சாதிப் பின்னணி, ஜல்லிக்கட்டு தாண்டிய உணர்வு பூர்வமான படம்தான் கருப்பன்



அழுத்தமாக சொல்கிறார் இயக்குநர் பன்னீர்செல்வம்

- நா.கதிர்வேலன்

‘‘நல்ல கதைகளும், உணர்வுபூர்வமான விஷயங்களும் தொடர்ந்து ஜெயிச்சுக்கிட்டே இருக்கிறதுதான் என்னை மாதிரியானவர்களுக்கு மூலதனம். சினிமாவிற்கும், எனக்குமான காதல் கொஞ்சம் உணர்வுபூர்வமான விளையாட்டு. ‘ரேனிகுண்டா’விற்குப் பிறகு வேறுமாதிரியாக களம் இறங்கி செய்கிற கதை. உண்மை ஒண்ணுதான். அதை கோபமாகவும் சொல்லலாம், கண்ணீரோடும் சொல்லலாம். புன்னகையோடும் சொல்லலாம். நான் இதுல உணர்வ பூர்வமாக, கிராமத்தின் அசல் தன்மை சார்ந்து சொல்றேன்.



அன்புதான் ஆகப் பெரிய அடையாளம். அதை ஒரு கணவன், மனைவி, அம்மாவிற்கு இடையில் வைத்து சொல்கிறேன். நான் வாழ்க்கைக்கு வெளியே இருந்து எதையும் எடுத்துக்கிட்டு வருகிற ஆள் இல்லை. அதனால் அனைவருக்குமான படமாக ‘கருப்பன்’ இருக்கும்...’’  பக்குவத்துடன் பேசுகிறார் டைரக்டர் பன்னீர்செல்வம். ‘ரேனிகுண்டா’வில் தனித்து தெரிந்தவர்.

‘கருப்பனை’ எப்படி எதிர்பார்க்க...

‘நான் தெரிஞ்சுக்கிட்டது, புரிஞ்சுகிட்டது எல்லாம் மக்களை மட்டும்தான். நம்மகிட்ட புழங்குகிற நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், கோபதாபம், வஞ்சகம், பகை, துரோகம், காதல், அன்பு இதைத்தான் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துகிட்டேன் ‘கருப்பன்’ கதையும் இப்படித்தான் போகும். இதில் சேதுபதி மாடுபிடி வீரராக வருகிறார். சாதிப் பின்னணி, ஜல்லிக்கட்டு பற்றி மட்டுமேயான படம் இல்லை. உணர்வுகளின் பின்னலை சொல்லிப் போகிற கதை.

அருமையான மனைவி கருப்பனுக்கு வந்து அமைய, காலாகாலத்துக்கும் நினைவில் தங்க வேண்டிய ஓர் உறவை இவன் எப்படிப் பாதுகாத்தான்? அதன் அற்புதம் என்ன? அது சொல்லப் போகிற விஷயம் என்னனு பேசுற படம்.  காதலியோட காலடி மண் தொடங்கி, கண்ணிமை ரோமம் வரைக்கும் சேர்த்து வைச்சு மருகினவங்கதானே நாமெல்லாம்? அப்படி ஓர் அழகைக் கட்டின மனைவிகிட்டே பார்த்தால் எப்படியிருக்கும்! வாய் பேசாத சித்தம் கலங்கிய அம்மா, விட்டேத்தியா திரிகிற கருப்பன், வந்து சேர்கிற அருமையான மனைவி, இடைஞ்சலாக வருகிற சிலர்னு பரபரப்பா ஒரு வாழ்க்கையைச் சொல்றேன்.



உயிரையும், உணர்வையும் எரிபொருளா வைச்சு செதுக்கின படம். எதையோ தேடுறப்போ யதேச்சையா குடும்ப ஆல்பம் கண்ணுல படும் பாருங்க. ‘அட’னு எல்லாத்தையும் மறந்திட்டு, நிம்மதியா அதைப் புரட்டிப் பார்ப்போம். அப்ப கலவையாக உணர்வுகள் கலந்துகட்டி சந்தோஷமா, வருத்தமா, கோபமா, சமயங்களில் ஆனந்தக்கண்ணீர் முட்டுமே. அப்படியும் இருக்கும் இந்தப் படம்.

எப்படியிருக்கார் விஜய் சேதுபதி...

ஒரு சில ஹீரோக்கள் கருப்பன் கதையைக் கேட்கக்கூட ரெடியாக இல்லை. ஏக பிஸியாக இருந்த விஜய் சேதுபதி கேட்டுட்டு, உடனே ஓகே சொன்னார். ‘சமாளிச்சு பண்ணிடுவோம் பிரதர்’னு தட்டிக் கொடுத்தார். கதையில் வந்து உட்கார்ந்தார். திடீரென்று அர்த்தராத்திரி, விடியற்காலைன்னு பளிச்சென்னு ‘கொஞ்சம் பேசலாமா பிரதர்’னு கைப்பேசியில குறுஞ்செய்தி மின்னும். எடுத்துப் பேசினால் ‘அப்படி ஒரு வார்த்தை சேர்த்துக்கலாமா, இப்படி இந்த சீனை பண்ணவா’னு நம்ம கிட்டே ஆலோசனை மாதிரி கேட்பார்.

