சோக்கி தானி!



அறிந்த இடம் அறியாத விஷயம்

பேராச்சி கண்ணன்

‘‘சோக்கி தானி போயிருக்கியா?’’ நண்பன் அதட்டியபடி கேட்ட போது, ‘‘அப்படின்னா..?’’ என்று தெனாவெட்டாக வடிவேல் பாணியில் கேட்கத் தோன்றியது. ஆனால், கூகுளில் தேடிய போது நவீன வாழ்க்கையின் அழுத்தங்களை மறக்கடிக்கும் ஓர் இடம் என்று புரிந்தது. சென்னையில் விடுமுறையைக் கொண்டாடிக் களிக்க, ‘தீம் பார்க்’, ‘ரிசார்ட்ஸ்’ என எத்தனையோ பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன.

அப்படியொரு வித்தியாசமான அம்சம்தான் ‘சோக்கி தானி’. ஒரு செட்டுக்குள் ராஜஸ்தானின் அழகான ஒரு கிராமத்தையே கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த மக்களின் கலாசாரம், பண்பாடு, உணவு, நடனம்... என எல்லாவற்றையும் நம் கண்முன் கொண்டு வந்து மெய் மறக்கச் செய்கிறார்கள். சென்னை - பெங்களூர் ஹைவேயில் நம்மை வரவேற்கிறது சோக்கி தானி.

மதுரவாயலில் இருந்து சுமார் 20 கிமீ தூரத்தில் தண்டலம் ஊராட்சிக்குள் இது வருகிறது. மாலையில் மட்டுமே இது செயல்படும். ‘பாகுபலி’யின் பிரம்மாண்டத்தைப் போல ராஜஸ்தானின் கிராம செட் பிரமிக்க வைக்கிறது. அரண்மனை போன்ற வடிவமைப்பின் முகப்பில் டோல் அடித்து உற்சாகப்படுத்துகிறார்கள்.

மரக்கட்டையில் ஏறி நிற்கும் ஆளுயர மனிதர், வருபவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறார். அவரைத் தாண்டியதும் வாசல்படியில் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்கிறார் பெண் ஒருவர். சுற்றிலும் ராஜஸ்தானி டெக ரேஷன். அதன் மத்தியில் டிக்கெட் கவுன்டர். அதில் இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள்.

‘‘‘சோக்கிதானி’னா ‘பியூட்டிஃபுல் வில்லேஜ்’னு சொல்லலாம்...’’ என்றார் அங்கிருந்த டிப்டாப் ஆசாமி. முதலில் வருகிறது படகு குழாம். நான்கு புறங்களிலும் ரசிப்பதற்கு ஏற்ற இந்தோ சாரசெனிக் கட்டிடக்கலை மாடங்கள். அதன் அடியில் சிறிய குளத்தை அமைத்து அதில் ஒரு படகை நிறுத்தியிருக்கிறார்கள். நான்கு பேர் பயணிக்கலாம். இதன் மேல் பகுதியில் ஒரு பெரிய மாடத்தில் பாரம்பரிய நடனம் களை
கட்டுகிறது.

இரண்டு கலைஞர்கள் டோல் அடிக்க சிறுவன் ஒருவன் நடனத்தை அரங்கேற்றுகிறான். சுற்றிலுமுள்ள ஐந்தாறு திண்டுகளில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் ரசித்து கை தட்டுகிறார்கள். திடீரென சிறுவன் நம் கையைப் பிடித்து தன்னோடு ஆட அழைத்தான். ஒரு நடனத்தை போட்டுவிட்டு அங்கிருந்து மண் வீடு செட் அப்புக்கு தாவினோம். நான்கு மண் வீடுகள்.

ஒவ்வொன்றிலும் ஒரு ராஜஸ்தானி பெண் முக்காடு போட்டபடி முகத்தை அவ்வளவாகக் காட்டாமல் அமர்ந்திருக்கிறார். ரொட்டி சுட்டு பார்வையாளர்களுக்கு தந்துகொண்டே இருந்த ஒரு பெண் முன் நின்றோம். ‘இது என்ன?’ என்றோம் சைகையில்! ‘கியா... கியா..?’ ‘வாட் இஸ் திஸ்’ என்றார் நம் போட்டோகிராபர்.

