‘‘ஏய் சங்கவி... ஊர்ல உள்ளவளுக்கெல்லாம் கல்யாணம் ஆகுது. உனக்கு ஒரு ராஜகுமாரன் ஏன்டி இன்னும் வரமாட்றான்?’’ போகிற போக்கில் பாக்கியம் பாட்டி கேட்டுவிட்டுச் சென்றாள். சங்கவிக்கு எரிச்சல் வந்தது. பாக்கியம் என்றில்லை, ஊரில் எல்லாருமே இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். சங்கவியின் வருத்தத்திற்குக் காரணம், அவர்கள் கேள்வி கேட்பது மட்டும் அல்ல. இந்தக் கேள்வியை அவளுடன் வரும் உயிர்த்தோழி ஸ்வேதாவிடம் யாரும் கேட்பதில்லை!



இருவரும் ஒரே தெரு, ஒரே வயது, பள்ளி... பின்னர் கல்லூரி என்று சேர்ந்தே சுற்றியவர்கள். இப்போதும் கடைத் தெருவிற்கோ கோயிலுக்கோ சேர்ந்தேதான் போவார்கள். என்றாலும் சங்கவியை மட்டும் அந்தக் கேள்வி துரத்துகிறது. அஞ்சுவட்டத்தம்மன் கோயிலை அடைந்து, அர்ச்சனை முடிந்து வாசலில் அமர்ந்தபோது சுவேதாவிடம் சங்கவி கேட்டேவிட்டாள்.

‘‘யாரைப் பார்த்தாலும் எப்ப கல்யாணம்னு என்னை மட்டுமே கேக்குறாங்கடி. நீயும் என் வயசுதானே! ஏன் உன்னை கேக்க மாட்றாங்க?’’ சுவேதா விரக்தியாக சிரித்தபடி சொன்னாள்... ‘‘உனக்கும் இருபத்திநாலு, எனக்கும் இருபத்திநாலுன்னாலும் இருபத்தி எட்டு வயசுல என் அக்கா ஒருத்தி வீட்டுல கல்யாணம் ஆகாம இருக்கும்போது என்னை எப்படிக் கேட்பாங்க?’’ அவர்களுக்குள் கனத்த அமைதி நிலவியது.

-தங்க.நாகேந்திரன்