நிச்சயமாக நல்லாயிருக்கும். இதில் அவர் நடிக்க வந்தபோது வில்லனாக நடிக்க ஆசைப்பட்டார். அதுவும் அவ்வளவு பவர்ஃபுல். துளி தலைக்கனம் கிடையாது. எத்தனையோ ஹீரோக்கள்கிட்டே வேலை பார்த்த அனுபவம் இருக்கு. ஆனால், ஒரு படத்தில் நடிச்சால் அதில் மட்டுேம இருக்கத் தெரிகிற மனசு இவருக்குத்தான் வரும். படப்பிடிப்பு நடந்த கிராமங்களில் மக்கள் விஜய் சேதுபதியை ஆசையா கூப்பிடுவாங்க.

இவரும் சகஜமாக அவங்ககிட்ட திண்ணையில் இருந்து பேசிட்டு, அவங்க போடுற சாப்பாட்டை ருசி பார்த்திட்டு ‘ஓ.கே. பிரதர், ஷூட்டிங் ேபாயிக்கிட்டே இருக்கலாம்’னு சொல்லுவார். வெற்றி ஒண்ணும் அப்படியே சும்மா வந்து ஒருத்தரிடம் தங்கிடாது. நல்ல கல்யாண குணங்களோடு இருப்பதால் மட்டுமே விஜய்சேதுபதிக்கு எல்லாமே கூடிவருது.



தான்யா அழகா இருக்காங்க...

அருமையாகவும் நடிக்கிறாங்க. சேலை கட்டிப் பார்த்தால் என் மனதில் இருந்த பொண்ணு அப்படியே பார்க்கக் கிடைச்சது. அவங்க ஷாட் முடிஞ்சதும் எப்பவும் கேரவன் பக்கம் போனதில்லை. கூட இருந்து கவனிச்சுக்கிட்டு, அடுத்த ஷாட்டின் தொடர்ச்சியை உள் வாங்கிட்டு தொழிலை சந்தோஷமாக, நேர்த்தியாக செய்கிற பொண்ணு.

இந்த அக்கறை எப்படி கிடைச்சதுன்னு தெரியலை... மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியாக இருந்ததால் வந்திருக்கலாம் அல்லது இப்படி இருந்தால்தான் நீடித்து நிற்க முடியும்னு நினைப்பு இருந்திருக்கலாம். ஆக, அருமையாக நடிச்சிருக்கார். கதையை இன்னொரு பரிமாணத்தில் கொண்டு போகிற முக்கியமான கேரக்டர் அது.

பாடல்கள் நல்லா வந்திருக்கு. இமானின் எல்லையைத் தாண்டியும் ட்யூன் அமைஞ்சிருக்கு... எனக்கு இமான், யுகபாரதி ரொம்ப அணுக்கமாக இருக்கும். யுகபாரதி எனது மிக நெருங்கிய நண்பன். எனக்கான ஸ்பெஷலான வரிகளையும், எண்ணங்களையும் சேர்த்து வைச்சிருப்பார். அப்படித்தான் அமைஞ்சிருக்கு பாடல்கள். சத்யா கேமராமேனாக என் மனதறிந்து உழைக்கிற ஆத்மா. ‘ரேனிகுண்டா’வில் ஆரம்பித்த நட்பின் அழகு இன்னும் தொடர்கிறது.



வில்லனாக, ஹீரோ பாபி சிம்ஹாவை கொண்டு வந்திட்டீங்க!
அதிரடியான கேரக்டர். விஜய் சேதுபதிக்கு இணையாக வருகிற இடம். நின்னு பேசும். சேதுபதியே நடிக்க ஆசைப்பட்டார்னா பார்த்துக்குங்க. ஒரு ஹீரோ செய்தால் நல்லாயிருக்கும். வகையான ஆளாக வேணும். சேதுபதியே சிம்ஹாவை அழைத்தார். ‘நீ சொன்னாபோதும் நண்பா, கதையைக்கூட கேட்கல. நடிக்கிறேன்’னு வந்தார். அவங்க ரெண்டு பேருக்குள்ளே அவ்வளவு நெருங்கிய புரிதல் இருக்கு. ஒருத்தருக்கொருத்தர் கைதூக்கிவிட்டுட்டு, கைகோர்த்து நடக்கிறாங்க. ரொம்ப நல்ல விஷயம் இது. ‘

கூடவே பசுபதி அவ்வளவு நல்ல ஒரு கேரக்டரில் வருகிறார். சிங்கம்புலிக்கு இது அல்டிமேட் காமெடி. பின்னி எடுத்திருக்கார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மாதிரி ஒரு நல்ல மனிதரைப் பார்க்க முடியாது. ‘நல்லா செலவு பண்ணுங்க. காட்சிகள் பிரமாண்டமாக அமையணும்’னு சொல்லிக்கிட்டே இருப்பார். ‘சார், இதில் கதைதான் பிரமாண்டம்’னு அவரை சமாதானப்படுத்துவேன். நான் இவ்வளவு நம்பிக்கையாகப் பேசுகிற அளவுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கு ‘கருப்பன்’.