நேற்று கையை இழந்தார் ... இன்று தங்க மகனாக ஜொலிக்கிறார்!



- ச.அன்பரசு

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவலின் த்ரோ விளையாட்டு வீரர் தேவேந்திர ஜாஜாரியா, இந்திய அரசின் கேல்ரத்னா எனும் உயரிய விருதைப் பெற்றுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இரண்டு தங்கங்களை வென்றதுக்குத்தான் இந்த உயரிய அங்கீகாரம். அங்கீகாரங்கள், கவுரவங்கள் எல்லாம் வலியின்றிக் கிடைத்துவிடுமா என்ன? 1980ம் ஆண்டு பிறந்த ஜாஜாரியாவுக்கு மரம் ஏறி விளையாடுவது என்றால் கொள்ளைப்பிரியம். அன்றும் அப்படி ஒரு மரத்தில் ஏறி நண்பர்களுடன் விளையாடியபோதுதான் அந்த விபரீதம் நடந்தது.

விளையாட்டு மும்முரத்தில் அருகிலிருந்த மின்கம்பியைக் கிளையென நினைத்துத் தொட, தூக்கியெறியப்பட்டு நினைவிழந்தார் ஜாஜாரியா. கண் விழித்தபோது மருத்துவமனையில் கிடந்தார். மூளையில் தீராத வலியின் குத்தல். தலை திருப்பிக் கையைப் பார்த்தபோதுதான், இடக்கை வெட்டப்பட்டிருந்தது தெரிந்தது. ‘‘இடதுகை பொசுங்கி அகற்றப்பட்ட பிறகு அனுதாபப் பார்வைகளுக்குப் பயந்து நான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தேன். அம்மா என்னைத் துணிச்சலாக வீட்டை விட்டு வெளியே கொண்டுவந்தாள்.

அவளின் ஊக்கம் இல்லை என்றால் நான் உங்கள் முன்பு இன்று நின்றிருக்க முடியாது. கேல்ரத்னா விருதை என் அம்மா ஜீவானிதேவிக்கு சமர்ப்பிக்கிறேன்...’’ என நெகிழ்கிறார் ஜாஜாரியா. கேல்ரத்னா பட்டியலில் பெயர் இடம்பெற்றவுடன் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் என அனைத்தும் நானோ நிமிடம்கூட இவரின் போனை உறங்கவிடவில்லையாம். அர்ஜூனா விருது (2004), பத்மஸ்ரீ விருது (2012) ஆகியவற்றை தன் விளையாட்டுத்துறை சாதனைகளுக்காக வென்றுள்ள இவர், 2004ம் ஆண்டு ஏதென்ஸ் போட்டியிலும், 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்று சாதித்தவர்.

‘‘என் தாய்நாடு எனக்களித்த மிகப்பெரிய கவுரவம் இது. 2004ம் ஆண்டு ஏதென்ஸில் ஈட்டி எறிதலில் சாதித்தபோது என் வயது 23. அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் என எனது நண்பர்களுக்கு கூட நம்பிக்கை இல்லை. என் உழைப்பு என்னைக் கைவிடவில்லை...’’ என தீர்க்கமான குரலில் பேசுகிறார் ஜாஜாரியா. இந்தியப் பிரதமர் மோடி ஜாஜாரியாவின் தங்கச் சாதனையை ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் புகழ்ந்து பேசியது இவரை இந்தியா முழுக்க கவனப்படுத்தியுள்ளது.

1997ம் ஆண்டு பள்ளி விளையாட்டு தினத்தில் மாணவர் களிடையே உரையாற்ற வந்த துரோணாச்சார்யா ஆர்.டி.சிங்தான், ஜாஜாரியாவின் தங்கச் சாதனைக்கு வழிகாட்டி. இவரது உடலுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளை டிஸைன் செய்த ஆர்.டி.சிங்கின் அறிவுரைகளும் பயிற்சியுமே ஜாஜாரியாவை லட்சியம் நோக்கிச் செல்ல பாதை அமைத்தன. 2002ம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற FESPIC போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஏதென்ஸில் நடந்த பாராலிம்பிக் போட்டிக்குத் தகுதியானார். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி 62.15 மீ. தூரம் ஈட்டியை எறிந்து முந்தைய ரெக்கார்டை உடைத்து நொறுக்கி, தங்க மகனானார்.

