நியாயம்



‘‘எத்தனை தடவை சொல்றது? உள்ளே போங்க. மத்தவங்களும் ஏறணுமில்ல...’’ - பேருந்தில் முட்டி மோதி ஏறிக்கொண்டிருந்தவர்களிடம் இருந்து அந்தக் கீச்சுக் குரல் தனித்துத் தெரிந்தது. இரண்டு பேருந்துகள் பிரேக் டவுன் ஆகி வராமல் போனதற்குப் பிறகு இந்தப் பேருந்து வந்ததால், அத்தனை கூட்டம்!



‘‘ஏன்யா, நீங்க மட்டும் வசதியா நின்னுட்டீங்களே. வெளிய இருக்கற நாங்களும் மனுஷங்கதானே? உள்ள நகருங்கய்யா! சே, எருமை மாடு கணக்கா நிக்கிறாங்களே தவிர, அசையறானுங்களா? கண்டக்டர், நீங்களாவது சொல்லக் கூடாதா..? இப்படி எல்லோரும் சுயநலமா இருந்தா நாடும், மக்களும் என்னாவறது? ஒரு நியாயம் வேண்டாமா..? போங்கய்யா உள்ளே!’’ - அந்தக் கீச்சுக் குரல் ஆவேசமானது. தள்ளுமுள்ளு சற்று நேரம் தொடர்ந்தது. அடுத்த ஸ்டாப்பிங்கில் மேலும் சிலர் ஏறினார்கள்.

‘‘அட, அடுத்த பஸ்ல வாங்கப்பா! இதென்ன பஸ்ஸா, கார்ப்பரேஷன் குப்பை வண்டியா? இப்படி அளவுக்கு மீறி ஏத்துனா, பாடாவதி வண்டி வழியிலேயே உக்காந்துக்கும்... ரெண்டு வண்டி ஜனத்த இதுல ஏத்தறீங்களே, ஒரு நியாயம் வேண்டாமா..? கண்டக்டர், பஸ்ஸை எடுக்கச் சொல்லுங்க!’’ - அதே கீச்சுக்குரல் சொன்னது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் இப்போது பேருந்துக்குள் இடம் கிடைத்து அமர்ந்து விட்டிருந்தார். 

-மதுமதி