செகண்ட் ஒப்பீனியன்!



டாக்டர் கு.கணேசன்

ஆபரேஷனுக்குப் பிறகான சிரமங்களைக் குறைக்க பைபாஸ் சர்ஜரியில் புது டெக்னிக் வந்துள்ளது. இந்த லேப்ராஸ்கோப்பிக் பைபாஸ் ஆபரேஷனை விளக்கும் கட்டுரை இது!

பைபாஸ் சர்ஜரி இப்போ ஈஸி!

ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில், அரை டஜன் ஆப்பிள் வாங்கிக்கொண்டு, மாரடைப்பு ஏற்பட்ட நண்பரை மருத்துவமனையில் பார்க்கப் போனால், ‘‘ஆஞ்சியோகிராம்ல பார்த்தா மூணு பிளாக் இருந்தது. எல்லாமே 80 பர்சென்ட். வேறுவழியில்லே... பைபாஸ் பண்ணிக்கிட்டேன்’’ என்று சாதாரணமாகச் சொல்வார். இந்தச் சொல்லாடல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இப்போது அதிகரித்து வருகிறது.



இப்போது மாரடைப்புக்குத் தீர்வு தரும் முக்கிய சிகிச்சையாக பைபாஸ்தான் இருக்கிறது. புகைபிடிப்போர், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், ரத்தக் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் ஆகியோருக்கு மாரடைப்பு வரும் அபாயம் அதிகம் என்பதால், இந்தக் காரணிகளைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே மாரடைப்பைத் தடுக்க முடியும்.

பைபாஸ் ஆபரேஷனைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் ‘அத்திரோஸ்கிலிரோசிஸ்’ எனும் ரத்தக்குழாய் அடைப்பை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். ரத்தத்தில் கொழுப்பு மிகுந்தால் அது தண்ணீர்க் குழாய்களில் பாசி படிகிற மாதிரி ரத்தக்குழாய்களின் உட்சுவரில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டிக்கொள்கிறது. இதைத்தான் ‘அத்திரோஸ்கிலிரோசிஸ்’ (Atherosclerosis) என்கிறார்கள். இது இயற்கையாகவே நடைபெறுகிற நிகழ்ச்சி. இது எல்லோருக்கும் 20 வயதிலிருந்து 30 வயதுக்குள் ஆரம்பிக்கும். பின்பு, படிப்படியாக இந்தப் படிவு அதிகரிக்கும்.

எல்லா ரத்தக்குழாய்களிலும் இது நிகழ்கிறது என்றாலும், இதயத்தசைகளுக்கு ரத்தம் சப்ளை செய்யும் கொரோனரி தமனிகளில் இது அதிகமாக நடக்கிறது. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு ரத்தக்குழாய்கள் கண்ணாடி மாதிரி வழுவழுப்பாக இருக்கும். இதனால் கொழுப்பு அதில் ஒட்டுவதற்குத் தாமதம் ஆகும். ஆனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், புகை பிடிப்பவர்களுக்கும் ரத்தக்குழாய்கள் சுண்ணாம்புத் தரை மாதிரி சொரசொரப்பாகிவிடும்.

வழுவழுப்பான தரையைவிட சொரசொரப்பான தரையில் அழுக்கு சுலபமாக ஒட்டிக்கொள்ளும், இல்லையா? அதுமாதிரிதான் இதில் கொழுப்பு சுலபமாக ஒட்டிக் கொள்ளும். இது அடுத்தகட்ட பாதிப்புகளுக்கு அடி போடும். முக்கியமாக, கொரோனரி தமனியை அடைக்க ஆரம்பிக்கும். இதனால் இதயத்தசைகளுக்கு ரத்தம் கிடைக்காது. இதயம் செயல்பட சிரமப்படும். உடனே நெஞ்சு வலிக்கும். சட்டையெல்லாம் நனைகிற அளவுக்கு உடல் வியர்த்துக் கொட்டும். இதுதான் மாரடைப்பு. 

இந்த அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு முதலில் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படும். அதில் இரண்டு ரத்தக்குழாய்கள் அடைத்துக்கொண்டிருந்தால் ‘பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி  ஸ்டென்ட்’ சிகிச்சை மேற்கொள்ளப்படும். மூன்று ரத்தக் குழாய்களிலும் அடைப்பு இருக்கிறது என்றால், ‘பைபாஸ் அறுவை சிகிச்சை’ மேற்கொள்ளப்படும். சமயங்களில் இரண்டு ரத்தக்குழாய் அடைப்பு உள்ளவர்களுக்கும் இந்த ஆபரேஷன் செய்ய வேண்டியது வரும். மாரடைப்பின் தன்மை, நோயாளியின் நிலைமை ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை மாறும்.

