மக்கள் மனோபாவம் மாறினால் குப்பைத் தொட்டியே தேவையில்லை!



சாதித்த கும்பகோணம் நகராட்சி

உள்ளாட்சி அமைப்புகள் சந்திக்கும் பெரும் சவால்களில் ஒன்று, குப்பை. நகரங்களை ஒட்டிய நீர்நிலைகளிலும், ஒதுக்குப்புறங்களிலும் மலை மலையாகக் குவிந்து கிடக்கின்றன குப்பைகள். ஏகப்பட்ட விதிமுறைகள் வைத்திருக்கிறார்கள். என்னென்னவோ திட்டம் போடுகிறார்கள். எல்லாம் ஏட்டளவில்தான். எந்தத் திட்டமும் 100 சதவீதம் நிறைவேறியதாக சரித்திரமே இல்லை. ஆனால் முதல்முறையாக கும்பகோணம் நகராட்சி, குப்பைகளை முற்று முழுதாக மறுசுழற்சி செய்து, நம்பிக்கைக்குரிய புதிய தடத்தைப் போட்டுத் தந்திருக்கிறது.



30 ஆண்டுகளாக குப்பை கொட்டிக் கொட்டி ஒரு செயற்கை மலையே உருவாகி இருந்தது இங்கு. இதில் பாதி மலையை இப்போது இல்லாமல் செய்துவிட்டார்கள்! 45 வார்டுகளை உள்ளடக்கிய கும்பகோணம் நகராட்சியில் நாளொன்றுக்கு 70 டன் குப்பை குவிகிறது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குப்பைகளை தேப்பெருமாநல்லூர் கிராமத்தில் இருக்கும் கரிக்‘குளத்தில்’ கொட்டி பெரும் குப்பை மலையை உருவாக்கி இருந்தார்கள். 8 ஏக்கர் பரப்பில் சுமார் 20 அடி உயரத்திற்கும் மேலாக வளர்ந்துகொண்டே இருந்தது குப்பை மலை.

பொதுவாக, இந்தியாவில் குப்பை மறுசுழற்சிக்கு ஆக்க பூர்வமான வழிகாட்டுதல்களோ, திட்டங்களோ இல்லை. ஒன்று, பூமிக்குள் புதைக்க வேண்டும்; அல்லது மேலே மேலே குவித்து மலையாக்கி மேலே செடி வளர்க்க வேண்டும். இவைதான் அரசு தருகிற வழிகாட்டுதல்கள். ஆங்காங்கே சில தன்னார்வக் குழுக்கள் முயற்சிகள் செய்து சிறு சிறு மாற்றங்களை உருவாக்குகின்றன. நிரந்தரத் தீர்வென்று எதுவும் உருவாக்கப்படவில்லை.

இச்சூழலில்தான், அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவான சிக்மா குளோபல் பிரைவேட் லிமிடெட், ஒரு தீர்வை கும்பகோணம் நகராட்சியிடம் முன்மொழிந்தது. சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட அத்திட்டம் சூழலையே மாற்றி விட்டது. ஒரே ஆண்டுக்குள் குப்பையில் பாதியை எவ்வித சூழல் சீர்கேடும் இல்லாமல் காலி செய்து விட்டார்கள். ‘‘1998ல நாசிக் நகராட்சியில ஒரு திட்டம் கொண்டு வந்தாங்க. குப்பையை 14 பொருட்களா பிரிச்சு மறுசுழற்சி செய்யிற அந்தத் திட்டம் தொடர்ச்சியா பயனளிக்கலே.



