கழட்டின பேண்ட்டை மாட்டிட்டு வாங்க!



- சூர்யபுத்திரன்

அவள் பார்த்தால் சிரித்தால் அசந்தால் எல்லாமே அழகுதான்!  காலை நேரத்து வெயிலின் வெப்பம் கொஞ்சங்கூட உள்ளே நுழையாமல் குளிரூட்டப்பட்ட அந்த அறையே சொர்க்கம் போல இருந்தது சுந்தருக்கு. மங்கலான ஒளியில் மெத்தையில் அரைகுறை ஆடையில் சோம்பல் முறிப்பதுபோல் அவள் கைகளை உயரத் தூக்கி நெளிய... அவளை விழுங்குவது போல் பார்த்த அவன் சப்த நாடியிலும் இன்ப ஊற்று! இருக்காதா பின்னே? மெத்தையில் ஒரு மோகினி... மெழுகு பொம்மை போல... அவனுக்காகவே கொண்டு வரப்பட்ட குட்டியாம். கூட்டிக் கொடுப்பவள் சொன்ன கூடுதல் தகவல் இது.

அந்தக் குட்டியின் கிளுகிளுப்பில் சொக்கி, உருகி அவன் தன் ‘பேன்ட்டை’க் கழற்றி முட்டிவரை கீழே இறக்க... கைப்பேசி அபாயகரமாய் அலறியது. டிஸ்பிளேயில் வீட்டு எண். மனைவி பத்மாதான். பதற்றத்தோடு எடுத்தான். ‘‘ஏங்க... கழட்டின ‘பேன்ட்’டை அப்படியே மாட்டிட்டு... உடனே  புறப்பட்டு வாங்க...’’  தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஏதோ சிசிடிவியில் பார்த்ததுபோல் சொல்கிறாளே! ‘பேன்ட்’டை அவிழ்த்ததை எங்கிருந்து பார்த்திருப்பாள்? ‘பிரைவேட் டிடெக்டிவ்’ வைத்திருப்பாளோ! ச்சே... ச்சே... அப்படிப்பட்டவள் இல்லை.

சாதாரண கிராமத்துப் பெண்! வெறும் ‘ஹவுஸ் வைஃப்’. மீண்டும் மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு வருவதற்குள் வெளியேறிவிட வேண்டும். பலவாறாகக் குழம்பியவனை மெத்தையில் புரண்டபடி ஆராய்ந்தாள் அந்த அப்சரஸ். அவளுக்குள் எரிச்சல். ‘‘என்ன சார்... செல்ஃபோனை ஆஃப் பண்ணிட்டு வரக்கூடாதா... யார் சார் அது? வெண்ணெய் திரண்டு வரும்போது வெடிகுண்டு வச்சாப் போல...’’ எழுந்து அமர்ந்து சிடுசிடுத்தாலும் அந்தத் தொழிலுக்கே உரிய சிரிப்பையும் சிந்தினாள்.

சுந்தர் பதிலேதும் சொல்லவில்லை. ‘பேன்ட்’டை மேலே உயர்த்தி சரக்கென்று ‘ஸிப்’பை இழுத்து வேகவேகமாய் இடுப்பு பட்டனைப் போட்டான். அவன் இப்போது புறப்பட்டுவிடுவான் என்று புரிந்து கொண்ட அந்தப் பெண், ‘‘சார்... எங்களுக்குனு ஒரு தொழில் தர்மம் இருக்கு. கை நீட்டி காசு வாங்கிட்டா... மேட்டர் முடியாம அனுப்பமாட்டோம்...’’ செல்லமாகக் குழைந்தாள்.  ‘‘உன் தொழில் தர்மத்தைத் தூக்கி உடைப்புல போடு... அவசரம் புரியாம பேசிக்கிட்டு....’’ கத்தவேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

ஆனால், அடக்கிக்கொண்டு மெல்ல வார்த்தைகளை உதிர்த்தான். ‘‘உங்க தொழில் தர்மத்துக்கு ஒண்ணும் ஆகிடாது. நான் கொடுத்ததெல்லாம் கடனா வச்சுக்கறேன். நாளைக்கு வந்து தீர்த்துக்கறேன். போதுமா?’’ அதற்குமேல் அவன் அங்கு நிற்கவில்லை. நின்றால் ஆபத்து. மீண்டும் அலைபேசி அலறினால்?! வெளியே நின்றிருந்த பைக் காத்திருந்தது. பாய்ந்து சென்று அதை உசுப்பினான். மண்டைக்குள் பல கேள்விகள். என்னவாக இருக்கும்? பத்மாவின் குரலில் ஒரு பதற்றம் இருந்ததே... அது ஏன்? தொடர்பு ஏன் துண்டிக்கப்பட்டது?

