இப்போது ஆண் - பெண் உறவில் இருக்கும் சிக்கல்களைப் பற்றி பேசியிருக்கிறேன்...



அழுத்தம் குறையாமல் நிதானத்தையும் இழக்காமல் பேசுகிறார் இயக்குநர் ராம்

- நா. கதிர்வேலன்

சற்றே கோபமும், மனம் நிறைய கனிவும் கொண்ட இயக்குநர் ராமை சந்திப்பது எப்போதும் தனித்த, இனிமையான அனுபவம். ‘தரமணி’ திரையைத் தொடப் போகிற அவசரத்தில் இருக்கிறார். அடுத்த பாய்ச்சலுக்கு தயாரானவரிடம் நடந்த உரையாடல். ‘‘தினம் தினம் இந்த நகரம் வேறுமுகம் அணிகிறது. இப்போது ஆண் - பெண் உறவில் இருக்கிற சிக்கல்களைப் பேசுகிறேன். சமீபத்திய பெண்களை ஆண்களால் புரிந்து கொள்ள முடிகிறதா என யோசித்திருக்கிறேன்.

ராமாயண காலம் தொடங்கி ஆண்டாண்டு காலமாக பெண்களை காதல், கல்யாணம் என அரெஸ்ட் செய்து வைத்திருப்பதைப் பரிசீலனை செய்திருக்கேன். ‘காதல்னா என்ன?’ என்ற அரதப்பழசான கேள்வியைப் புதிதாக முன் வைக்கிறேன். ரயில் எனக்குப் பிடிக்கும். நிறைய விஷுவல்களுக்கு இடமளிக்கும். விடாத தனிமைக்கு அடையாளம்.

மழை, காதல், ரயில், தரமணி, ஆண், பெண், பணம், பவர், அறம், பண்பாடு, ஒழுக்கம், மதிப்பீடு, கட்டுப்பாடுகள்... இவை எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறேன். நம்பிக்கையைத் தரக்கூடிய பேரன்பை எப்படிக் கண்டு கொள்வது என்பதை காட்டித் தரக்கூடிய இடமாகவும் ‘தரமணி’ இருக்கும்...’’ அழுத்தம் குறையாமல் நிதானத்தையும் இழக்காமல் பேசுகிறார்.

ஆண்ட்ரியா அருமையான நடிப்பில் வெளிவந்திருக்காங்க...
இது ஆண்ட்ரியா, நா.முத்துக்குமாரின் வரிகள், யுவன் ஷங்கர்னு தங்கள் உன்னதத்தை கொடுத்திருக்கிற படம். சொல்லப்போனால் ‘தரமணி’ ஏஜ் ஓல்டு ஸ்டோரிதான். சங்க காலத்திலிருந்து விடாமல் காதலைப் பேசி வருகிறோம். வாழ்க்கையை ஆச்சரியமாகப் பார்க்க வைக்கிறதும் காதல்; அலுப்பா மாத்தறதும் காதல்தான். வாழ்க்கையை கொண்டாடச் சொல்வதும் காதல்தான். தொலைக்கச் சொல்வதும் காதல்தான்.

இப்ப ஆண், பெண் உறவு எமோஷனலா பிளாக்மெயில் செய்கிற காதலா மாறிக்கிட்டு இருக்கு. காமம் சார்ந்த, காதல் கலந்த இந்த உறவு என்பது நிறைய கட்டளைகள், அதிகபட்ச எதிர்பார்ப்புகள், ரொம்ப பொசஸிவ்னஸ் கூடியதாகி விட்டது. இப்ப பெண்களுக்கான வாழ்க்கைச் சுதந்திரம் மாறிப்போச்சு. இந்தப் பெண்களை எப்படி புரிந்துகொள்வது என்பதில் ஆண்களுக்குப் பிரச்னை.

காதலிக்கும் முன்பு ஒருவனாக இருப்பான். திருமணத்திற்குப் பின்பு அவனே வேறொருவன். முன்பு அன்பே என்று கொஞ்சித் தவித்தது, இப்போது கட்டளைகளாக மாறியிருக்கு. இந்த உறவுச் சிக்கல் பற்றி நான் சந்தித்த, அனுபவித்த, கேள்விப்பட்ட சம்பவங்களில் இருந்து தோன்றிய மையமே இந்த ‘தரமணி’.

புதுக் கதாநாயகன் வேறு...
வசந்த் ரவின்னு ஒரு பையன். இவரின் அப்பா எனக்கு ‘தங்க மீன்கள்’ இறுதியின்போது பழக்கமானார். இவர் தூண்டுதல், நட்பு மூலமே பல சந்திப்புக்கள் நடந்து ‘தங்க மீன்கள்’ வெளியானது. அது செஞ்சோற்றுக் கடனும் கூட. லண்டனிலும், மும்பை அனுபம்கெரின் நடிப்புப் பள்ளியிலும் பயின்றவர், வசந்த் ரவி. புது ஹீரோவுக்கான சிறு சிரமங்களை அடைந்தாலும், அவர் பெரிதாக வந்துவிடுவார். 