நாங்க அப்பப்போ சின்னச் சின்னதா சில முயற்சிகள் செஞ்சோம். எதுவும் நிரந்தரத் தீர்வா இல்லே. இந்தக் குப்பை மலை வளர்ந்துக்கிட்டே இருந்துச்சு. இந்தியாவில இருக்கிற மறுசுழற்சி திட்டங்கள் எல்லாத்திலயும் 20 முதல் 30 சதவீதம் ‘எதுவுமே செய்ய முடியாத’ கழிவுகள் மிஞ்சுது. திரும்பவும் அதை எங்காவது கொட்ட வேண்டியிருக்கு. இப்படிப்பட்ட சூழல்லதான் அந்த தனியார் நிறுவனம் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாங்க.

இங்கே குவிஞ்சிருந்த மொத்தக் குப்பையோட அளவு 1 லட்சத்து 31 ஆயிரம் கனமீட்டர். இப்போ கிட்டத்தட்ட 90 ஆயிரம் கனமீட்டர் காலியாயிடுச்சு. சுமார் நான்கரை ஏக்கர் நிலம் சுத்தமாகியிருக்கு. இன்னும் இதை மேம்படுத்துற முயற்சிகள் நடந்துக்கிட்டிருக்கு. அதுவும் சாத்தியமானா, இந்தியாவுக்கே இது ஒரு முன்மாதிரி திட்டமா இருக்கும்’’ என்று பெருமிதத்தோடு சொல்கிறார் கும்பகோணம் நகராட்சி உதவிப் பொறியாளர் பிரதான் பாபு.

என்னதான் செய்கிறார்கள் குப்பையை?
குப்பை மலைக்கு அருகில் ஒரு பெரிய எந்திரத்தை நிறுவியிருக்கிறார்கள். சுமார் 80 பேர் களத்தில் வேலை செய்கிறார்கள். ஒரு பொக்லைன் வாகனம், குப்பையை அள்ளி இந்த எந்திரத்தின் முகப்பில் உள்ள டிரா மில்லில் கொட்டுகிறது. அந்த டிரா மில்லோடு 14 கன்வேயர் பெல்ட்டுகள் இணைந்திருக்கின்றன. ஒரு பெல்ட்டில் கல், மண், ஜல்லி... மற்றொரு பெல்ட்டில் மிக நுண்ணிய மண் துகள்கள்... மற்றொரு பெல்ட்டில் பிளாஸ்டிக் என 14 விதமாக குப்பையை தனித்தனியாகப் பிரித்து குவிக்கிறது அந்த எந்திரம். பிளாஸ்டிக், லெதர் என மறுசுழற்சிக்குச் செல்லும் கழிவுகளை சுத்தம் செய்து பேக்கிங்கும் செய்து விடுகிறது.

‘‘இப்படி ஒரு நாளைக்கு 300 டன் குப்பையைக் கையாள்றாங்க. இதில 45 சதவீதம் கல், மண், ஜல்லி இருக்கு. இந்தப் பகுதியில செங்கல்சூளைகள் நிறைய இருக்கு. செங்கல்லுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள்ல கொட்டி நிரப்ப இந்த கழிவைக் கொடுக்கிறோம். சிலபேர் தங்களோட சொந்தத் தேவைக்கும் வாங்கிட்டுப் போறாங்க. 1 லோடு 75 ரூபாய். அவங்களே வாகனம் கொண்டு வந்து எடுத்திட்டுப் போகணும். ஒரு நாளைக்கு 40 லோடு போகுது.

மற்ற குப்பையில 25 சதவீதம் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக், 15 சதவீதம் மரங்கள், தேங்காய் மட்டைகள், கயிறு கழிவுகள், 7 சதவீதம் காகிதம், 3 சதவீதம் கண்ணாடிப் பொருட்கள்... 2 சதவீதம் எதுக்கும் உபயோகமில்லாத பொருட்கள். 3 சதவீதம் இரும்பு... இந்த எந்திரத்தோட ஒரு பகுதியில மேக்னட் பொருத்தப்பட்டிருக்கு. அது இரும்புப் பொருட்களைத் தனியா பிரிச்சுடும். அந்த இரும்பு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுது.