அது தற்செயலாய் நடந்ததா? வேண்டுமென்றே வெறுப்பில் துண்டித்தாளா? அதெல்லாம் இருக்கட்டும். ‘ஏங்க... கழட்டின ‘பேன்ட்’டை அப்படியே மாட்டிக்கிட்டு...’ எப்படி? வண்டியை ஓரங்கட்டி அலைபேசியை அவசர அவசரமாய் உயிர்ப்பித்தான். ‘தற்போது எல்லா இணைப்புகளும் உபயோகத்தில் உள்ளன. சிறிது நேரம் காத்...’ பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்ணின் குரல். அப்படியென்றால் ‘நெட்வொர்க்’ பிரச்னைதான். வண்டியை முடுக்கி விரட்டினான். சுந்தரின் முதுகில் இப்போது ஆறுதலாய் உரசிக் கொண்டிருந்தது அவனுடைய முதுகுப் பை மட்டுமே.

அதில் இரண்டு டென்னிஸ் மட்டைகள், நீச்சல் உடுப்புகள், ஒரு துவாலை, கைக்குட்டை... இத்யாதி. கம்பெனி விடுமுறை நாட்களில் இந்தப் பையை முதுகில் சுமந்து தவழ்ந்து வரும் குழந்தைக்கு ‘டா... டா’ காட்டிவிட்டு உலா போய்விடுவான். அவனைப் ெபாறுத்தவரை இந்த டென்னிஸ், நீச்சல் இதிலெல்லாம் கொஞ்சம்கூட ஆர்வம் இல்லை. விருப்பம் உள்ளது போல் நடிப்பான்! விடுமுறை நாட்களில் வெளியே சென்றுவர ஒரு சாக்கு தேவை. அதற்கு இந்த விளையாட்டும் ஹாபியும் போர்வைகள். அப்படி அரங்கேற்றி வந்தவன்தான் இப்போது தன்னைத்தானே எடை போட்டுப் பார்க்கிறான்.

தங்க விக்ரகம் மாதிரி மனைவி! அழகான குழந்தை! ஐடி கம்பெனியில் டீம் மேனேஜர்! கை நிறைய சம்பளம்! சமூக அந்தஸ்தோடு வாழும் தனக்குள் எப்படி இந்த சபலம்? இப்போதே பத்மாவின் முன்னே போய் நிற்க வேண்டும் என படபடத்தது அவன் மனம். பத்மா தன் புடவையை மெல்ல அவிழ்க்கிறாள். விரக்தியில் அவள் முகம் வெள்றிப்போய் இருக்கிறது. மின்விசிறியை நிறுத்துகிறாள். நாற்காலியின் மீதேறி சேலைத் தலைப்பை மின்விசிறியின் மண்டையில் கட்டி... அடுத்து கழுத்தில் ஒரு சுருக்கு...! ‘ஐயோ’வென அலறியபடி அவள் கால்கள் இரண்டையும் தூக்கிப் பிடிக்கிறான் சுந்தர்.

இறுகத் துடித்துக் கொண்டிருந்த சுருக்கில் சட்டென நெகிழ்வு. ‘‘வேண்டாம் பத்மா... நான் திருந்திட்டேன். என்னை மன்னிச்சுடு...’’ கதறியபடி மன்றாடுகிறான். ச்சே... என்ன கன்னாபின்னா கற்பனை... மனதில் விரிந்த காட்சியால் வீடு போய்ச் சேரும் வரை அவன் உடலெங்கும் நடுங்கியது. கூனிக் குறுகி வீட்டிற்குள் நுழைந்தவனிடம் பதற்றத்தோடு ஓடி வந்தாள் பத்மா. ‘‘என்னான்னே தெரியலீங்க... நம்ம பையனுக்கு திடீர்னு ஃபிட்ஸ் மாதிரி வந்திடுச்சு... பயந்துபோய் உங்களுக்கு போன் பண்ணேன். பாதியில கட் ஆயிடுச்சு... அதுக்கப்புறம் லைனே கெடைக்கல...’’ ‘‘சரி... அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். இப்ப உடனே ஆஸ்பிடல் போகலாம்...’’ பறந்தார்கள்.