2015ம் ஆண்டு கத்தாரின் தோகாவில் நடந்த IPC தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் குவா ஷின்லியாங்கிடம் முதலிடத்தைப் பறிகொடுத்தாலும் வெள்ளிப் பதக்கத்தோடு இரண்டாமிடம் கிடைத்தது.  2016ல் பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் வீறுகொண்டெழுந்து 63.97மீ. எனும் உலக சாதனையோடு தங்கம் ஜெயித்து அவநம்பிக்கைகளைத் தூள் தூளாக்கியிருக்கிறார். ‘‘கேல்ரத்னா பரிந்துரை மகிழ்ச்சி என்றாலும் இது 12 ஆண்டுகளுக்கு முன்பாக, 2004ம் ஆண்டே கிடைத்திருக்க வேண்டும். 20 ஆண்டுகால உழைப்பு வீணாகவில்லை என்பதையே கேல்ரத்னா நிரூபிக்கிறது. என் குழுவினரின் ஒத்துழைப்பும் இதில் குறிப்பிடவேண்டியது அவசியம்.

இந்தியாவின் பாராலிம்பிக் கமிட்டிக்கு 2006ம் ஆண்டு சுனில்தத் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது அங்கீகாரம் கிடைத்தது. அப்படியும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகள் எட்டாக்கனியாக இருந்துள்ளதை ராஜஸ்தான் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. எம்.பி, எம்எல்ஏ ஆகியோரிடம் நிதி கோரியும், வங்கிகளிடம் கடன் பெற்றும் போட்டிகளில் விளையாட மாற்றுத்திறனாளி வீரர்கள் வெளிநாடு சென்று வந்த அவலங்கள் இன்று குறைந்துள்ளன. மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு நான் கூறுவதெல்லாம் ஒன்றுதான். கவனத்தோடு கனவு காணுங்கள். அர்ப்பணிப்போடு உழைத்தால் உங்களை இவ்வுலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது...’’ நம்பிக்கை மிளிரப் பேசுகிறார் தேவேந்திர ஜாஜாரியா.

பாராலிம்பிக் ஹிஸ்டரி!

பாராலிம்பிக் போட்டிகள் 1960ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் வீரர்களுக்காகத் தொடங்கப்பட்டது. 1988 தென்கொரியாவின் சியோலில் நடந்த ஒலிம்பிக்கிலிருந்து, பாராலிம்பிக்கைத் தொடர்ச்சியாக ஒலிம்பிக்கோடு இணைத்து நடத்துவது, இன்டர்நேஷனல் பாராலிம்பிக் கமிட்டி (IPC). 10 வகை உடல்குறைபாடுகளைக் கொண்டவர்கள் பாராலிம்பிக்கில் திறமை காட்டலாம். வீல்சேரில் உள்ள வீரர்களுக்காகத் தொடங்கிய பாராலிம்பிக்கை முறைப்படுத்தித் தனி விளையாட்டு விழாவாக மாற்றியவர் சர் லுட்விக் கட்மேன்.

1976 பாராலிம்பிக்கில் பல்வேறு உடல் குறைபாடுகளுள்ளவர்களுக்கும் சான்ஸ் கிடைத்தது. 2016 ரியோ பாராலிம்பிக்கில் 159 நாடுகளிலிருந்து 4,342 மாற்றுத்திறனாளி வீரர்கள் 22 விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்றனர். போட்டியில் இரானிய சைக்கிள் வீரர் பாமன் கோல்பர்நெஸாத் இறந்தது பாராலிம்பிக் வரலாற்றில் துயர நிகழ்வு. 2018ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பீயான்சாங்கில் நடைபெற உள்ளது.

பாராலிம்பிக் கமிட்டி!


இந்திய வீரர்களைத் தேர்வு செய்து பாராலிம்பிக் போட்டிக்கு அனுப்பும் பாராலிம்பிக் கமிட்டி 1992ம் ஆண்டில் உருவானது. 1994ம் ஆண்டில் பெங்களூருவில் சொசைட்டியாக பதிவு செய்யப்பட்டு, Physically Handicapped Sports Federation of India என்ற பெயரில் இவ்வமைப்பை எம்.மகாதேவா உருவாக்கினார். மாற்றுத் திறனாளிகளை உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைக்கும் அமைப்பான இதனை 2005 ஆர்டிஐ சட்டப்படி அரசு அமைப்பாக்கினர். 1968ம் ஆண்டு இஸ்‌ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் இந்தியா முதன்முறையாகப் பங்கேற்றது.