பிரதான சாலைகளில் வாகன நெரிசலைக் குறைக்க பைபாஸ் சாலை அமைப்பது மாதிரி, இதயத்தில் அடைபட்ட ரத்தக்குழாய்களுக்கு பைபாஸ் அமைப்பதுதான்  ‘பைபாஸ் ஆபரேஷன்’. இதயத்தில் போடப்படும் இந்த பைபாஸ் சாலைக்கு, காலிலிருந்து சபேனஸ் சிரை ரத்தக்குழாயை தேவையான நீளத்துக்குத் துண்டித்து எடுத்துக்கொள்கிறார்கள். சிரை ரத்தக்குழாயின் ஒரு முனையை இதயத்தில் மகாதமனி ஆரம்பிக்கின்ற இடத்தில் கொரோனரி ரத்தக்குழாய்க்கு அருகில் செருகி தைத்துவிடுகிறார்கள்.

அதன் இன்னொரு முனையை கொரோனரி ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கின்ற இடத்தைத் தாண்டி, நன்றாக இருக்கும் பகுதியில் தைத்துவிடுகிறார்கள். இதனால், கொரோனரி ரத்தக்குழாயில் இவ்வளவு காலமாக அடைப்பினால் ரத்தம் தேங்கிக் கிடந்த நிலைமை மாறி, அது பைபாஸ் குழாய் வழியாக இதயத்தசைகளுக்குப் புதுவேகத்துடன் பாய்கிறது. இதன் பலனால், மாரடைப்பு சரியாகிறது.

இந்த ஆபரேஷன் செய்யப்படும்போது, நோயாளிக்கு முழு மயக்கம் தரப்படுகிறது. நெஞ்சின் நடு எலும்பை 12 அங்குல நீளத்துக்கு வெட்டி நெஞ்சை விரிக்கிறார்கள். ‘இதயம் நுரையீரல் இயந்திரத்தை’ (Heart-lung machine) பொருத்தி, உடலின் ரத்த ஓட்டப்பாதையை மாற்றுகிறார்கள். உடலில் இதயம் செய்யும் வேலையை இது தற்காலிகமாகச் செய்யும். இப்போது இதயத்தின் ஏறுதமனியை ஒரு பற்றுக்கோல் போட்டு மூட, இதயத்துக்கு ரத்தம் செல்வது நின்றுவிடுகிறது.

குளிர்ந்த பொட்டாசியம் குளோரைடு கலந்த திரவத்தை கொரோனரி ரத்தக்குழாய்களுக்கு அனுப்பி, இதயத் துடிப்பை நிறுத்தி, இதயத்தை சில மணி நேரங்களுக்கு ஓய்வெடுக்க வைக்கிறார்கள். இந்த நேரத்தில் இதயம் உயிருடன் இருக்கவும் இந்தத் திரவம் உதவுகிறது. ஆபரேஷன் முடிந்த பிறகு, ‘இதயம் நுரையீரல் இயந்திரத்தை’ ரத்த ஓட்டப்பாதையிலிருந்து துண்டிக்கிறார்கள். இதயத்துடன் ரத்த ஓட்டப்பாதையை இணைத்து மீண்டும் துடிக்க வைக்கிறார்கள். நெஞ்செலும்பை உலோக வயர் போட்டுத் தைத்து நெஞ்சை மூடுகிறார்கள். நோயாளிக்கு மயக்கம் தெளிய வைக்கிறார்கள்.

பைபாஸ் ஆபரேஷன் இப்போது தமிழகத்தின் எல்லா பெரிய நகரங்களிலும் சாதாரணமாகச் செய்யப்படுகிறது. ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சைக்கு ஆகும் செலவைவிட குறைவுதான். என்றாலும் சில அசௌகரியங்கள் இதில் உண்டு. இந்த ஆபரேஷனில் அறுத்து மூடிய நெஞ்சுப்பகுதியில் சில நாட்களுக்குக் கடுமையான வலி ஏற்படும். சிலருக்கு நோய்த்தொற்று, சுவாசிக்க சிரமம், புண் ஆறுவதில், இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவதில் தாமதம், வேலைக்குத் திரும்புவதில் தாமதம், நீண்ட தழும்பு ஏற்படுவது போன்ற தொல்லைகளும் ஏற்படுவது உண்டு.