‘சோள ரொட்டி... ஸ்வீட்...’ சின்ன சைஸில் சோள ரொட்டியைச் சுட்டு, அதில் நெய் தடவி, அதன் மேல் வெல்லத்தைத் தூவி தருகிறார்கள். சூப்பர் காம்பினேஷன். ருசித்துவிட்டு இன்னொரு வீட்டுக்குள் நுழைந்தோம். அங்கே ஒரு பெண்மணி திருக்கை கல்லில் கம்பு தானியத்தை அரைத்துக் கொண்டிருந்தார்.

அவருக்கடுத்து, மண் பானை வனைந்து காட்டிக் கொண்டிருந்தார் இளைஞர் ஒருவர். அனைவரும் ராஜஸ்தான் கிராமத்தைப் பறைசாற்றியபடி இருந்தனர். அங்கிருந்து குடிநீர் வைத்திருந்த ஒரு குடிலுக்குச் சென்றோம். புதினா கலந்த நீர். இதனை ஜீரா நீர் என்கிறார்கள். நம்மூர் பானகம் போல ஜில்லென்று இருக்கிறது.

அப்படியே அருகிலிருந்த சாட் குடிலில் சமோசாவை சாஸ் கலந்து விழுங்கிவிட்டு மேஜிக் ஷோ பக்கம் ஒதுங்கினோம். ஒரு வெளிநாட்டுக் குழுவினருக்கு மேஜிக் காட்டிக் கொண்டிருந்தார் இளைஞர் ஒருவர். கூடையில் இருந்து பறவை ஒன்றை வெளியில் எடுத்துக் காட்டுகிறார். கூடையில் எதுவுமில்லை என்று பார்வையாளர்களுக்குக் காட்டிவிட்டு அதை மூடிவைக்கிறார்.

அடுத்த நொடி அதிலிருந்து இரண்டு பறவைகள் வெளியே வருகின்றன. ஆச்சரியாக ‘வாவ்’ கொட்டியது அந்த வெள்ளைக்காரக் கூட்டம். அப்போது மணி 6.30. சுற்றிலும் இருக்கும் லாந்தர் விளக்குகள் பளிச்சிட ஆரம்பித்தன. பிறகு, ராஜஸ்தானியின் பாரம்பரிய நடனத்தைக் காணச் சென்றோம். இரண்டு பெண்கள் நடனத்தை அரங்கேற்றுகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் மூன்று பேர்.

ஒருவர் கீ போர்டை வாசித்துக்கொண்டே பாட, மற்ற இருவரும் டோல் அடித்து பெண்களுக்கு அருள் ஏற்றுகிறார்கள். இதிலொரு பெண் இழுத்துக் கட்டப்பட்ட சிறிய பானைகளை தலையில் வைத்து சுற்றிச் சுற்றி ஆட்டம் போடுகிறார். இன்னொரு பெண் டம்ளர், ஆணி, பீங்கான் என கால்களை பதம்பார்க்கும் கூரிய பொருட்களைக் கீழே போட்டு அதில் பானைகள் வைத்திருக்கும் பெண்ணை ஏற்றி சாகசம் செய்ய வைக்கிறார்.

பிறகு, சக்கராசனம் போல வளைந்து இரண்டு பிளேடுகளை கண்களால் எடுத்ததும் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து ஆசுவாசமாக ரசித்தவர்கள் பதறியடித்து எழுந்து நின்று அப்ளாஸ் செய்து அந்தப் பெண்ணை மெச்சினர். அங்கிருந்து, ‘Bhool Bhulaiya’ என்ற பகுதிக்குள் நுழைந்தோம். ஒன்றுமில்லை. ‘முயலுக்கு கேரட் சாப்பிட வழி காட்டுங்களேன், குரங்குக் குட்டியை அதன் தாயுடன் சேர வழி காட்டுங்களேன்’ எனப் பத்திரிகையில் கட்டம் போட்டு அந்தப் பகுதியிலிருந்து இந்தப் பகுதிக்கு வழி கண்டுபிடிக்கும் விளையாட்டு வருமே... அதேதான்.