பிளாஸ்டிக்ல ரெண்டு வகை இருக்கு. மைக்ரான் கம்மியான பிளாஸ்டிக் பொருட்களை இந்த எந்திரமே தரம் பிரிச்சு, சுத்தம் செஞ்சு, பேப்பர் மாதிரி மாத்தி 225 கிலோவா பேக் பண்ணி வெளியில போட்டுடும். ஆந்திர மாநிலம், நகரியில பிளாஸ்டிக் மூலம் டீசலுக்கு மாற்று எரிபொருள் (பைராலிக்ஸ் ஆயில்) தயாரிக்கிற கம்பெனிக்கு அதை விக்கிறோம். 1 நாளைக்கு 15 டன் அளவுக்கு போகுது. மைக்ரான் அதிகமான பிளாஸ்டிக், லெதர், தேங்காய் மட்டை, சிறு சிறு மரக்குச்சிகள், எதற்குமே உதவாத பொருட்களை எல்லாம் சேர்த்து தூள்தூளா கட் பண்ணி ஒரு பகுதியில இந்த எந்திரம் குவிச்சிடும். அதை சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்புறோம்.

சிமென்ட் ஆலைகள்ல நிலக்கரியோட பயன்பாட்டைக் குறைக்க இந்த பிளாஸ்டிக் கழிவைப் பயன்படுத்துறாங்க. இதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்குது. இப்போதைக்கு இதுக்கு விலை நிர்ணயிக்கல. இப்போதான் இந்தக் கழிவை வாங்குறதுக்கு போட்டி உருவாகியிருக்கு. காலப்போக்குல இதுக்கும் விலை நிர்ணயம் பண்ணிடுவோம். மரக்கழிவுகளை பக்கத்துல இருக்கிற செங்கல்சூளைகள்ல வாங்கிக்கறாங்க. 1 நாளைக்கு நாலு முதல் அஞ்சு டன் மரங்கள் விற்பனையாகுது. அதேபோல கண்ணாடிக் கழிவுகளையும் எந்திரமே பேக் பண்ணிடும்.

அதுவும் மறுசுழற்சிக்குப் போகுது. மிக நுண்ணிய மாவுப்பகுதியை பேக் பண்ணி இயற்கை எருவா விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம். குப்பையில ஒரு துளி கூட திரும்பவும் குப்பையா மிஞ்சாது. இதுவரைக்கும் கழிவா ஒதுக்கிக் குவிச்ச எல்லாமே ஏதோ ஒரு விதத்துல பயன்படுது. இன்னும் நாலைஞ்சு மாதத்துல குப்பை மலை மொத்தமா காலியாகிடும். இப்போ, அன்றாடம் புதுசா சேர்ற குப்பைகளை பிராசஸ் செய்யிறதுக்காக இன்னொரு பகுதியில எந்திரத்தை அமைச்சுக்கிட்டிருக்கோம்.

இங்கே நாங்க செய்யிறத மக்கள் அவங்க வீட்டிலேயே செய்யலாம். மனோபாவம் மாறினா குப்பைன்னு ஒதுக்குற எல்லாமே பணமாகும். மக்கள் ஒத்துழைச்சா, இன்னும் ஒரு வருடத்துல, கும்பகோணம் குப்பைத் தொட்டி இல்லாத நகராட்சியா மாறிடும்...’’ என்று நம்பிக்கையாகச் சொல்கிறார் பிரதான் பாபு. ஆக்கபூர்வமான எந்த முயற்சிக்கும் மக்களின் ஒத்துழைப்பு கண்டிப்பாகக் கிடைக்கும்!

‘‘இதுவரைக்கும் கழிவா ஒதுக்கிக் குவிச்ச எல்லாமே ஏதோ ஒரு விதத்துல பயன்படுது. மனோபாவம் மாறினா குப்பைன்னு ஒதுக்குற  எல்லாமே பணமாகும்!’’

- வெ.நீலகண்டன்