இந்தியாவின் பவுலரை கிராமங்களில் தேடுங்கள்!



கார்ட்னி வால்ஷ்

‘இந்தியாவில் ஏன் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாவதில்லை?’ - உலக கிரிக்கெட் ரசிகர்களின் பரம்பரைக் கேள்வி இது. அப்படியொரு பவுலரை இந்தியாவில்... அதுவும் சென்னையில் உருவாக்கியே தீருவேன் எனக் கிளம்பி வந்திருந்தார் கார்ட்னி வால்ஷ். 1990களில் பேட்ஸ்மேன்களின் சிம்மசொப்பனமாக விளங்கிய இந்த மேற்கிந்திய அசுரன், கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட சிறுவர்களைத் தேர்வு செய்து பவுலிங் பயிற்சி கொடுத்து வருகிறார்.



‘‘எனக்கென்னவோ இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு தரப்படும் மிக அதிக முக்கியத்துவம்தான் பிரச்னைக்குக் காரணமாகத் தோன்றுகிறது!’’ - எடுத்த எடுப்பிலேயே சிக்ஸராகத் துவங்குகிறார் வால்ஷ். ‘‘சிறுவனாக இருந்தபோது எனக்கு வாலிபால், ஃபுட்பால் போன்ற விளையாட்டுகள்தான் பிடிக்கும். எங்கள் நாட்டில் கிரிக்கெட்டை பெரிதாக ஆராதிப்பதில்லை. மற்ற விளையாட்டுகள் போல அதுவும் ஒரு விளையாட்டு, அவ்வளவுதான். சிறு வயதில் அதிகம் ஃபுட்பால் விளையாடியதால் எனக்கு உடல் உரமானது.

கிரிக்கெட்டில் பந்து வீச ஆர்வம் வந்தபோது, அந்த ஸ்டெமினா உதவியாக இருந்தது. சிறப்பாகப் பயிற்சி எடுக்கவும் முடிந்தது. அந்த வகையில் பார்த்தால் இந்தியர்கள் கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல் மற்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டுவது நல்லது. விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். ஆனால், இந்தியாவில் ரொம்பவே சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்கள். பேட்டை சுழற்றி சிக்ஸர், ஃபோர் அடிப்பதுதான் கிரிக்கெட் என்று நினைக்கிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கிண்டி அருகே காரில் போனபோது சில சிறுவர்கள் டீம் பிரிக்காமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்தேன். பேட்டிங் செய்தவன் அவுட் ஆனதும், அடுத்து யார் பேட் பிடிப்பது என்பதில் அந்தப் பையன்களிடையே சண்டை வந்துவிட்டது. இதுதான் இங்கே நிலைமை. எல்லோரும் பேட்டிங்கை விரும்பினால் பவுலிங், கீப்பிங், ஃபீல்டிங் செய்ய யார்தான் கிடைப்பார்கள்?’’ என்கிற வால்ஷுக்கு தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் முழு திருப்திதானாம்.

‘‘நான் விளையாடிய காலத்திலும் சரி... இப்போதும் சரி... பேட்டிங்கில் இந்திய அணியின் தரம் குறையவே இல்லை. சிறந்த பேட்ஸ்மேன்கள் வந்தபடி இருக்கிறார்கள். தோனி, விராட் கோஹ்லி போன்றவர்களின் திறமையும் ஆளுமைத்திறனும் வியக்க வைக்கின்றன. ஐ.பி.எல் புண்ணியத்தில் நிறைய புதியவர்கள் உள்ளே வந்துள்ளனர். வருங்காலம் மிகப் பிரகாசமாய் இருக்கிறது.

ஆனால், பந்துவீச்சில் இதுவரை இந்திய அணியில் யாரும் என்னைத் திருப்திப்படுத்தவில்லை. முதலில் பவுலர்களின் ஸ்டெமினா லெவலை அதிகப்படுத்த வேண்டும். அரிசியைத் தவிர்த்து புரதச் சத்துள்ள மற்ற உணவுகளையும் சாப்பிட வேண்டும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இங்கு ஸ்போர்ட்ஸ் கிளப்கள் குறைவாக உள்ளன. சிறு வயதிலிருந்தே பயிற்சி கொடுக்க கிளப்கள் மிக முக்கியம். இலங்கையில் ஒரு மலிங்கா, முத்தையா முரளிதரன் வர முடிகிறபோது, தமிழ்நாட்டில் இல்லாமலா போவார்கள்? கிராமங்களில் தேடினால் நிச்சயம் கிடைப்பார்கள். அதைச் செய்வதுதான் கிளப்களின் வேலை!’’ என்கிறார் வால்ஷ்.

‘கோல்டன் கோட்ஸ்’... இந்த அமைப்புதான் வால்ஷ் உள்ளிட்ட சர்வதேச ஜாம்பவான்களை அழைத்து தமிழ்நாட்டு சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறது. தென் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் நிக்கி போயே மற்றும் விக்கெட் கீப்பர் டேவி ஜேக்கப்ஸ் ஆகியோரும் பயிற்சியில் வால்ஷோடு கை கோர்த்திருந்தனர்.

‘‘எனக்கு சொந்த ஊர் ஈரோடு. மலேஷியாவில் பிசினஸ் செய்கிறேன். ஒரு காலத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறேன். பொதுவாக மற்ற துறைகளில் 30 வயதுக்குப் பிறகுதான் ஒருவர் நிபுணர் ஆவார். ஆனால், கிரிக்கெட்டில் முப்பது வயதில் ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்புவார்கள். இதனாலேயே தமிழகத்தின் கிராமப்புறங்களில், நடுத்தரக் குடும்பத்தினர் கிரிக்கெட்டில் வந்து சாதிக்கும் வாய்ப்பு குறைந்து போகிறது.

கிரிக்கெட்டில் நம் பிள்ளைகளை சிறு வயதில் இருந்தே பயிற்சி தந்து ஊக்கப்படுத்தத்தான் இந்த முயற்சி. கிரிக்கெட்டைப் போலவே அடுத்து ஃபுட்பால், அத்லெடிக்ஸ் என வெவ்வேறு விளையாட்டுகளுக்கும் பயிற்சி கொடுக்கும் திட்டம் உள்ளது!’’ என்கிறார் இந்த அமைப்பின் நிறுவனர் ஏரகச்செல்வன். எல்லோரும் பேட்டிங்கை விரும்பினால் பவுலிங், கீப்பிங், ஃபீல்டிங் செய்ய யார்தான் கிடைப்பார்கள்?

- புகழ் திலீபன்
படங்கள்: ஆர்.சி.எஸ்