சிமென்ட் சுவர்களால் இந்த வழி கண்டுபிடிக்கும் விளையாட்டை செய்திருக்கிறார்கள். இதன் அருகிலேயே பரமபதம், ஊஞ்சல், சறுக்கு என குழந்தைகளைக் குஷிப்படுத்தும் விளையாட்டுகள். அடுத்து, ஹூக்கா பகுதி. அதைப் பார்த்ததும் பழைய படங்களில் வில்லன்கள் பைப் வழியே புகைத்துக் கொண்டு நடனத்தை ரசிப்பதுதான் நினைவில் வந்து போனது.

அதில் இருந்த ஒருவர் ஹூக்காவை ஒரு இழுப்பு இழுக்க நம்மை அழைக்கிறார். வேண்டாமென்று, குடும்பத்துடன் ஓர் இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருந்த கரண் என்பவர் பக்கத்தில் அமர்ந்தோம். நம்மூர் கொட்டாங்குச்சி வயலின் போல இருக்கிறது அந்த இசைக்கருவி. ‘மியூசிக் நேம்?’ ‘ரவந்த்தா... ராஜஸ்தானி டிரடிஷனல் மியூசிக்!’ ‘யூ ஸீ ‘கடர்’ மூவி... திஸ் இஸ் ‘கடர்’ மூவி மியூசிக்!’ கண்ணை மூடி வாசிக்கிறார்.

குதிரை முடியால் கட்டியிருக்கும் அந்த வில்லை கம்பிகளில் லாவகமாக இழுக்க இழுக்க மெலடி தித்திக்கிறது. அந்தப் பகுதியிலிருந்து வெளியேறும் தருணத்தில், அந்தரத்தில் நடக்கும் சிறுவனைப் பார்த்தோம். ‘மேலே வானம்... கீழே பூமி... ஒரு ஜாண் வயித்துக்காக கயித்துல நடக்குறான்... பாருங்கோ சார்...’ எனத் தமிழ்ப் படங்களில் வரும் கழைக்கூத்தாடி காட்சி ஞாபகத்திற்கு வந்தது.

இதற்கடுத்து, துணிகள், பாணி பூரி, குல்பி, பலுடா வகையறாக்கள், கலைப் பொருட்கள் என ராஜஸ்தானி கடைகள் வரிசை கட்டுகின்றன. இதில், போட்டோ ஸ்டூடியோ ஒன்றும் இருக்கிறது. பார்வையாளர்களுக்கு ராஜஸ்தானி உடைகளைக் கொடுத்து புகைப்படம் எடுத்துத் தருகிறார்கள். நபர் ஒன்றுக்கு 150 ரூபாய்!

தொடர்ந்து, ‘ஹோமர்’ நடன ஏரியாவுக்கு சென்றோம். இங்கேயும் இரண்டு பெண்கள். பின்னால் வாத்தியக்குழு. இந்தப் பெண்கள் அக்னிச் சட்டியை தலையில் வைத்து சுழன்று ஆடுகிறார்கள். பிறகு, கண்களால் ரூபாய் நோட்டை எடுத்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகின்றனர். அடுத்து கிளி ஜோசியம், காளி ஜோசியம் என ராஜஸ்தான் ஜோசியக்காரர்கள் மரத்தடியில் அமர்ந்து எதிர்காலத்தைக் கணிக்கிறார்கள்.

