கலைஞர் அய்யாவுக்குக் கடமைப்பட்டிருக்கோம்..!



-திலீபன் புகழ்

‘‘குரலை உயர்த்தி மண்ணோட மகிமையை, பாரம்பரியத்தை பாடும்போது மனசுக்கு ரொம்ப தைரியமா இருக்கும். எதையோ சாதிச்ச நம்பிக்கையைத் தரும்.

‘இதயம் பூப்போல மென்மையா மாறும். காதல் அப்படியே நம்மை வருடும். பாட்டைக் கேக்குறவங்களுக்கும் இது தொத்திக்கும்...’’ நெக்குருகிச் சொல்கிறார் இளையராஜா. கிராமப்புற பாடல்களை அடுத்தகட்ட தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் கலைஞன். கிராமிய இசை உலகில் புது முயற்சியாக தன் பாடல்களை காட்சிப்படுத்தி, தானே நடித்து, தன் குரல் மூலம் உயிர்கொடுத்து இணைய உலகில் கொடிகட்டிப் பறக்கிறார்.

சென்னையில் இருந்து தென்மாவட்டத்திற்குச் செல்லும்போது எல்லா பேருந்துகளும் விக்கிரவாண்டி அருகே இருக்கும் உணவகங்களில் நிற்கும். அப்போது தென்றல் போல நம் செவிகளை வருடுகின்ற ‘பூங்குயிலே பூ மயிலே...’, ‘அத்த மக உன்ன நினைச்சு...’, ‘வாடி என் கருத்தபுள்ள...’ பாடல்கள் நம் தூக்கத்தைக் கலைத்து காதல் நினைவுகளில் சஞ்சரிக்க வைக்கும்.

இவை எல்லாமே ‘இளையகானம்’ இளையராஜாவின் கிராமியப் பாடல்கள்தான். சமீபத்தில் அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இவரது கிராமியப் பாடல் பணியைக் கவுரவித்து டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இளம் வயதில் கிராமியப் பாடலுக்காக டாக்டர் பட்டம் வாங்கியிருப்பது இவர் மட்டும்தான்.

‘‘சொந்த ஊர் சிவகங் கைக்குப் பக்கத்துல ஆந்தகுடி. ரொம்ப கஷ்டப்பட்ட ஃபேமிலி. சின்ன வயசுல இருந்தே கிராமியப் பாடல்கள்னா உசுரு. பத்தாவது படிக்கிறப்ப எங்க கிராமத்துக்குக் கூத்துப்பாடல் பாட வந்த கலைஞர்கள் கிட்ட ‘என்னோட பையன் நாட்டுப்புறப் பாடலை ரொம்ப நல்லா பாடுவான்.

ஒரு வாய்ப்பு தாங்க’னு கேட்டு மேடை ஏத்திப் பாட வச்சாரு அப்பா சின்னத்தம்பி. மேல் சட்டை கூட போட்டுப் பழக்கம் இல்லாத என் அப்பாதான் எனக்கு குல சாமி...’’ சொல்லும்போதே இளையராஜாவின் கண்களில் நீர் சுரக்கிறது. ‘‘அழகப்பா கல்லூரில படிச்சிட்டு இருந்தப்ப ‘திருச்சி நாட்டுப்புற கலைக்குழு’ல சேர்ந்து பாட ஆரம்பிச்சேன். அப்பாவுக்கு இசை பற்றி எதுவும் தெரியாது.

இருந்தும் தடை எதுவும் அவர் போடலை. தொடர்ந்து கிராமியப் பாடல் கேசட்கள் பதிவு பண்ணி விற்பனை செய்யத் தொடங்கினேன். இது வரைக்கும் 100க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கேன். 3000க்கும் அதிகமான மேடைக் கச்சேரிகள் செய்திருக்கேன்...’’ மங்காத சிரிப்புடன், தான் கடந்து வந்த பாதையைப் பின்னோக்கிப் பார்க்கிறார் இளையராஜா.

‘‘2010ல, அப்போதைய முதல்வர் கலைஞர் அய்யா தொடங்கிய ‘சென்னை சங்கமத்து’ல பாடுறதுக்கு வாய்ப்புக் கிடைச்சுச்சு. சிறப்பா பாடுனதுக்குப் பரிசு கொடுத்து பாராட்டுனாங்க. இதுக்குப் பிறகுதான் பெரியளவுல கவனிக்கப்பட்டேன். நான் மட்டுமல்ல... சின்னப்பொண்ணு, அந்தோணிதாசன்னு 300க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்களுக்கு பெரிய விசிட்டிங் கார்டா ‘சென்னை சங்கமம்’ அமைஞ்சுச்சு.

அந்த வகைல என்னை மாதிரி கலைஞர்கள், கலைஞர் அய்யாவுக்குக் கடமைப்பட்டு இருக்கோம். தொடர்ந்து ‘வெளுத்துக்கட்டு’, ‘விழா’ படங்கள்ல பாட வாய்ப்பு கிடைச்சுச்சு. ‘விழா’ படத்துல இழவு வீட்ல நடக்கிற சம்பவங்களைப் பத்தி பாடி நடிச்சேன். அதன் மூலமா தென் மாவட்ட மக்கள் அவங்கள்ல ஒருத்தனா என்னை ஏத்துக்கிட்டாங்க. ஏன்னா கிராமப் பகுதியில என்னை மாதிரிதான் பெரும்பாலான இளைஞர்கள் கருப்பா இருப்பாங்க.

ஆரம்பத்துல என்னோட பாடல் வீடியோவைப் பாத்துட்டு பலபேர் கிண்டல் பண்ணி இருக்காங்க. ஆனா கிராமத்து மக்கள் ‘இது தான்பா எதார்த்தம். இதுதான் மண்ணோட கலர்’னு என்னை உற்சாகப்படுத்தினாங்க. இப்ப ‘இளையகானம்’னு இசைக்குழு வைச்சு தமிழகத்துலயும் வெளிநாடுகள்லயும் கிராமியப் பாடல்கள் கச்சேரி செய்யறேன்.

மண் சார்ந்த வாழ்வியல், நடவுப்பாட்டு, வட்டார மொழி, காதல், பழக்கவழக்கம்னு எல்லாத்தையும் பாடல்களா பதிவு பண்ணி கேசட்டா வெளியிடுறேன்...’’ என்கிற இளையராஜாவின் பாடல் வீடியோக்கள் யூ-டியூப்பில் இருபது லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

‘‘இப்பவும் விக்கிரவாண்டி பக்கம் வண்டி நிக்குறப்ப என்னை அடையாளம் கண்டுபுடிச்சி போட்டோ எடுத்துக்கறாங்க. இசைல எவ்வளவோ புதுமையான விஷயங்கள் வந்தாலும் கிராமியப் பாடல்களுக்கு தனி ரசிகர்கள் எப்பவும் இருக்காங்க. மழை கிளறி விடுகிற மண்வாசனை மாதிரி அது. மழையும் மண்ணும் இருக்கிற வரைக்கும் கிராமியப் பாடல்களும் இருக்கும்!’’ தன்னம்பிக்கையுடன் முடிக்கிறார் டாக்டர் இளையராஜா!