சங்கிலி புங்கிலி கதவதொற



-குங்குமம் விமர்சனக்குழு

வீட்டிற்குள் குடியிருக்கும் பேய்களை வேட்டையாடி துரத்துவதே ‘சங்கிலி புங்கிலி கதவதொற’. வாடகை வீட்டில் குடியிருந்து, அதன் சொந்தக்காரர்களின் அடாவடித்தனத்தால் ஜீவாவும் அவரது அம்மா ராதிகாவும் அவதியுறுகிறார்கள். இதனால் சொந்த வீடு வாங்குவது ஒன்றே அவர்களது லட்சியமாகிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையில் பாடுபட்டு ஒரு பங்களாவையே வாங்குகிறார்கள்.

அம்மா, தாய்மாமா உட்பட குடும்பத்தினருடன் குடியேறப் போக அங்கே ஸ்ரீதிவ்யா குடும்பமும் கூடவே ரெண்டு ஆவிகளும் வசிப்பது தெரிய வருகிறது. ஜீவா, ஸ்ரீதிவ்யா குடும்பம் இணைந்து அந்த ஆவிகளை விரட்டியதா என்பதே சிரிப்பும், திகிலுமாய் நீளும் மீதிக்கதை. ஒரு சராசரி வீடு வாங்கும் இளைஞனை பிரதிபலிக்கிறார் ஜீவா.

அவர் வாங்க நினைத்த வீட்டில் பேய்கள் உலவுவதாக செய்திகளைப் பரப்புவது சுவாரஸ்ய ரகம். எப்படியாவது திவ்யா குடும்பத்தையும், ஆவிகளோடு சேர்த்தே விரட்ட அவர் போடும் திட்டங்களே ஹாரர் காமெடியாக உருவெடுக்கிறது. ஆனால் ஜீவா, கொஞ்சம் கொஞ்சமாக திவ்யாவிடமே காதலில் விழுவது கலகலப்பு. ஒவ்வொரு தடவையும் ஆவிகளோடு சேர்ந்து அல்லாடும் காட்சிகள் சிரிப்பு மேளா.

புதுமுக இயக்குநர் ஐக் கவனம் ஈர்க்கிறார். தம்பி ராமையா - தேவதர்ஷினியின் வாஷிங்மெஷின் காமெடியில் டபுள் மினீங் ஓவர். மொத்தப் படத்தையும் சுறுசுறுப்பாக தாங்குவதில் ஈர்க்கிறார் ஜீவா. எப்படியிருந்த ஸ்ரீதிவ்யா இப்படி ஆகிவிட்டாரே! ஊதா கலர் ரிப்பனில் பளிச்சென வந்தவர், இதில் ஆங்காங்கே தொட்டுக் கொள்வது மாதிரியே வந்து போகிறார்.

ஜீவாவும், சூரியும் வாழை இலையைச் சுற்றிக் கொண்டு வீதியில் பவனி வரும் காமெடி உச்சபட்ச ரகளை. படத்தில் வருகிற அத்தனை பேரையும் காெமடி ஆட வைத்திருக்கிறார்கள். குடும்ப ஒற்றுமை ஒன்றையே பிடியாக வைத்துக் கொண்டிருக்கும் சென்டிமென்ட் பேயும் புதுசு. ராதாரவி குரூரத்தின் பக்கம் போய்விடாமல் சென்டிமென்ட் ஆவியாகவே விஸ்வரூபம் எடுக்கிறார்.

கோவை சரளாவுக்குப் பேய் படங்களில் நடிப்பதெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. அவர் படத்தில் கொண்டு வந்து திணிக்கப்படுவது கண்கூடாகத் தெரிகிறது. பார்த்துப் பார்த்து பழகிய கதையென்றாலும் இவ்வளவு கேரக்டர்களை வைத்துக் கொண்டு, சின்னச்சின்ன கலகல வசனங்களில் ஐக் கைதட்டல் பெறுகிறார்.

மொத்த ஹாரர் களேபரத்தையும், சூழலையும் அருமையாக படம் பிடிக்கிறது சந்திரன் சூரியனின் கேமரா. தொலை தூரத்தில் பங்களாவிலிருந்து உள்ளே வரைக்கும் போட்ட ‘செட்’ சாமர்த்தியத்தில் லால்குடி இளையராஜா மனதில் நிற்கிறார். தொடர்ந்து ஆவிகளின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருப்பதில் சற்று சலிப்பு தட்டுவதை தவிர்த்திருக்கலாம்.

ஜீவாவும் சூரியும் ‘மிஸ்டர், மிஸ்டர்...’ என்று அழைத்துக் கொண்டே இருப்பதில் சூடுபிடிக்கிறது அவர்களின் காமெடி கெமிஸ்ட்ரி! ஆனால், சமயங்களில் ஹாரரா? காமெடி படமா? என்ற சந்தேகம் வந்துவிடுவது நிஜம். பாடல்களில் தவறவிட்டதை பயமுறுத்தும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்கிறார் விஷால் சந்திரசேகர். காமெடி சங்கிலியில் கட்டிப் போடுகிறார்கள்!