அங்கிருந்து சவாரிக்குக் கிளம்பினோம். இங்கே ஒட்டகம், குதிரை, மாட்டு வண்டி சவாரிகள் ஃபேமஸ். குடும்பங்கள் இங்கே வருவதற்கான முக்கிய காரணம் இதுதான். தனியாகவும், குடும்பமாகவும் போகலாம். இவற்றில் ஏறுவதற்கென்றே தனித்தனியாக இடங்களும் அமைத்திருக்கிறார்கள். சிலர் மாட்டு வண்டிகளில் செல்ஃபி எடுத்தபடியே ரைடு வருகிறார்கள்.

ஒட்டகத்தில் ரவுணட் அடித்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தைப் பார்த்துக் கொண்டே நின்றோம். பின்புறத்தில் உட்கார்ந்திருந்த மனைவி பதறுகிறார். ‘போதும்னு சொல்லுங்கப்பா’ எனக் கணவனைக் கெஞ்சுகிறார். சந்தோஷத்தில் கத்துகிறது குழந்தை. ஒரு குடும்பத்தினரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘ப்ளேஸ் ரொம்ப நல்லாயிருக்கு. என்ஜாய் பண்ண முடியுது.

ஆனா, டிக்கெட் ரேட்தான் கொஞ்சம் ஓவர். அதை குறைச்சா இன்னும் நிறைய பேர் இங்கே வருவாங்க!’ என்றனர். பொம்மலாட்டம், ஸ்வீட் குடில், உணவகம் என எல்லாவற்றையும் ரசித்துவிட்டு வெளியேறும் போது இரவாகிவிட்டது. அப்போதும் லாந்தர் வெளிச்சத்தில் சொக்கியது சோக்கி தானி!                   

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

முன்கதை...

* நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சாந்திலால் போரா என்பவரால் 15 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டது.
* ராஜஸ்தான் மாநிலம் சுற்றுலாவில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அதற்கு மேலும் வலு சேர்க்கவும், தென்மாநில மக்கள் ராஜஸ்தான்
கலாசாரத்தைப் புரிந்துகொள்ளவும் இதனைத் தொடங்கியுள்ளார்.

பார்வையாளர்களுக்காக...

* மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ரசிக்கலாம்.
* நபர் ஒன்றுக்கு ரூ.650 வசூலிக்கிறார்கள். 3 முதல் 9 வயதுள்ள குழந்தைகளுக்கு ரூ.450. ஆனால், இது சுற்றிப் பார்ப்பதற்கு மட்டும். படகு, குதிரை, ஒட்டக சவாரியில் போக வேண்டுமெனில் பெரியவர்களுக்கு ரூ.750, குழந்தைகளுக்கு ரூ.550 கட்ட வேண்டும். தவிர, 800 மற்றும் ஆயிரம் ரூபாயில் சிறப்பு தரிசனங்களும் உண்டு.
* சினிமா மற்றும் போட்டோ ஷூட் எடுக்க தனி கட்டணம்.
* பள்ளிகளில் இருந்து பிக்னிக் வந்தால் 150 முதல் 225 மாணவர்கள் வரை ஒருவருக்கு ரூ.250ம், அதற்கு மேல் என்றால் ரூ.225ம் வசூலிக்கிறார்கள். இவர்களுக்கு காலை 9 மணியிலிருந்து 3.30 மணி வரை டைம் தருகிறார்கள். போலவே கார்ப்பரேட் கெட் டுகெதர்களுக்கு தனி கட்டணம்.
* வார விடுமுறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வருகிறார்கள். மற்ற நாட்களில் குறைந்தது 200 பேர் வந்து போகிறார்கள்.
* இந்தப் பகுதியைச் சுற்றிலும் கொரிய தொழிற்சாலைகள் இருப்பதால் கொரியர்கள் அதிகமாக இங்கே வருகிறார்களாம்.
* நார்த் இண்டியன், சௌத் இண்டியன், ராஜஸ்தானி என மூன்று கலவைகளில் இருபது ெவரைட்டியில் உணவுகளைப் பரிமாறுகின்றனர்.
* இங்கே திருமணத்திற்கான ஒரு பெரிய ஹாலுடன் கூடிய புல்வெளி இருக்கிறது.
* மேலும் விவரங்களுக்கு www.chokhidhanichennai.com.