இப்போது இதற்கெல்லாம் தீர்வு தருகிறது, ‘நம்பியார் டெக்னிக்’ எனும் புதிய பைபாஸ் ஆபரேஷன். ரொம்பவும் ஈஸியான ஆபரேஷன் இது. இந்த அதிநவீன சிகிச்சையைக் கண்டுபிடித்தவர், டெல்லியைச் சேர்ந்த டாக்டர் நம்பியார். இந்த லேப்ராஸ்கோப்பிக் பைபாஸ் ஆபரேஷனில் நெஞ்செலும்பை வெட்டவேண்டிய அவசியமில்லை. பதிலாக, இடது மார்புக்குக் கீழே இரண்டு அங்குலத்துக்குத் துளை போட்டு இது செய்யப்படுகிறது. காலிலிருந்து சிரை ரத்தக்குழாயை வெட்டி எடுப்பதற்குப் பதிலாக, மார்பிலிருக்கும் மமரி ரத்தக்குழாயைத் துண்டித்து எடுத்துக் கொள்கிறார்கள்.

வெளிச்சத்துக்காக பல்பும் கேமராவும் உள்ளடக்கிய கருவியை நுண்துளை வழியாக உள்ளே செலுத்தி, அடைத்துக் கொண்டிருக்கும் ரத்தக்குழாய்க்கு முன்னும் பின்னும் இந்தப் புது ரத்தக்குழாயை இணைத்துவிட்டு, அடைபட்டுள்ள ரத்தக்குழாயை வெட்டி எடுத்து விடுகிறார்கள். அறுப்பது, தையல் போடுவது, ரத்தக்கசிவைக் கட்டுப்படுத்துவது எல்லாமே அந்தத் துவாரம் வழியாகவே செய்யப்படும். இதயத்தை நிறுத்தி வைக்காமல், அது துடித்துக்கொண்டிருக்கும்போதே ஆபரேஷன் செய்யப்படுகிறது என்பதுதான் வியப்புக்குரிய விஷயம். இதில் மிகக் குறைந்த அளவில்தான் ரத்த இழப்பு இருக்கும்.

வலி மிகவும் குறைவு. ஆபரேஷன் முடியும்போது நுண்துளை ஒரு க்ளிப் போட்டு மூடப்படும். இதனால் வெளிக்காயம் விரைவில் ஆறிவிடும். நோய்த்தொற்றுக்கு வழியில்லை. தழும்பு தெரிய வாய்ப்பில்லை. சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களில் நோயாளி எழுந்து உட்கார்ந்துவிடலாம். மறுநாளே நடக்கலாம். மூன்றாம் நாளில் வீட்டுக்குச் சென்றுவிடலாம்.

ஒரு மாதத்தில் வேலைக்குத் திரும்பிவிடலாம். ஆனால், பைபாஸ் ஆபரேஷனுக்கு ஆகும் செலவைவிட இரண்டு மடங்கு அதிக கட்டணம்! இந்த ஆபரேஷன் புதுடெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெரிய நகரங்களில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் இதை யாருக்கு மேற்கொள்வது என்பதை சர்ஜன்தான் முடிவு செய்ய வேண்டும்.

துளை வழியே ஆபரேஷன்!

‘லேப்ராஸ்கோப்பிக்’ ஆபரேஷன் (Pin hole  surgery) என்பது, உடலில் சிறிய  துளைகள் போட்டு, அதன் வழியாக கேமரா இணைந்த ஆபரேஷன் கருவிகளை உள்ளே செலுத்தி, மிக நுணுக்கமாக செய்யப்படும் அறுவை சிகிச்சை. குடல்வால், பித்தப்பை, கர்ப்பப்பை, குடல், சிறுநீரகம் போன்ற பகுதிகளில் இந்த ஆபரேஷனை செய்து வந்தார்கள். இப்போது பைபாஸ் சர்ஜரியும் இப்படிச் செய்கிறார்கள். இதில் ரத்த இழப்பும் வலியும் குறைவு. ஆபரேஷன் தழும்பு தெரியாது. ஆபரேஷனுக்குப் பிறகான சிரமங்களும் குறையும். ஆரம்பத்தில் 3 துளைகள் போட்டு இந்த ஆபரேஷனைச் செய்தார்கள். இப்போது ஒரு துளை அல்லது இரு துளை போட்டும் செய்கிறார்கள்.

(இன்னும் பேசுவோம்...)