குழந்தைக்கு பரிசோதனை... ஊசி... மருந்து... சிகிச்சை... எல்லாம் முடிந்து மருத்துவமனை நெடியிலிருந்து அவர்கள் வெளியே வந்து... இரவு சாப்பாட்டை ஹோட்டலில் முடித்துக் கொண்டு வீடு போய்ச் சேர வெகு நேரம் ஆகிவிட்டது. அதுவரை அவர்கள் வேறு எந்த தனிப்பட்ட விஷயத்தையும் பேசிக் கொள்ளவில்லை. இவள் நாடகமாடுகிறாளோ? புலி பதுங்குகிறதோ? குழம்பினான். படுக்கையில் களைப்பாய்ப் படுத்திருந்த பத்மாவை பயத்தோடு பார்த்தான் சுந்தர். மூச்சை இழுத்துப் பிடித்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டே விட்டான்.

‘‘பத்மா... என் செல்லமே... உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். அது என்ன... ‘கழட்டின ‘பேன்ட்’டை அப்படியே மாட்டிக்கிட்டு’னு...’’ ‘‘அதுவா...’’ என்றவள் எழுந்து உட்கார்ந்தாள். ‘‘சொல்லு பத்மா...’’ எச்சிலை விழுங்கினான். ‘‘சனிக்கிழமைன்னா டென்னிஸ் போவீங்க... ஆனா இன்னிக்கு என்ன கிழமை? ஞாயிற்றுக்கிழமை. கண்டிப்பா நீச்சல்தான். நீங்க வீட்டை விட்டுக் கிளம்பும்போது சரியா மணி பத்து. அங்க போய்ச் சேர இருபது நிமிஷம் ஆகும். உடனே நீங்க உங்க ‘பேன்ட்’டை கழட்டிட்டு நீச்சல் உடைக்கு மாறுவீங்கன்னு எனக்குள்ளே ஒரு பட்சி சொல்லுச்சு..! என் கணக்கு... கணிப்பு.. கரெக்டா இருந்ததா?’’

ஏதும் அறியா குழந்தையைப் போல் கண்களை விரித்து அவனைப் பார்க்க... அது சுந்தரை என்னவோ செய்தது! எவ்வளவு வெள்ளந்தியாக... வெகுளியாக இருக்கிறாள்! என்ன ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை! இந்த நம்பிக்கைக்கா துரோகம் செய்கிேறன்!  கேவலம் ஒரு விலை மாது கூட தொழில் தர்மம் பேசுகிறாளே! நான் இல்லற தர்மத்தைக் காற்றில் பறக்கவிடலாமா? சட்டென்று பத்மாவை இழுத்து தன் மார்பில் கிடத்தி அந்தக் குறுகுறு கண்கள் கொண்ட கலங்கமற்ற முகத்தில் முத்தமிட்டு இறுகக் கட்டிக் கொண்டான் சுந்தர்.

உடைகளில்லாமல் உலா!
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க ஆண்டுதோறும் செப்டம்பரில் சைக்கிள் பேரணி நடைபெறுவது வழக்கம். இதில் முக்கிய கண்டிஷன், நிர்வாணமாக சைக்கிள் ஓட்டவேண்டும் என்பதுதான். நோ பயம்? உடலில் பெயிண்ட் செய்துகொண்டுகூட சைக்கிள் ஓட்டி உலகை காப்பாற்றலாம்.

சிலந்தி மீல்ஸ்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டேனியல் ராபர்ட்சுக்கு ஹாலோவீன் கொண்டாட்டத்தில் வேலை தேவை. தன் திறமையை நிரூபிக்க பிளாக் விடோ எனும் சிலந்தியை அப்படியே ஹார்லிக்ஸாக சாப்பிடுகிறார். ஏன் பாஸ் இப்படி என்றால் சும்மா ஜாலிக்கு என்று சிரிக்கிறார்.

புல்அப்ஸ் புலி!
அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் வசிக்கும் ஆடம் சாண்டல், புல்அப்ஸ் எடுப்பதில் சூரர். அதில் சாதிக்க பிளான் செய்தவர், அரைமணிநேரத்தில் 30 என தொடங்கி, இன்று செய்திருப்பது அசத்தல் கின்னஸ் ரெக்கார்ட். ஒரு மணிநேரத்தில் 51 புல்அப்ஸ் எடுத்து மிரட்டியிருக்கிறார்.