அமைராவை அசத்திய ஜாக்கி சான்!



அனேகன்’ பட ஹீரோயின் அமைரா தஸ்தூரை ஞாபகம் இருக்கிறதா? பாலிவுட் ஹீரோயின்களில் மல்லிகா ஷெராவத்துக்கு அடுத்து, ஜாக்கி சானுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் அமைராவுக்கு அடித்திருக்கிறது. உலகெங்கும் இருக்கும் ஜாக்கி சானின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘குங்ஃபூ யோகா’வில் அமைரா, ஹோம்லி நயாகரா!



‘‘ஜாக்கியின் படத்துல நானும் நடிச்சிருக்கேன்றதை இன்னிக்கு வரை நம்ப முடியல. வார்த்தைகள்ல விவரிக்க முடியாத ஒரு சந்தோஷம். போன டிசம்பர்ல ‘குங்ஃபூ யோகா’வில் கமிட் ஆனேன். பெய்ஜிங், ஐஸ்லாந்து, ஜெய்ப்பூர், ஜோத்பூர்னு ஆறு மாசம் ஜாக்கி சானுடன் ட்ராவல் ஆகியிருக்கேன். இந்தப் பட ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் கூட ஷாங்காயில் நடந்த திரைப்பட விழா போயிருந்தேன். படம் அடுத்த ஜனவரியில் ரிலீஸ்!’’ என ஆச்சரியத்தில் விரிகின்றன அமைராவின் கண்கள்.

‘‘எப்படி வந்திருக்கு ‘குங்ஃபூ யோகா’?’’ ‘‘என்னோட போர்ஷன் ஓவர். படத்தோட ஷூட்டிங், மத்த வொர்க் எல்லாம் இன்னும் போகுது. இந்தப் படத்துல நடிக்கறதுக்கு முன்னாடி வேற ஒரு இந்திப் படத்துக்காக என்னோட தேதிகளைக் கொடுத்திருந்தேன். அந்த டைம்லதான் என்னோட காஸ்ட்டிங் டைரக்டர் ‘ஒரு பெரிய படத்துக்கான ஆடிஷன் இருக்கு’னு சொல்லியிருந்தார். ஆடிஷன்ல நான் செலக்ட் ஆனேன். அப்புறம்தான் தெரிஞ்சது, அது ஜாக்கி சான் படம்னு! சைன் பண்ற வரை கூட நான் இதை நம்பலை.

எனக்கு குங்ஃபூ பத்தி  ஒண்ணும் தெரியாது. ஆனாலும், ஜாக்கி கொடுத்த தைரியத்தால அதைக் கத்துக்கிட்டேன். படப்பிடிப்பில் இருந்த காலங்கள்ல தினமும் ரெண்டுல இருந்து மூணு மணி நேரம் வரை குங்ஃபூ பிராக்டீஸ்தான். ஜாக்கியோட ஸ்டன்ட் ட்ரெய்னிங் டீம்தான் எனக்கும் கோச்சிங் கொடுத்தது. அதனாலதான் இவ்வளவு சீக்கிரம் கத்துக்க முடிஞ்சது. குங்ஃபூதான் தெரியாதே தவிர, பொதுவா ஜிம்ல வொர்க் அவுட் பண்றது எனக்குப் பிடிக்கும்.



ஸோ, தினமும் நான் ரொம்பக் கடினமான ப்ராக்டீஸ்ல இறங்கினதைப் பார்த்து ஜாக்கியே அசந்துட்டார். எனக்கு ஒரு அழகான ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் பரிசளிச்சார். அது சாதாரண ஜாக்கெட் இல்ல... அவரது ஸ்டன்ட் டீமுக்காக ஸ்பெஷலா டிசைன் பண்ணின ஜாக்கெட்னு அப்புறம் தெரிஞ்சது. ஸோ ஹேப்பி!’’

‘‘ஜாக்கி சான்...’’
‘‘அருமையான மனிதர். அவரோட சேர்ந்து நடிச்சதில் உலகம் முழுக்க எல்லா மீடியாக்களிலும் ஹெட் நியூஸ்ல வர முடிஞ்சது. கடின உழைப்பும் எளிமையும்தான் அவரோட பலம். இந்தியாவில் ஜோத்பூர், ஜெய்ப்பூர்ல ஷூட்டிங் இருந்துச்சு. பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் ஃபரா கான், சோனு சூட் எல்லாரோட காம்பினேஷனும் இருந்துச்சு. என்னோட பர்த் டே அன்னிக்கு எனக்கு ஸ்பெஷல் கேக் ஆர்டர் பண்ணியிருந்தார் ஜாக்கி. மறக்க முடியாத பிறந்த நாள் கொண்டாட்டம் அது!’’

‘‘பாலிவுட்... கோலிவுட்... என்ன வித்தியாசம்?’’
‘‘நான் வொர்க் பண்ணினவரை பெருசா ஒரு வித்தியாசமும் கிடையாது. ரெண்டு இண்டஸ்ட்ரீயிலும் வொர்க் பண்றவங்க புரொஃபஷனலா இருக்காங்க. ஆனா, இந்தியில் ஒரு படத்தை முடிக்க ரொம்ப டைம் எடுத்துக்கறாங்க!’’

‘‘இன்ட்ரோ ப்ளீஸ்...’’
‘‘அமைராங்கறது கிரேக்க வார்த்தை. ‘வாடாத மலர்’னு அர்த்தம். நான் மும்பையில் பிறந்த பார்ஸி கேர்ள். ஸ்கூல் படிக்கும்போதே மாடலிங் பண்ண ஆரம்பிச்சிட்டேன். நான் நடிச்ச விளம்பரப் படங்கள் பார்த்து பாலிவுட்டில் ‘இஷாக்’ படத்தில் அறிமுகமானேன். அந்தப் படத்தைப் பார்த்துதான் தமிழ்ல ‘அனேகன்’ கிடைச்சது. ஆங்கிலம், ஃபிரெஞ்ச் தவிர குஜராத்தி மொழியும் சரளமா பேசுவேன்!’’

‘‘அமைரா பார்ட்டி அனிமலா?’’
‘‘நோ! பார்ட்டி கல்ச்சர்ல விருப்பம் இல்ல. எனக்குனு ரொம்ப க்ளோஸ் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்க கூட இருக்கும்போது ரொம்ப வசதியா உணர்வேன். அவங்களோடதான் ஹேங் அவுட் எல்லாம். புதுசா யாரையாவது சந்திச்சா, நான் பேசறதை விட, அமைதியா இருந்து அவங்க பேசுறதைத்தான் அதிகம் கவனிப்பேன்!’’

‘‘ ‘அனேகன்’ ஞாபகங்கள்..?’’
‘‘கே.வி.ஆனந்த் சார், தனுஷ்னாலதான் அந்தப் படத்துல நடிக்கற வாய்ப்பு வந்துச்சு. தனுஷ் அமேஸிங் பர்சன். அந்தப் படத்துல தனுஷ் என்னை அவர் தோளுக்கு மேல உட்கார வச்சுக்கிட்டு ஓடுவார். அந்த சீன் எடுக்கும்போது என்னையும் அறியாமல் சிரிச்சிடுவேன். அந்த ஃபன்னி இன்ஸிடென்ட் மறக்க முடியாதது!’’

- மை.பாரதிராஜா