நீங்க திறந்த மனதோடு, தீர்மானம் இன்றி வந்தால் ‘தரமணி’யை வெகுவாக ரசிக்கலாம். வயதை கவனத்தில் வைக்காத காதலும் இதில் இருக்கு. அடிக்கடலில் நீச்சலடிக்கிற சாகசமும் உண்டு. மலையிலிருந்து குதிக்கும் பைத்தியக்காரத்தனமும் உண்டு. அரவணைப்பும் உண்டு. அரக்கத்தனமான சண்டையும் உண்டு. அறம் தாண்டும் இச்சையும், பெரும் வன்மமும் கூட உண்டு.

இன்னும் சொன்னால், நீங்கள் காதலிக்கிற, மணம் செய்யப் போகிற அல்லது திருமணம் செய்து கொண்டவரிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லும், மன்றாடச் சொல்லும், முத்தம் கொடுக்கச் சொல்லும், கட்டிப்பிடித்து காமத்தை கடந்து போகச் சொல்லும். அடங்க மறுக்கிற பெண்ணாக ஆண்ட்ரியாவும், காதலிப்பவராக வசந்த் ரவியும் அப்படியே தோன்றுகிறார்கள்.

யார் சார்பாக இருக்கப்போகிறது படம்?
இது முழுக்க ஆண் சார்பாகவோ, பெண் சார்பாகவோ இருக்காது. பார்க்கிற சமயத்தில் ஒரு பெண் பக்கத்தில இருந்து பேசுற மாதிரி தோணலாம். ஒரு படைப்பாளி நிச்சயம் ஒரு ஆணை சப்போர்ட் பண்ண முடியாது. பெண்கள் பக்கம்தான் அவன் சார்பு நிலை இருந்தாகணும். இதையெல்லாம் தாண்டி இந்த இரண்டு பேரும் எப்படிக் காதலிக்க முடியும் என்பதும் இதில் காதலைக் கண்டுபிடிப்பதுமே கதை. ‘கற்றது தமிழ்’ அஞ்சலியும் தனக்கான கடமையாக இதில் ஒரு கேரக்டர் செய்திருக்காங்க.

அவங்க என் அறிமுகத்தைத் தாண்டி பல மடங்கு தூரம் வந்துட்டாங்க. தகப்பன் - மகள் மாதிரிதான் நாங்க. அத்தகைய உறவு எங்களோடது. புரிஞ்சுக்கிட்டு கதைக்கு உள்ளே புகுந்து உட்கார அவங்களால் முடியும். இது ஆண்ட்ரியாவின் படமே, அறிமுகப்படுத்திய பாசத்திற்காக எனக்கு அஞ்சலி நடிச்சுக் கொடுத்திருக்காங்க.

நிதானமாக படங்கள் பண்றிங்க...
அப்படித்தான் அமையுது. எந்தக் கலையாக இருந்தாலும் அதில் முடிந்த அளவு உண்மை நிரம்பியிருக்கணும்னு நினைப்பேன். நம்மோட உண்மை இன்னொருத்தருக்கு பொய்யாக இருக்கலாம். இரண்டு பேரும் பொய்யாக இருந்தால் அது படைப்பாக இருக்க முடியாது.

யுவனும், நீங்களும், நா.முத்துக்குமாரும் சேர்ந்தாலே பாடல்கள் அருமையா இருக்கு...
கேட்கும்போதெல்லாம் அருமையான பாடல்களைத் தந்தவன் என் உயிர் நண்பன் நா.முத்துக்குமார். அவனிடம் வார்த்தைகளைக் கறக்க வேண்டியதில்லை. தன்னால் வந்துவிழும். அவனை இழந்த வேதனை படம் வெளிவரும்போது முட்டுகிறது. படத்திற்கு பொருத்தமாக இசை மிளிர்கிறது. தேனி ஈஸ்வர் இந்தப் படம் வெளிவந்தபிறகு உச்சபட்ச அழகியல் கொண்ட காட்சியமைப்புக்களுக்காகப் பேசப்படுவார்.

அவரின் ஒளிப்பதிவும் தனி அடையாளமாய் இருக்கிறது. 16 வயது முதல் 40 வயது வரை இருக்கும் அனைவரும் பயணப்பட்டு வரும் தினசரி வாழ்வுதான் இது. மாறி வரும் நட்பின் நிலைகளைப் பற்றிப் பேசுவதால் இது எல்லோருக்குமான படம். இதுவரை யாரும் பார்த்தறியாத படம்னு சொல்ல மாட்டேன். உண்மையோடு எளிய மக்களுக்கும் போய்ச் சேர செய்திருக்கிற முயற்சியாக ‘தரமணி’யைப் பார்க்கிறேன்.