தர்மம்



நெடுஞ்சாலை போக்குவரத்து இரவிலும் ஓய்வின்றி நடந்து கொண்டிருந்தது. திருச்சியிலிருந்து சரக்குகளை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு டிரைவ் செய்து கொண்டிருந்தான் தணிகைவேல். தன்னந்தனி பயணம்! தொழுதூரைத் தாண்டியதும் யாரோ ஒரு பெண் லாரியை நிறுத்தும்படி சைகை செய்தாள். வண்டியை நிறுத்தியவன், ‘‘என்னம்மா?’’ என்றான். ‘‘ஐயா, பஸ் எதுவும் நிற்க மாட்டேங்குது. விழுப்புரத்தில் இறக்கிடுங்க! அவசரமா போகணும்!’’



ஏற்றிக்கொண்டான். இப்படி நெடுஞ்சாலையில் வழிமறிக்கும் பெண்கள் பற்றி சில டிரைவர்கள் மூலம் கேள்விப்பட்டிருக்கிறான். இதுவரை அனுபவம் இல்லை. அவன் அப்படிப்பட்டவனும் இல்லை. கேபினில் மல்லிகைப்பூ வாசனை நிரம்பியது. ‘‘எங்க போவுது லாரி? கொஞ்சம் ஓரமா நிறுத்திட்டு, அப்புறம் போறது..!’’ தணிகைவேல் சிரித்தான். ‘‘ஏம்மா, இதுதான் பொழப்பா? புருஷன் இல்லியா?’’

‘‘அவரு ஆந்திரா போயிருக்காரு. துட்டும் அனுப்பல. பொழைப்பு நடக்க வேணாமா?’’ ‘‘நான் அப்படியில்ல. நீ விழுப்புரத்துல இறங்கு!’’ ‘‘அதுக்கு எதுக்கு அங்கே வரை? இப்படியே நிறுத்து!’’ வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டாள். ‘‘டீ சாப்பிட காசு வேணுமா?’’ - தணிகைவேல் கேட்டான். ‘‘வேணாம்... வேணாம்... நீ நல்லவன்தான். அதுக்காக என்னை பிச்சைக்காரி ஆக்கிடாதே!’’ - அவள் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.   
           

-ஆ.லோகநாதன்