குங்குமம் ஜங்ஷன்



நிகழ்ச்சி மகிழ்ச்சி!

‘‘கனிகா என்னோட குட் ஃப்ரெண்ட் மட்டுமில்ல. அருமையான நாவலாசிரியை. அவ்ளோ இன்ட்ரஸ்ட்டிங்கா கதை சொல்லுவாங்க. அவங்க திரைக்கதை எழுதின ‘சைஸ் ஜீரோ’வினால் எனக்கு நல்ல பெயர் கிடைச்சிருக்கு!’’ - அனுஷ்கா இப்படிப் பாராட்டக் காரணம், ‘தி டான்ஸ் ஆஃப் துர்கா’ என்ற ஆங்கில நாவல். கனிகா கே.தில்லான் எழுதியிருக்கும் அந்த நாவலின் அறிமுக விழா, சென்னையில் நடந்தது. பாலிவுட் பிளாக்பஸ்டர்களான ‘ஓம் சாந்தி ஓம்’, ‘ரா ஒன்’ படங்களிலும் பணிபுரிந்தவர் கனிகா. தனக்காக சென்னை வந்திருந்து அனுஷ்கா தன் புத்தகத்தை வெளியிட்டதில் கனிகா ஹேப்பி அண்ணாச்சி!



புத்தகம் அறிமுகம்

இஸ்தான்புல்: ஒரு நகரத்தின் நினைவுகள்
- ஓரான் பாமுக் தமிழில்: ஜி.குப்புசாமி

(காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில்-629001. விலை ரூ.350/- தொடர்புக்கு: 96777 78862) ஓரான் பாமுக் பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊரின் மீதான பதிவுதான் இது. அப்படி எளிதாகச் ெசால்லி இதை விட்டுவிட முடியாது. சுயசரிதை போலவும், நகரத்தின் கதை போலவும்... இல்லை இல்லை, மனிதர்களின் மீதான விசாரணை போலவும் பல நிலைகளில் களிநடனம் புரிகிற நாவல் இது. படிக்கப் படிக்க உருண்டோடுகிறது.

இஸ்தான்புல்லின் பண்பாட்டுச் செறிவுகளும், அதன் ஊடான பாமுக்கின் நினைவுகளும் நம்மை மூச்சுத் திணற வைத்துக் கரையேற்றுகின்றன. மனிதர்கள் மீதான பரிவையும், அக்கறையையும் ஒரு நகரின் தனிமையோடு சேர்த்துச் சொல்கிற பாமுக்கின் கலையைச் சொல்லித் தீராது. மூல நூலின் அசல் கெடாமல் மொழிபெயர்ப்பது அடிப்படை அறம். அதைச் சரியாகச் செய்திருக்கிறார் குப்புசாமி. குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டாமல், ‘சரி, அந்தப் பக்கமும் போய் பார்க்கலாம்’ என்றால் தவிர்க்க முடியாதது இந்த இஸ்தான்புல்!



சிற்றிதழ் Talk

‘‘இப்ப நாங்கள் அக்கராயன் - கோணாவில் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றிக்கொண்டிருக்கிறோம். இரண்டு விதமாக கண்ணிவெடிகளையும் மிதிவெடிகளையும் அகற்றுவோம். ஒரு முறை எப்படியென்றால், கருவிகளைப் பயன்படுத்திக் கண்ணிவெடிகளை அகற்றுவது. மற்றது, கைகளால் அடையாளங் கண்டு அகற்றும் முறை. இதுவரையில் யாரும் உயிரிழக்கவில்லை; சிலர் காயமடைந்திருக்கிறார்கள். கடந்த மாதம் கூட நாகர்கோவில் பகுதியில் இரண்டு பேர் காயப்பட்டார்கள். ஒருவருக்குக் கொஞ்சம் கடுமையான காயம்.

கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார்கள். அது எங்களுடைய வேலைக்குப் பொருந்தும். என்னைப் பொறுத்தவரை, எங்களுடைய மண்ணை சுத்தப்படுத்துகிறேன். அதை அபாயநிலையில் இருந்து மீட்பதற்காக வேலை செய்கிறேன். நாங்கள் மீண்டும் இயல்பாக வாழ வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேன்...’’ (‘காலச்சுவடு’ ஜூன் 2016 இதழில்... இலங்கை தமிழ் நிலங்களில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளி.)

டெக் டிக்

இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு பொருளின் விலையையோ அல்லது ஒரு டூர் பேக்கேஜ் விவரத்தையோ பார்த்துவிட்டால் போச்சு. அதன்பின் நீங்கள் எந்த தளத்தைத் திறந்தாலும் ஷாப்பிங் மற்றும் டூர் விளம்பரமாக வந்து கொல்லும். நம் தேடல் குறித்த தகவல்கள் மார்க்கெட்டிங் தளங்களால் கண்காணிக்கப்படுவதே இதற்குக் காரணம்.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக மோசில்லா நிறுவனம் கன்டெயினர் என்ற புதிய வசதியை உருவாக்கியிருக்கிறது. நம் அடையாளங்களை மறைத்து இணையத்தில் உலவ உதவும் பிரைவேட் விண்டோவை விட இது பாதுகாப்பானது. இதனைத் திறக்கும்போதே பர்சனல், அலுவல், வங்கிப் பரிவர்த்தனை, ஷாப்பிங் என ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்லும். வேண்டியதைத் தேர்ந்தெடுத்து அதில் தேடலை மேற்கொண்டால் நம் தனிப்பட்ட தகவல்கள் கசிய வாய்ப்பே இல்லை!

புதுசு ரவுசு

‘கட்டி அணைத்தலின் சுகம் அலாதியானது... அது அத்தனை காயங்களையும் ஆற்றக் கூடியது’ - இப்படி கவிதை எழுதிக் கொண்டிருக்காமல், www.thenicestplaceontheinter.net என்ற வலைத்தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள் சில புண்ணியவான்கள். இந்தத் தளத்துக்குச் சென்றதுமே பலரும் நம்மை நோக்கி அன்பைப் பொழிவதும் கட்டி அணைப்பதுமாய் இருப்பார்கள். அதில் ஆண், பெண், செம ஃபிகர் எல்லாம் அடக்கம். சில அன்லக்கி நாட்கள் நம்மை கதறக் கதற அடிக்குமே... அப்போது இந்தத் தளத்துக்குப் போனால் கட்டிப்புடி வைத்தியம் பரமசுகம்!

அதிரடி மனிதர்

எந்த நெருக்கடிக்கும் பணியாதவர் என்பதால் இவரைப் பலருக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக, சுப்ரமணியன் சுவாமிக்கு. யாருக்காகவும் தன் கருத்தை மாற்றிக் கொள்ளாதவர். இந்திய ரிசர்வ் வங்கியின் 23வது கவர்னர். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரகுராம் ராஜன், போபாலில் பிறந்தவர். அகமதாபாத் ஐஐஎம், டெல்லி ஐஐடியில் உயர்கல்வியை முடித்து, அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டியில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

இவரை 2008ல் முதன்மை பொருளாதார ஆலோசகராக நியமித்தார் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங். 2013ல் ரகுராம் ரிசர்வ் வங்கிக்கு கவர்னரானார். உலகளாவிய பொருளாதார நிலையாமை, வீழ்ந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பு, வளர்ச்சியில் காணப்படும் சரிவு, உயர்ந்து கொண்டிருக்கும் சில்லறை பணவீக்கம் எனப் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பொறுப்பேற்ற ரகுராம் ராஜன், வெகுவிரைவிலேயே இந்திய பொருளாதாரத்தின் தனித்தன்மையை மீட்டெடுத்தார். உலகளாவிய பொருளாதார சரிவை முன்கூட்டியே கணித்து சர்வதேச கவனம் ஈர்த்த ரகுராம், அதன் நிழல் கூட இந்தியப் பொருளாதாரத்தைத் தாக்காமல் அரணாகக் காத்தார்.